வெட்டிச் சமாதானங்கள் சட்டத்தில் வேலைக்கு ஆகுமா..?
ஒரு வழக்கில் எழுந்த பிரச்சனைக்கு தரப்பினர் சொல்லும் சமாதானம் சரியாக, சட்டப்படியாக, நம்பும்படியாக இருக்க வேண்டும். இதை விடுத்து, ஏதாவது சாமதானம் சொல்லியாக வேண்டுமே என்று கதையளந்தால் வழக்கு பொய் வழக்கு என்று அவரே ஊர்ஜிதம் செய்வது போலாகிவிடும்.
அது போல், தொடுத்த வழக்கில் எதிர்வாதம் எடுப்பதும் ஒரு கலை. அதே நேரத்தில் எப்படிப்பட்ட எதிர்வாதம் வரும் என்பதை ஊகித்து வழக்கு தொடுக்க வேண்டும். எல்லா வாதங்களுக்கும் எதிர் வாதம் உண்டு.
அடுத்து மெய்ப்பிக்கும் சுமை. அதாவது வழக்கு தாக்கல் செய்பவரே வழக்கை மெய்ப்பிக்க வேண்டும். வழக்கில் மெய்ப்பிக்கும் சுமையை, அவ்வழக்கை தொடுப்பவர் மீதே இருக்கும் படி வைத்துக் கொள்ள வேண்டும். எதிர் தரப்பினர் தன் மீது சுமதிக் கொள்ளக் கூடாது. வழக்கில் கோரிக்கை செய்யும் தரப்பினர் அதாவது வழக்கை தொடுத்த வாதி தன் பக்கம் தீர்ப்பு பிறப்பிக்க கோர வேண்டுமெனில், அவர் முதலில் நியாயமான நபராக இருக்க வேண்டும். அதாவது கறை படிந்த கரங்களுடன் நீதிமன்றத்தின் கதவுகளை தட்ட முடியாது.
சரியான திட்டம் இருந்தும், வாதுரைகளை தயாரித்து எழுதுவதில் தவறு செய்தால் வழக்கு எங்கு சென்றாலும் நிற்காது. அதே போன்று சரியான, சட்டப்படியான எதிர்வாதம் எடுத்து விட்டால், அது எல்லா சந்தர்ப்பங்களிலும் வெற்றியை தரும்.
வெட்டி வாதுரைகள், சமாதானங்கள் வழக்கு பரிசீலனையின் போது நீதிபதியால் கழித்துக் கட்டப்படும். வழக்கின் நற்கூறுகளே பேசும்.
வழக்கில் ஒரு தரப்பினர் மேலமை நீதிமன்றத்தின் ஒரு தீர்ப்பை மேற்கோளாக சுட்டிக்காட்டினால், அதற்கு மாற்றாக நிச்சயம் தீர்ப்பு இருக்கும். அதற்கு பின் வேறு எதாவது புதிய தீர்ப்பு வந்திருக்கலாம். அதை தேட வேண்டும். அல்லது அத்தீர்ப்பே தவறான கொள்கை அல்லது அனுமானத்தின் அடிப்படையில் சொல்லப்பட்ட ஒன்றாக இருக்கலாம். அதை கண்டுபிடிக்க ஆராய்ச்சி செய்ய வேண்டும். தீர்ப்பு எழுதும் நீதிபதிகளும் மனிதர்கள்தானே ! பொருள் விளக்கம் சொல்லும் பணி வழக்குரைஞரின் கையில் உள்ளது.
ஒரு வழக்கை தொடுப்பது பெரிதல்ல. எதிர் வழக்கு என்ன வரும் என்பதையும் கணிக்க வேண்டும். எழுதப்பட்டுள்ள வாதுரைகளில் இருந்தே எதிர் தரப்பினர் எதிர் வழக்கிற்கான காரணத்தை உருவாக்க முடியும். செலவு செய்ய பணமும், நேரமும் எதிர் தரப்பினருக்கு இருந்தால், நிலை சற்று கடினமாகி விடும்.
"அதைக் கட்டி மலையை இழுப்போம், வந்தால் மலை, போனால் அது.." என்ற பாணியில் எல்லாம் வழக்கு இட்டால் அவ்வாறு வழக்கு இடுபவர் தொந்தரவுகளை விலைக்கு வாங்குவது போன்று.
எனவே வெட்டி சமாதானங்கள் சட்டத்தில் வேலைக்கு ஆகாது.
Comments
1. நீதிபதியின் தீர்ப்பு சட்டம் என்ன சொல்கிறதோ அதைப்பொறுத்தே அமைதல் வேண்டும். சட்டமோ அல்லது அதன் வழிப்படி
இயற்றப்பட்ட விதிமுறைகளோ ஒன்றோடொன்று முரண்பாடாக அமையும்பொழுது, சட்டத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட
விதமாக பொருள் கூற முடியும்பொழுது தான் ,சட்ட வாசகங்கள் தெளிவாக இருக்கையில் தான், சட்டம் சொல்வதைத் தவிர்த்து வேறு தீர்ப்பு வழங்க இயலும்.
சட்டமே சரியில்லை எனச்சொன்னால், நீதிபதிக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு: ஒபீடர் டிக்டா எனச்சொல்லப்படுவதாம். சட்டம்
இக்காலத்துக்கு உகந்தது அல்ல, சட்டம் இயற்றப்படும் வேளையில் , ஒன்று இதுபோன்று ஒரு சூழ் நிலை வரும் என எதிர்பார்க்கவில்லை அல்லது சட்டமே மறுபரிசீலனைக்கு உகந்தது எனச்சொல்லிவிடலாம்.
இது போன்ற சூழ் நிலை இருக்குமானால், நீதிபதி அதை வேறு ஒரு ஃபுல் பெஞ்சுக்கு மாற்ற பரிந்துரைக்கலாம்.
2. வழக்கில் ஒரு தரப்பினர் மேலமை நீதி மன்றத்தின் ஒரு தீர்ப்பை மேற்கோளாகி சுட்டிக்காட்டுகையில், அதற்கு மாறாக தீர்ப்பு கொடுக்கும்பொழுது, அடுத்த தரப்பினர் அந்த மேலமை நீதிமன்ற தீர்ப்பை ஏன் எடுத்துக்கொள்ளக்கூடாது என தமது வாதத்தில்
சொல்லியிருந்தால், நீதிபதி அதை எடுத்துக்கொள்ளலாம்.
சுட்டிக்காட்டப்பட்டிருக்கும் தீர்ப்பு கரென்ட் நிலை அல்ல, அதற்கு ப்பின்னே மற்றுமொரு தீர்ப்பு வந்து விட்டதென்பது நீதிபதிக்குத்
தெரிந்திருந்தாலும், நீதிபதி தற்பொழுதைய தீர்ப்பை கருத்தில் கொண்டு தீர்ப்பளிக்க இயலும்.
ஆயினும், ஏன் தனது முடிவில் ஒரு தரப்பின் மேற்கோளை தன்னால் ஏற்க இயலவில்லை என்பதை தெளிவாக தனது
தீர்ப்பில் எடுத்துச் சொல்தல் அவசியம். இல்லையேல், இதுவே மேல் முறையீடுக்கான ஒரு காரண மாகவும் அமையும்.
சுப்பு தாத்தா.
பின் குறிப்பு. க்ருஸ்மஸ் வாழ்த்துக்கள். உங்களுடைய மேற்கோள் மணிராஜ் வலையிலே அற்புதமானது. அதைப்படித்து இங்கே வந்தேன்.
சட்டத்தைப்பற்றிய வலைப்பதிவுகள் மிகக்குறைவாகவே இருக்கின்றன.
உங்க வருகைக்கு நன்றி சார்..
லக்ஷ்மியம்மா.
உங்கள் பின்னூட்டத்திற்கும் நன்றி.
மதிப்பிற்குரிய தங்களின் கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த நன்றிகள் ..
என்ன மேற்கோள் காட்டினாலும் சட்டம் ஒரு இருட்டறையே !!
//என்ன மேற்கோள் காட்டினாலும் சட்டம் ஒரு இருட்டறையே !!//
தங்கள் வருகைக்கும் கருத்து பதிவிடலுக்கும் நன்றி.
ஒவ்வொரு வழக்கிலும் சட்டம் ஒரு இருட்டறை; சரியான கோணத்தில் புரிய வைக்கப்படும் வரை !