சட்டம் ஒரு இருட்டறை !

சட்டம் ஒரு இருட்டறை !


இது ஆதியில் விஜயகாந்த் நடித்து இப்போது மறுபடியும் அதே கதையோட வேறு நடிகர்களை கொண்டு வெளிவந்த படம். ரீமா சென், எஸ்.ஏ.சந்திரசேகர் தவிர மற்றவர்கள் எல்லோரும் கிட்டத்தட்ட புதுமுகங்கள்.

மையக் கதையில் ஒரு திருத்தத்தை மட்டும் செய்திருக்கிறார் இதன் இயக்குனரும், விஷுவல் கம்யூனிகேசன் பட்டதாரியுமான சினேஹா பிரிட்டோ.

சட்டம் ஒரு இருட்டறை என்பதால் படத்தையும் கொஞ்சம் இருட்டாகவே காண்பித்திருக்கிறார்கள். அதாவது வெளிச்சமாக இருக்க வேண்டிய காட்சியையும் ஏதோ புளு லென்ஸ் போட்டு மங்கலாக படம் பிடித்திருக்கிறார்கள். இதில் ஹாங்காக் நாட்டில் சுமார் 1/2 மணி நேரம் படம் படு வெட்டியாக நகர்கிறது. வசனத்திலும் காட்சி அமைப்பிலும் உயிரோட்டம் இல்லை. காமெடி டிராக் சொதப்புகிறது. பாட்டுக்கள் திணிக்கப்பட்டிருக் கின்றன. மனதில் ஏறவில்லை.

விஜயகாந்த்துக்கும், சந்திரசேகருக்கும் அன்றைய 'சட்டம் ஒரு இருட்டறை' ஒரு மிகப் பெரிய வெற்றிப்படம். ஆனால் இன்றைய படம், எப்படி ஒரு படத்தை ரீ-மேக் செய்யக் கூடாது என்பதற்கு ஒரு உதாரணம். இது யாருக்கும் வெற்றியாக அமையவில்லை என்பதுதான் நிதர்சனம்.

இனி மீண்டும் தலைப்புக்கு வருகின்றேன்.

'சட்டம் ஒரு இருட்டறை' என்பதன் பொருள் என்ன ?

அதாவது 'சட்டம் சூட்சுமமானது' என்பதுதான் இதன் பொருள். 'திருடுவது பாவம்' என்பது நன்னெறி. 'திருடினால் தண்டனை உண்டு' என்பது சட்டம். சட்டம் தனது பல்வேறு வகைமுறைகள் மூலம் மக்களின் நடத்தைகளை நெறிப்படுத்த கட்டளை இடுகிறது. அதை மீற முடியாது. சட்டம் ஒன்றை சொல்லிவிட்டால் அதற்கு என்னதான் பொருள் விளக்கம் கொடுத்து வழக்கறிஞர் வாதாடினாலும், சட்டமே நிலை பெறும். ஒரு வழக்கின் பிரச்சனை முழுக்க முழுக்க சட்டம் சார்ந்த ஒன்றாக இருக்கும் போது, அதை சங்கதி சார்ந்த பிரச்சனையாக மாற்ற முடியாது, நீதிமன்றமே நினைத்தாலும் கூட. ஆனால் ஒரு வழக்கின் பிரச்சனை, சங்கதி சார்ந்த பிரச்சனையாக இருக்கும் போது அதில் வக்கீலின் வாதம் விளக்காக அமையலாம். எனவே வழக்கில் சட்டப் பிரச்னையை கிளப்பி விட்டால், சட்டமே வெற்றி பெறும். அவ்வாறு கிளப்பியவரும் வெற்றி பெறுவார்.

சட்டத்தில் மெத்த அறிவும், துணிச்சலும் கொண்ட வழக்குரைஞர்கள் பலர் உண்டு. ஆனால் அண்மையில் நடந்த,  சட்டப் பிரச்னையை மையமாகக் கொண்ட ஒரு வழக்கில் ஒரு வழக்கறிஞர் தனது அதீத நம்பிக்கை மற்றும் தகாத துணிச்சல் காரணமாக தனது கட்சிக்காரரையே சிறைக்கு அனுப்பத் துணிந்தார். கட்சிக்காரரின் வழக்கில் வாதுரைகளை அப்படி எழுதி இருந்தார். சான்றவனங்களையும் சமர்ப்பித்து இருந்தார், தனது கட்சிக்காரர் குற்றவாளி  என்று. எனினும் அக்கட்சிக்காரரை தார்மிக அடிப்படையில் எதிர் கட்சிக்காரர்  காப்பாற்றி பிரச்னையை முடிக்க வேண்டியதாகி விட்டது. 

எனவே சட்டம் சூட்சுமமானது. அதற்கு எதிராக எல்லாம் செயல் இழந்து போகும். தரப்பினர்களின் நடத்தை, கால வரையறை, தெரிகை, ஒப்புதல், தளர்த்தீடு  உட்பட எந்த சட்டக் கோட்பாடுகளும் வேலை செய்யாது. தந்திரங்கள் எடுபடாது. நேராக செய்ய முடியாத ஒன்றை சுற்றி வளைத்து செய்ய முடியாது.  சட்டமே மேலோங்கி நிற்கும்.

இருட்டாக, சூட்சுமமாக உள்ள சட்டத்தை கருப்பு அங்கி போட்டவர்கள் நீதிபதிக்கு விளக்குகிறார்கள். அதாவது ஒரு குறிப்பிட்ட சட்டம் இயற்றப்படும் போது நாடாளுமன்றத்தின் அல்லது நேர்விற்கேர்ப்ப சட்டமன்றத்தின் உள்ளக் கிடக்கை என்னவாக இருந்தது என்பதை ஒட்டி விளக்க வேண்டும். அதை வழக்கின் சூழலுக்கு பொருத்த வேண்டும். சங்கதி சார்ந்த பிரச்சனைகளில் முடிவெடுக்க சாட்சியங்கள் போதும். 

Comments

தெளிவானது தங்கள் பார்வை - சட்டப்பார்வை ..
Thanks for immediate feed back
F.NIHAZA said…
ஆழமான கருத்து...
@ F.NIHAZA said...

//ஆழமான கருத்து...//

Thanks...