விதி வலியது !

மகாபாரதத்தில் விதுரரின் பங்கு மிக முக்கியமானது. திருதராஷ்டிரர், பாண்டு ஆகிய இவர்களுக்கு விதுரர் தம்பி முறையாவார்.

"வித்" என்ற வேர்ச் சொல்லிருந்து பெறப்பட்ட தனது பெயருக்கேற்ப விதுரர் மாபெரும் அறிஞராக விளங்கினார். குறிப்பாக அற இயலிலும், அரசியல் சாஸ்திரத்திலும் ஒப்பற்ற அறிவு பெற்றிருந்தார். அரசியிலில் ஆதாயம் தேடாமல் எளிமையாக வாழ்ந்தார். முக்காலமும் அறிந்திருந்த அவர் எக்காலத்திலும் நேர்மையை வலியுறுத்தினார்.

விதுரர் சிறந்த பண்பாளர். அனைவரிடமும் பணிவாகவும் கனிவாகவும் பழகியவர். அவர் திருதராஷ்டிரருக்கு நெருக்கமானவராகவும், ஆலோசகராகவும், வழிகாட்டியாகவும் விளங்கினார். திருதராஷ்டிரரும் ஒவ்வொரு விசயத்திலும் அவரிடம் ஆலோசனை கேட்பதுண்டு. கௌரவர்களின் தந்தையான திருதராஷ்டிரர் தனது மகன்  துரியோதனன் மீதுள்ள பாசத்தால், விதுரரின் ஆலோசனையை மீறிய போதெல்லாம் அவதிப்படதான் நேர்ந்தது. பாண்டு புத்திரர்களான பாண்டவர்களுக்கு துன்ப காலத்தில் விதுரர் பேருதவியாக இருந்தார்.

பாண்டவர்களை நேர்மையான வழியில் வெல்ல முடியாது என்று புரிந்து போனதும், துரியோதனனும் சகுனியும் குறுக்கு வழியில் வெல்ல முடிவு செய்கிறார்கள். தருமரை சூதாட அழைத்து வெல்வதுதான் அவ்வழி. இதன் தொடர்ச்சியாக, பாஞ்சாலி துகிலுரிப்பு, பாஞ்சாலி சபதம், விதுர நீதி, கண்ணன் தூது, கீதோபதேசம், பாரதப் போர், கௌரவர் வீழ்ச்சி என பல்வேறு முக்கிய நிகழ்வுகள் நமது பாரதத்தில் நிகழ்கிறது. முடிவில் பாண்டவர்களே வெல்கின்றனர்.

நல்லவர்களை சீண்டிக்கொண்டே இருப்பதுதானே தீயவர்களின் குணம். துரியோதனன் அதில் கெட்டிக்காரன். அகம்பாவம் மிக்கவன். துரோணர், கிருபர், பீஷ்மர் என எல்லாப் பெரியவர்களும் துரியோதனின் செயல்களுக்கு மறு பேச்சு பேசாமல் மௌனம் காத்தனர். பாண்டவர்கள் நிறைய அவமானப்பட நேர்ந்தது.  சூதாட்டத்தில் பாஞ்சாலியை வைத்து தோற்றதும், அவளை  பங்கப்படுத்த சபைக்கு அழைத்து வர விதுரருக்கு துரியோதனன் கட்டளை இடுகின்றான். ஆனால் விதுரர் மறுத்து அவனைக் கண்டிக்கிறார். "மாண்டு தரை மேல், மகனே, கிடப்பாய் நீ" என்று எச்சரிக்கிறார். வருங்காலம் உணர்ந்த விதுரர் கூறியபடியே, துரியோதனன் தொடை பிளக்க தரையில் மாண்டு கிடக்க நேர்ந்தது.

தான் செய்வதே சரியானது என்ற  எண்ணம்; தானே வலிமையானவன் என்ற அகம்பாவம்; தன்னை மிஞ்ச யாராலும் முடியாது என்ற அதீத துணிச்சல். தனக்கு மட்டுமே எல்லாம் தெரியும், தான் மட்டுமே புத்திசாலி என்ற கர்வம், அடைந்தே ஆக வேண்டும் என்ற ஆசை.  - இப்படிப்பட்ட எண்ணங்கள் மனதில் ஆணிவேராக இடம் பிடிக்கும் போது, விதி வலியதாகப் போகிறது என்று பொருள். அப்போது எதுவும் காதில் ஏறாது. எந்த சமாதானமும் எடுபடாது. யாருடைய அறிவுரையும் துச்சமாகும். சூழ்ச்சி வென்று விடும் என்று மனம் இறுமாப்பு கொள்ளும்.  இவை யாவும் விதி வெல்லப் போகிறது என்பதற்கு அறிகுறிகள்.

பாரதப் போர் தொடங்கி  விடலாம் என்ற நிலை. அப்போது விதுரர் சமூகத்தின் நான்கு வருணத்தவர்களின் கடமைகளை விளக்கி, சத்திரியர்கள் என்ற முறையில் பாண்டவர்களுக்கு நாடாளும் கடமையை கொடுக்கும்படி திருதரஷ்டிரரிடம் கேட்கிறார். அதற்கு திருதராஷ்டிரர், "விதுரா  ! நீ நெடுங்காலமாக தொடர்ந்து வலியுறுத்தி வருவதைப் போன்றுதான் நானும் நடவடிக்க எடுக்க விரும்புகின்றேன். ஏனெனில் நீ கூறும் அறிவுரை மிகவும் சரியானதாகும். என் மனம் எப்பொழுதுமே பாண்டவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்றுதான் விரும்பி இருக்கிறது. ஆனால் துரியோதனனுடன் தொடர்பு கொள்ளும் போது  என் மனம் மாறிப் போய் விடுகிறது" என்று பதில் தருகிறார்.

மேலும், "விதியின் வலிமை அளவிடற்கரியது. இதுவரை விதியை வென்ற மனிதர் யாரும் கிடையாது. நாம் என்னதான் முயற்சித்தாலும், எவ்வளவுதான் முயற்சித்தாலும் விதியின் விருப்படிதான் எதுவும் நடக்கும். விதியின் போக்கை மற்றோவோ, அதன் விளைவுகளை தடுக்கவோ முடியாது. விதிதான் வலிது.முயற்சி அதை வெல்லாது" என்று திருதராஷ்டிரர் கூறி முடிக்கிறார்.

நல்லது எது என்று திருதராஷ்டிரருக்கு தெரிந்திருந்தும் மகன் மீது கொண்ட அளவு கடந்த பாசம் அவரை நல்லது செய்ய விடாமல் தடுத்து விடுகிறது. திருதராஷ்டிரர் தனது இயலாமையை ஒத்துக் கொள்ளாமல் விதியின் மேல் பழியைப் போட்டு நழுவப் பார்க்கிறார் என்று தோன்றினாலும், தீயவனான, சூழ்ச்சிக்காரனான  துரியோதனன் மாள வேண்டும் என்பதும், நல்லவர்களான பாண்டவர்கள் வெற்றி பெற வேண்டும் என்பதும் விதியின் கட்டாயமாகும் என்பதால், தான் எந்த நடவடிக்கையும் மேற்கொள்வதில் பயனில்லை என்று திருதராஷ்டிரர் கருதுவதாக தோன்றுகிறது துரியோதனனை அழிவுப் பாதையை நோக்கிச் செல்வதிலிருந்து தடுத்து அவனது தலைவிதியை தன்னால் மாற்ற முடியாது என்று திருதராஷ்டிரர் உணர்கிறார் எனலாம்.

விதியை மதியால் வெல்லலாம் என்பார்கள். அவ்வாறு வெல்வதும் நம் தலைவிதியில் எழுதப்பட்டிருக்க வேண்டும். 

எனவே விதி வெல்லப் போகிறது என்பதற்கு ஒருவருக்கு மேற்சொன்ன அறிகுறிகள் எச்சரிக்கை காட்டும்.

Comments

Unknown said…
அந்த விதியின் எச்சரிக்கை நம் மதியில் தோன்றாமல் இருக்காது..ஒரு ப்ரச்சனையின் போது ! அந்த மதியையும் மயக்கி திரையிட்டு விதியே வென்று விடுகிறது ..பெரும்பாலும் !

நல்லதொரு ஆக்கம்..வாழ்த்துக்கள்!
சரியச் சொன்னீங்க சார்...
பின்னூட்டத்திற்கு நன்றி சார்..
விதியை மதியால் வெல்லலாம் என்பார்கள். அவ்வாறு வெல்வதும் நம் தலைவிதியில் எழுதப்பட்டிருக்க வேண்டும்.

உண்மைதான் ..

நதி வழிப்படும்நாவாய் போல

விதி வழிப்படுவதே வாழ்க்கை ..!

அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
நல்லவர்களை சீண்டிக்கொண்டே இருப்பதுதானே தீயவர்களின் குணம்.

, தீயவனான, சூழ்ச்சிக்காரனான துரியோதனன் மாள வேண்டும் என்பதும், நல்லவர்களான பாண்டவர்கள் வெற்றி பெற வேண்டும் என்பதும் விதியின் கட்டாயமாகும்

சீண்டிக்கொண்டே இருந்தவன் படக்கூடாத இடத்தில் அடிபட்டு

நூறு சகோதரர்களுடன் பிறந்திருந்தாலும் அத்தனை பேரையும் போரில் இழந்து ..

சீணடவும் ஆளின்றி மாய்ந்தானே ..!

விதி வலியது ..!
//விதி வழிப்படுவதே வாழ்க்கை ..!
அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..//

ஊழின் பெருவலி யாவுள? மற்றொன்று
சூழினும் தான்முந் துறும்.

ஊழைவிட மிக்க வலிமையுள்ளவை வேறு எவை உள்ளன? ஊழை விலக்கும் பொருட்டு மற்றொரு வழியை ஆராய்ந்தாலும் அங்கும் தானே முன் வந்து நிற்கும். 380

அதாவது ஊழ் வினை;விதி.

விதியை விட வலிமையுள்ளவை வேறு எவையும் இல்லை. விதியை விரட்டவும் விதி வேண்டும்.

பின்னூட்டத்திற்கு நன்றி அம்மா.
விதுர நீதி நன்கு இருக்கிறது.
இறதியில் தர்மமே வெற்றி பெரும் என்பது தானே நீதி. அதை அழகாக சொல்கிறது உங்கள் பதிவு.
தெரிந்து கொள்ள நிறைய விஷயங்கள் இருந்தன.

பகிர்ந்ததற்கு நன்றி.
ராஜி.