விமானப் பயணத்திற்குத் தேவையான சில அடிப்படை சட்ட திட்டங்கள் - சொல்கிறார் வழக்குரைஞர் ஜெயராஜன்
முன்பெல்லாம் கனவுப் பயணமாக இருந்த விமானப் பயணம் இன்று எல்லோருக்கும் சாத்தியமான, வெகு சாதாரணமான ஒன்றாகிவிட்டது. ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு விரைவாக செல்லவே மக்கள் விரும்புகின்றனர். மேலும் தொடர்வண்டியில் சற்றே வசதி கூடிய வகுப்புக்கான கட்டணத்திற்கும் விமானக் கட்டணத்திற்கும் இடையே அதிகம் வேறுபாடு இருப்பதில்லை. விமானங்களை இயக்கும் நிறுவனங்களும் இன்று பெருகிவிட்டன. இதனால் விமானப் போக்குவரத்து வணிகம் கடும் போட்டியில் நடந்து வருகின்றது என்றால் அதில் மிகையில்லை.
இதெல்லாம் ஒரு புறம் என்றால், மற்றொரு புறம் ஒரு விமானப் பயணத்தின் போது எழும் சில இடர்பாடுகளையும் அவற்றை எவ்வாறு எதிர்கொள்வது அல்லது தீர்த்துக் கொள்வது எப்படி என்பது குறித்தும் சில அடிப்படையான சட்ட திட்டங்கள் அறிந்து கொள்வது அவசியம். அவை வருமாறு:-
(1) உங்கள் விமானப் பயணம் இரத்தானால் அல்லது காலதாமதமானால் என்ன செய்வது?
இந்த இரண்டு நிகழ்வுகளிலும் நீங்கள் இழப்பீடு கோர உரிமை படைத்தவர். உங்களுக்கு நேர்ந்த இழப்பிற்கு சரியான ஈட்டை தொடர்புடைய விமான நிறுவனம் அளிக்க மறுத்தால், அதன் மீது நுகர்வோர் குறை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உரிய இழப்பீட்டை பெறலாம்.
எனினும் நீங்கள் செல்ல வேண்டிய விமானப் பயணம் இரத்தானால், உங்களை அடுத்து செல்லவிருக்கும் விமானத்தில் அனுப்பி வைப்பதை விமான நிறுவனங்கள் வாடிக்கையாக கொண்டுள்ளன. இவ்வாறு அனுப்பி வைப்பதில் உங்களுக்கு விருப்பம் இருந்தால் மட்டுமே நீங்கள் செல்லலாம்; விருப்பம் இல்லை என்றால் விமான நிறுவனம் உங்களுக்கு இழப்பீடு தர கடமைப்பட்டதாகும்.
இப்படிப்பட்ட பிரச்சனைகளை விமான நிலையம் அளவில் தீர்த்துக் கொள்ள காலவரையறை 1 மாதமாகும். இதை நழுவவிட்டால், பிறகு நுகர்வோர் குறை தீர் மன்றத்தில் வழக்கிட்டுதான் நிவாரணம் தேட வேண்டி வரும்.
ஒரு விமானம் ஓடுபாதையில் செல்லத் தயாராவது, அச்சமயத்தில் வேறு விமானம் எதையும் அப்பாதையில் செல்ல விடாமல் அல்லது வானிலிருந்து இறங்க விடாமல் கண்காணிப்பது, வானில் பறக்கும் போது இரண்டு விமானங்கள் நெருங்கி வராமல் இருப்பதை தெரிவிப்பது ஆகியன "வான்வழி போக்குவரத்து கட்டுப்பாடு" (ATC - Air Traffic Control) எனப்படுகின்றது. இப்படிப்பட்ட போக்குவரத்து கட்டுப்பாட்டு காரணங்களால் அல்லது மோசமான வானிலை காரணமாக விமானப் பயணம் இரத்தானால் அல்லது காலதாமதமானால், அதற்கு விமான நிறுவனம் இழப்பீடு வழங்க பொறுப்பாகாது.
(2) விமான நிலையத்திற்குள் நுழைய சரியான நேரம் எது?
சரியான நேரத்திற்குள் விமான நிலையத்திற்கு வராத காரணத்தால் விமானத்தை நழுவவிடுவது என்பது ஒரு மிகப்பெரிய சிரமத்தை தருவதாகும்.
எனவே இதைத் தவிர்க்க சரியான நேரத்திற்குள் விமான நிலையத்திற்குள் வந்து விட வேண்டும். எது சரியான நேரம்? வெளிநாட்டுக்கு செல்வதாக இருப்பின் விமானம் புறப்படும் நேரத்திற்கு 2 மணி நேரம் முன்னதாகவும், உள்நாட்டுக்குள் எனில் 45 நிமிடங்களுக்கு முன்னதாகவும் விமான நிலையம் வந்து சேர்ந்து விட வேண்டும். இது நீங்கள் விமான நுழைவு சீட்டு வாங்கவும், உங்கள் பயண உடைமைகளை சோதனைக்கு அனுப்பவும், நீங்கள் பாதுகாப்பு சோதனைக்கு உள்ளாகவும் போதுமான நேரத்தைத் தந்து, கடைசி நிமிட பதற்றத்தை தவிர்க்கும்.
(3) பயண உடைமைகள் தொலைந்து போனால்/சேதமானால் என்ன செய்வது?
விமானப் பயணத்தின் போது 'செக்கின் லக்கேஜ்' எனப்படும் விமானத்திற்குள் உள்ள சரக்கு வைப்பகத்திற்கு அனுப்பப்படும் பயண உடைமைகள் தொலைந்து போக நிறைய வாய்ப்புண்டு. இது பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட நாட்டிற்கு செல்லும் விமானம் இடையில் மற்றொரு நாட்டில் உள்ள விமான நிலையத்தில் இறங்கி, பின் அதில் உள்ள பயணிகள் வேறொரு விமானத்திற்கு (Hopping Flight) செல்ல நேரிடும் போது நிகழ்கிறது. இங்கு நமது உடைமைகள் நாம் வந்த விமானத்திலிருந்து இறக்கப்பட்டு, நாம் ஏறும் விமானத்திற்கு மாற்றப்படுகையில் தொலைந்துபோக அல்லது சேதமாக அதிகம் வாய்ப்புண்டு.
இப்படிப்பட்ட சூழலில் உடனடியாக செயலில் இறங்க வேண்டும். இது குறித்து விமான நிலைய மேலாளரிடம் (Airport Manager) புகார் செய்ய வேண்டும் அல்லது அல்லது சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்தின் உதவி மைய மேலாளரிடம் (Help Desk Manager) தெரிவிக்க வேண்டும். அவர்கள் தொலைந்து போன உடைமையை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் கண்டுபிடித்து தர பொறுப்பேற்றுக் கொள்வர். அந்தக் காலத்திற்குள் கண்டுபிடிக்க முடியாது போனால், அப்பயணி இழப்பீடு பெற உரிமையுடைவர் ஆவார்.
(4) உங்கள் உடைமை அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக இருப்பின் என்ன செய்வது?
பொதுவாக விமானத்திற்குள் பயணி ஒருவர் தன்னுடன் கொண்டு செல்லும் கையுடைமையின் எடை 7 கிலோவுக்கு மிகக் கூடாது; அதுபோல் சரக்கு வைப்பகத்திற்கு அனுப்பப்படும் உடைமையின் எடை 20 கிலோவுக்கு மிகக் கூடாது. எனினும் இந்த பயண உடைமைச்சலுகை மாறுபாட்டிற்குரியது.
இவ்வாறு அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருக்கும் எடையில் கிலோவுக்கு இவ்வளவு என்ற வீதத்தில் சரக்கு கட்டணத்தை பயணி செலுத்த வேண்டும். எடுத்துக்காட்டாக இண்டிகோ விமான நிறுவனத்தைப் பொறுத்தவரை கூடுதலாக இருக்கும் 5 கிலோ எடைக்கு ரூ. 1900/- செலுத்த வேண்டும். இதே ஏர் இந்தியா விமானத்தைப் பொறுத்தவரை கூடுதலான கிலோ ஒன்றுக்கு ரூ. 500 செலுத்த வேண்டும்.
(5) மாற்றுத்திறனாளிகளுக்கு கிடைக்கும் வசதிகள் :
நடக்க முடியாத மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகளை விமான நிறுவனங்கள் ஏற்பாடு செய்து தருகின்றன. இதற்கான விண்ணப்பத்தை விமானம் புறப்படுவதற்கு 2 தினங்கள் முன்னதாக செய்து விட வேண்டும். இதற்கு கட்டணம் ஏதுமில்லை. இவ்வாறு தெரிவித்து விட்டால், எந்த நாட்டில்/ஊரில் இறங்க உள்ளோமோ அங்குள்ள விமான நிலையத்திலும் சக்கர நாற்காலி சேவை விமான வாயிற் கதவருகே தயாராக இருக்கும். கால்வலி, மூட்டு வலி உள்ள மூத்த குடிமக்களும் இந்த சேவையைக் கோரலாம்.
அண்மையில் ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்ட அறிவிக்கையில், சக்கர நாற்காலி சேவை வேண்டுவோர், அதை பயண சீட்டுக்கான விண்ணப்பத்திலேயே குறித்துக் கொடுத்துவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இன்னும் இது போன்ற பல தகவல்கள் இருப்பினும், மேற்சொன்னவை அடிப்படையானதாகும்.
www.shripathirajanpublishers.com
P/c : Haokan
Comments