ஜப்பானுக்கு செல்லப் போகிறீர்களா? அப்போ இதைக் கொஞ்சம் படிங்க...!

www.shripathirajanpublishers.com - வழக்குரைஞர் பி.ஆர்.ஜெயராஜன் எழுதிய நூல்கள் கிடைக்கும் தளம்.

ஜப்பானுக்கு சுற்றுலா செல்லப் போகிறீர்களா? இந்த விடயங்களை சற்றே படித்தறிதல் அவசியம்.


  • உணவகத்தில் சாப்பிட்ட பிறகு 'டிப்ஸ்' எனப்படும் "சேவையூட்டு" தருவது நமது வாடிக்கை. ஆனால் ஜப்பானில் இவ்வாறு டிப்ஸ் தந்தால் அது உணவு பரிமாறியவரை அவமதிக்கும் செயலாகும். எனவே டிப்ஸ் தராதீர்கள். அதற்கு பதிலாக "Arigatou Gozaimasu" (Thank you - நன்றி) அல்லது Gochisousama Deshita (Thank you for the meal - 'சாப்பாடு/டிபன் ரொம்ப சூபர்பா' என்பதைப் போல) என்று சொல்வது நலம்.
  •  அதே நேரம் நீங்கள் ஒரு வழிகாட்டியை ஏற்பாடு செய்துகொண்டு சுற்றுலா (Guided Tour) சென்றால் அந்த வழிகாட்டிக்கு டிப்ஸ் தரலாம். அதை அவர்கள் பெரும் மரியாதையாக நினைப்பார்கள். தினச் சுற்றுலாவின் மதிப்பில் 10 சதவீதம் வரை டிப்ஸ் தரலாம். எனினும் இத்தொகையை அப்படியே கொடுக்கக் கூடாது. அதனை Shugi Bukuro (Money envelop - பணம் வைக்கும் உறை) உறையில் வைத்துக் கொடுக்க வேண்டும். அதுவே ஜப்பானிய மாண்பாகும்.
  • அடுத்து "Oshiburi" எனப்படும் "சூடான கைத்துண்டு" அல்லது "ஈரக் கைத்துண்டு" (Hot towel or moist or wet towel - காலநிலைக்கு தக்கவாறு) தொடர்பான ஜப்பான் பரம்பரியம் பற்றியது. இதன்படி உணவகம் அல்லது மதுபானக அறையில் நுழையும் வாடிக்கையாளர்களுக்கு இந்த துண்டுகள் தரப்படும். இது ஜப்பான் விருந்தோம்பல் மரபுகளில் மிக முக்கியமானதாகும். உணவை உட்கொள்ளும் முன் அல்லது மதுபானம் அருந்தும் முன், வாடிக்கையாளர் இந்த துண்டால் தனது கைகளை நன்கு துடைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு கைகளை துடைத்துக் கொள்வது தவிர வேறு எதற்கும் இந்த துண்டை பயன்படுத்தக் கூடாது என்பது அதைவிட முக்கிய விதியாகும்.

  • சாப்பிடுவதற்காக மேஜையை (டேபிள்) முன்பதிவு செய்த பிறகு அதை இரத்து செய்வது என்பது உணவக நாகரிகத்திற்கு எதிரானதாகும்.

  • சாப்பிட்ட பிறகு அதற்கான கட்டணத்தை கையில் தரக்கூடாது. ரொக்கமோ அல்லது வங்கி அட்டையோ (கிரெடிட் அல்லது டெபிட் கார்ட்) அதை தட்டில் வைத்துதான் கொடுக்க வேண்டும்.
சாப்பிடுவதற்கு இவ்வளவு சம்பிரதாயங்களா என்று மலைக்க வேண்டாம். உணவகம் மற்றும் உணவு தொடர்பான மரபுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் நாடு ஜப்பான் என்பதை நினைவில் கொள்வது நலம்.

-பி.ஆர்.ஜெயராஜன்.
www.shripathirajanpublishers.com

P/c: Gettyimages and Wikepedia

Comments