'நவீன சட்டக்கல்வியின் தந்தை' பேராசிரியர் என்.ஆர்.மாதவ மேனன் காலமானார்


இந்திய நாட்டின் தலைசிறந்த சட்டக் கல்வியாளரும்,  'நவீன சட்டக் கல்வியின் தந்தை' என்று போற்றப்படுபவருமான பேராசிரியர் என்.ஆர்.மாதவ மேனன் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் செவ்வாய் கிழமை இரவு காலமானார். இவருக்கு வயது 84. 

நமது நாட்டில் முதன்முதலாக தேசிய சட்டப்பள்ளியை பெங்களூருவில் நிறுவி, தொடர்ந்து நீதிமுறை அறிவியியல்சார் தேசிய பல்கலைக்கழகத்தை கொல்கத்தாவிலும், தேசிய நீதிமுறைக் கழகத்தை போபாலிலும் தோற்றுவித்த பெருமை பெற்றவர் பேராசிரியர் மேனன். இந்த கல்வி நிலையங்களுக்கு இவரே முதல் தலைவராகவும் பதவி வகித்தார்.

திரு. மேனனின் மறைவுக்கு இந்திய குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,  'பெங்களூருவில் தேசிய சட்டப்பள்ளியுடன் தொடங்கி இந்தியாவில் நவீன சட்டக் கல்வி மலர முன்னோடியாக நின்று அரும் பாடுபட்ட ஓர் சிறந்த மனிதர் என்றும், பெரும் கல்வியாளர் என்றும்' மேனன் அவர்களுக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.


தனது பணிக்காலத்தில் 12 புத்தகங்களை எழுதியுள்ள பேராசிரியர் மேனன், தான் முதன்முதலாக பெங்களூருவில் 1986 ஆம் ஆண்டில் நிறுவிய இந்திய தேசிய சட்டப்பள்ளியின் முதல் தலைவராக 12 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றினார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 

நாட்டின் முதல் தேசிய சட்டப்பள்ளியை தொடங்கியதோடு மட்டுமல்லாமல், இன்றைக்கு மிகப் பிரபலமாக நடைமுறையில்  இருக்கும் ஒருங்கிணைந்த ஐந்து ஆண்டு சட்டக்கல்வியை முதன்முதலாக அறிமுகம் செய்து வைத்த பெருமையையும் பெற்றவர் திரு மேனன்.  இதன் வாயிலாக பள்ளி மாணவர்கள் +2 படித்து முடித்த உடனே மூன்றாண்டு பட்டப்படிப்பு ஏதும் படிக்காமல் நேரடியாக 5 ஆண்டு சட்டக்கல்வியில் சேரும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது. 

திருவனந்தபுரத்தில் 1935-ஆம் ஆண்டு பிறந்த இவர், தனது சட்டப் படிப்பை திருவனந்தபுரம் மற்றும் எர்ணாகுளத்தில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் படித்து முடித்தார். முன்னதாக ஆலப்புழாவில் உள்ள SD கல்லூரியில் விலங்கியல் பாடப்பிரிவில் தனது மூன்றாண்டு பட்டப்படிப்பை  படித்து பட்டம் பெற்றார். 

சட்டப்படிப்புக்குப் பிறகு, இவர் கேரளா உயர் நீதிமன்றத்தில் ஓர் வழக்குரைஞராக தனது சட்டத் தொழிலை 1956-இல் தொடங்கினார். தொடர்ந்து 1960-ஆம் ஆண்டில் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர் பணி கிடைக்கவே, இவர் தில்லி சென்றார். அங்கு தனது சட்ட மேற்படிப்பை (எல்எல்எம்) முடித்து, முனைவர் பட்டம் பெற்றார். பிறகு 1965-ஆம் ஆண்டில் தில்லி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும், வளாக சட்ட மையத்தின் தலைவராகவும் பணியாற்றினார். 

இதையடுத்து 1986-ஆம் ஆண்டில் பெங்களூருவில் இந்திய தேசிய சட்டப் பள்ளி பல்கலைக்கழகத்தை கட்டமைக்கவும், 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டக் கல்விக்கு அடித்தளமிட்டு தொடங்கிடவும் இவருக்கு இந்திய வழக்குரைஞர் பெருமன்றம்  அழைப்பு விடுத்தது. எனவே இவர் தில்லியில் இருந்து பெங்களூருவுக்கு இடம் பெயர்ந்தார். 

பணி நிறைவுக்குப் பிறகு தனது பிறந்த ஊரான திருவனந்தபுரத்திற்கே வந்து விட்ட இவர், இந்திய வழக்குரைஞர் பெரு மன்றத்தின் தலைவராகவும் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏழை மக்களுக்கு இலவச சட்ட உதவி அளிப்பதற்காக இன்றைக்கு இருக்கும் சட்ட உதவி மையங்கள் அன்றைக்கே தொடங்கப்படுவதற்கும் இவர்தான் அடிப்படைக் காரணமாக விளங்கியவர் என்றால் அதில் மிகை இல்லை. 

இவருக்கு மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.

Comments