தேசிய சட்ட பல்கலைக்கழகத்தின் இயக்குனராக பேராசிரியர் சஞ்சீவி சாந்தகுமார் நியமனம்



காந்தி நகர், குஜராத் தேசிய சட்ட பல்கலைக்கழகத்தின் (GNLU) புதிய இயக்குனராக ஹரியானாவின் ஜி.டி.கோயங்கா பல்கலைக்கழக இணை துணை வேந்தர் பேராசிரியர் சஞ்சீவி சாந்தகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  

திரு எஸ். சாந்தகுமார் பல்வேறு சட்டக் கல்லூரிகள் மற்றும் சட்டப் பள்ளிகளில்  பேராசிரியராக பணியாற்றியதோடு மட்டுமல்லாமல், நிர்வாகப் பணிகளையும் திறம்பட ஆற்றி நிரம்ப அனுபவம் பெற்றவர்.

ஒரு பேராசிரியராக :

இவர் 1991-ம் ஆண்டில் சென்னை பல்கலைக்கழகத்தில் நுகர்வோர் தொடர்பான சட்ட திட்டங்களில் ஆய்வு மேற்கொள்ளும் இளநிலை ஆராய்ச்சியாளராக பணியாற்றிக்கொண்டு, 'ஒப்புமை அரசியலமைப்பு சட்டத்தை' சட்ட மாணவர்களுக்கு போதித்து வந்தார்.

பின்னிட்டு 1996-2001 ஆண்டுகளுக்கு இடையில் இவர் சென்னை முனைவர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக  சட்டவியல், அரசியலமைப்பு சட்டம், நாட்டிடை சட்டம் ஆகியவற்றில் பாடம் நடத்தி வந்தார். அத்துடன் மாதிரி நீதிமன்ற குழுவையும் மேலாண்மை செய்து வந்தார். மேலும், அந்த நேரத்தில் பெங்களூரு, இந்திய  தேசிய சட்டப் பள்ளி பல்கலைக்கழகம் மற்றும் உலக வங்கியின் ஆதரவுடன் தொடங்கப்பட்ட "சுற்றுச் சூழல் சட்டத்  திறன் உருவாக்கும் திட்டத்தை" ஒருங்கிணைத்து வந்தார். 

தொடர்ந்து 2001லிருந்து 2004-ஆம் ஆண்டு வரை மதுரை, அரசு சட்டக் கல்லூரியில் சுற்றுச் சூழல் சட்டம், நாட்டிடை சட்டம் ஆகியவற்றில்  சட்ட மாணவர்களுக்கு பாடம் நடத்தினார்.

இதையடுத்து இவர்  ராய்ப்பூரில் அமைந்துள்ள இதயத்துல்லா தேசிய சட்ட பல்கலைக்கழத்தில் 2004 முதல் 2010-ம் ஆண்டு வரை இணை பேராசிரியராகவும் தேர்வுக் கட்டுப்பாட்டாளராகவும் பணியாற்றினார். 

ஒரு நிருவாகியாக :

சட்டீஸ்கர் MATS பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமான ராய்ப்பூர் MATS சட்டப்பள்ளியின் இயக்குனராகவும், பேராசிரியராகவும் திரு. சாந்தகுமார் 2010-ம் ஆண்டில் நியமனம் செய்யப்பட்டார். ஒரு சட்டப் பள்ளியை நிறுவி அதனை நடத்தும் முதல் வாய்ப்பு  MATS சட்டப்பள்ளியின் வாயிலாக பேராசிரியர் சாந்தகுமாருக்கு இங்கு கிடைக்கின்றது. 


இதன் பின்னர் இவர் ஹரியானாவிற்கு இடம் பெயர்ந்தார். அங்கு 2014-ம் ஆண்டு வரை குருகிராமில் உள்ள ITM சட்டப் பள்ளியின்  இயக்குனராகவும், இது பின்னிட்டு  North Cap பல்கலைக்கழகம் என்று பெயர் மாறிய பிறகு இதில் இணை பேராசிரியராகவும் பணியாற்றினார். 

தொடர்ந்து 2014 முதல் 2016-ஆம் ஆண்டு வரை குருகிராமில் உள்ள SGT பல்கலைக்கழகத்தின் சட்டப்புலத் தலைவராக பணியாற்றினார்.

2016, ஏப்ரல் முதல் GD கோயங்கா பல்கலைக்கழகத்தின் கல்விப்புலத் தலைவராகவும், 2018-ஆம் ஆண்டு முதல் அதன் இணை துணை வேந்தராகவும் பணியாற்றி வந்து தற்போது குஜராத் தேசிய சட்ட பல்கலைக்கழகத்தின் இயக்குனராக இவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


 எழுதியுள்ள நூல்களும் ஆய்வுக் கட்டுரைகளும்  :

சட்டக் கல்வியை போதிக்கும் பணிக்கு வருவதற்கு முன்னதாக,  பேராசிரியர் சாந்த குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏழாண்டுகள் வழக்குரைஞராக தொழிலாற்றியவர். 

சட்டத்தில் இவர் ஆர்வம் காட்டிய பாடங்கள் சுற்றுச்சூழல் சட்டம், மனித உரிமைகள் சட்டம், நாட்டிடை சட்டம் மற்றும் அரசியலமைப்பு சட்டம். சுற்றுச் சூழல் சட்டத்தில் ஒரு நூலும், மனித உரிமைகள் சட்டத்தில் இரண்டு நூல்களையும் இவர் எழுதியுள்ளார் இவை தவிர இந்திய மற்றும் அயல்நாட்டு ஏடுகள் பலவற்றில் இவரது ஆய்வுக் கட்டுரைகள் ஏராளமாக வெளிவந்துள்ளன. அதுபோல் தேச மற்றும் சர்வதேச கருத்தரங்கம் பலவற்றில் இவர் முக்கிய உரை ஆற்றியுள்ளார். 

ஐக்கிய அமெரிக்க நாடுகளில் உள்ள சர்வதேச சட்டப் பள்ளிகள் சங்கத்தின் உறுப்பினராகவும் திறம்பட செயல்பட்டு வரும் இவருக்கு, அண்மையில் பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள ஆசிய மேம்பட்டு வங்கி  "சுற்றுச் சூழல் சட்டதில் சிறந்து  விளங்குபவர்களை மேம்படுத்தும் விருது" வழங்கி பெருமை சேர்த்துள்ளது. 


குஜராத் தேசிய சட்ட பல்கலைக்கழகத்தின் (GNLU) இயக்குனராக ஜூலை மாதம் 1-ஆம் தேதி பதவி ஏற்க உள்ள பேராசிரியர் சாந்த குமார், இதில் 5 ஆண்டுகள் பதவி வகிப்பார்.

CLAT  நுழைவுத் தேர்வில் வெற்றி பெரும் மாணவர்கள் தேர்ந்தெடுக்கும் தேசிய  சட்டப் பல்கலைக்கழக தர வரிசையில் GNLU தற்போது 6-ஆம் இடத்தில உள்ளது. 

ஒரு தமிழரான பேராசிரியர் சஞ்சீவி சாந்த குமார், தேசிய சட்டப் பல்கலைக் கழகத்தின் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டிருப்பது தமிழகத்திற்கு பெருமை தரக்கூடியது.

Comments