கருத்தடை அறுவை செய்த பிறகும் குழந்தை பிறந்தால் மருத்துவர்கள் இழப்பீடு தர வேண்டும் - மதுரை அமர்வாயம் தீர்ப்பு



"கருத்தடை அறுவைக்கு பின் மீண்டும் குழந்தை பிறந்தால் அது மருத்துவர்களின் மருத்துவ கவனக்குறைவாகும்" என்று மேல்முறையீடு ஒன்றில் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வாயம் தீர்ப்புரைத்துள்ளது.

கருத்தடை அறுவைக்குப் பிறகும் குழந்தை பிறந்தது !

ஒரு பெண்ணுக்கு 'டயுபக்டமி' எனும் கருத்தடை அறுவை செய்த பிறகு இரட்டைக் குழந்தைகள் பிறந்தததற்காக சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் இழப்பீடு தரவேண்டும் என்று கீழமை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து அந்த மருத்துவர்களும் மருத்துவ அதிகாரஅமைப்புகளும் செய்த மேல்முறையீட்டை தள்ளுபடி செய்து ஆணையிடுகையில் மாண்பமை நீதியரசர் எம்.எம்.சுந்தரேஷ்  மேற்கண்டவாறு கருத்துரைத்துள்ளார். எனினும் இவ்வழக்கில் கருத்தடை அறுவை செய்யும் நடைமுறை 100 சதம் வெற்றி தருவதில்லை என்று வல்லுனர்கள் கூறியுள்ளனர். 

வழக்கின் சங்கதிகள் :

இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்மணியின் பெயர் சரஸ்வதி.  இவர் 1985-ஆம் ஆண்டில் ஆர்.முருகன் என்பவரை மணந்து கொண்டார். இவர்களுக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் பிறந்துள்ளன.  இதற்குப் பிறகு இவர் கருத்தடை அறுவை செய்து கொள்வதற்காக கும்பகோணத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்ந்தார். அங்கு 1989-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5-ஆம் தேதியில் சரஸ்வதிக்கு கருத்தடை அறுவை செய்யப்பட்டது. 

இந்நிலையில் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் கழித்து, சரஸ்வதி மீண்டும் கர்ப்பம் தரித்துள்ளதாக உணர்ந்தார். அந்த நேரத்தில் கரு நன்கு வளர்ந்து விட்டிருந்த படியால் அதைக் கலைக்க எந்த நடவடிக்கையும் எடுக்க இயலவில்லை. தொடர்ந்து 1992, செப்டெம்பர் 15-ஆம் தேதியில் கும்பகோணத்தில் உள்ள செயின்ட் அன்னீஸ் மருத்துவமனையில் சரஸ்வதிக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன.

கருத்தடை அறுவை செய்து கொண்ட பிறகும் குழந்தை அதுவும் இரட்டைக் குழந்தைகள் பிறந்தது, தனக்கு அறுவை செய்த மருத்துவர்களின் கவனக்குறைவை காட்டுகின்றது என்றும், எனவே தனக்கு அவர்கள் இழப்பீடாக ரூபாய் 3 இலட்சம் தர ஆணையிட வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவரது கணவர் முருகன் ஒரு தினக் கூலி. 

கும்பகோணம் முதன்மை சார்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு :

வழக்கின் சங்கதிகளை சாட்சியங்களுடன் ஆராய்ந்த கும்பகோணம் முதன்மை சார்பு நீதிமன்றம், சரஸ்வதிக்கு இழப்பீடாக ரூபாய் 1,25,000௦௦௦/-மும், அதற்கு வழக்கு தாக்கல் தேதியில் இருந்து தீர்ப்பாணை பிறப்பிக்கப்பட்ட தேதி வரை 12 சதவீத வட்டியும், அதன் பின் தொகை வசூலாகும் வரை 6 சதவீத வட்டியும், செலவுத் தொகையுடன் பிரதிவாதிகள் வழங்க வேண்டும் என்று தீர்ப்புரைத்தது. 

மருத்துவர்களின் மேல்முறையீடு தள்ளுபடி :

இந்த தீர்ப்பை எதிர்த்து தஞ்சாவூர் மாவட்ட நீதிபதி நீதிமன்றத்தில் மருத்துவர்கள் மேல்முறையீடு செய்தனர். ஆனால் அது தள்ளுபடி செய்யப்பட்டு, கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது. 

மதுரை அமர்வாயத்தில் மேல்முறையீடு :

கீழமை விசாரணை நீதிமன்றம் வழங்கிய  இத்தீர்ப்பை எதிர்த்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர், அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர், கும்பகோணம் நலப் பணிகள் இணை இயக்குனர் உள்ளிட்ட மருத்துவ அதிகாரஅமைப்புகள் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வயத்தில் 2006-ஆம் ஆண்டில் தற்போதைய  மேல்முறையீட்டை செய்தனர். 

முன்னதாக இவர்கள் தாக்கல் செய்திருந்த எதிர் வழக்குரையில் சரஸ்வதிக்கு குடும்பக் கட்டுப்பாடு அறுவை வெற்றிகரமாக செய்யப்பட்டது என்றும், ஆனால் இந்த அறுவை நடைமுறையில் 2 சதவீதம் தோல்விக்கு வாய்ப்பு உண்டு என்றும், அப்பெண்மணிக்கு கருத்தடை அறுவை செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் கழிந்த பிறகே அவர் மீண்டும் கருவுற்றுள்ளார், இது அந்த அறுவை வெற்றி பெற்றுள்ளதையே காட்டுகிறது என்றும், எனவே அவருக்கு அறுவை செய்த அரசு மருத்துவமனை மருத்துவர்களின் தரப்பில் எந்த கவனக்குறைவும் இல்லை என்றும் வாதுரைத்திருந்தனர்.  

Comments

வழக்கு முடிந்ததா,நிலுவையில் உள்ளதா
என்ற விபரம் தெரியவிலலையே சார்?
Lower Court decree confirmed and the appeal by the doctors and medical authorities was dismissed by Madurai Bench. Thanks for comments..