பிசியோதெரபி பட்டதாரிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருகிறது ! மாநில பிசியோதெரபி கவுன்சில் அமைக்கப்பட வேண்டும் !!


பக்கவாதம், முகவாதம், தண்டுவடம் போன்ற நரம்பியல் நோய்கள், மூட்டுவலி, கழுத்து வலி, எலும்பு முறிவு, தசைப் பிடிப்பு போன்ற எலும்பியல் நோய்கள் உட்பட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதில் உடலியக்க மருத்துவமுறை  (பிசியோதெரபி) முக்கிய பங்கு வகிக்கிறது.

மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, எலும்பு முறிவு அறுவை சிகிச்சை உள்ளிட்ட சிகிச்சைகளை மேற்கொள்வோர் மற்றும் குறை பிரசவ குழந்தைகளின் மறுவாழ்வில், "பிசியோதெரபிஸ்ட்'களின் பங்கு குறிப்பிடத்தக்கது. 

1988ம் ஆண்டில், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக்கழகம் பிசியோதெரபிஸ்ட் நான்கரை ஆண்டு படிப்பை அறிமுகப்படுத்தியது. தமிழகத்தில் ஆண்டுதோறும்,1,000 பேர் பிசியோதெரபிஸ்ட் பட்டம் பெறுகின்றனர். இதுவரை, 20 ஆயிரம் பேர் பட்டம் பெற்றுள்ளனர்.  தமிழகத்தில் உள்ள 35  பிசியோதெரபி பட்டப்படிப்பு அளிக்கும் கல்லூரிகளில் இரண்டு மட்டுமே அரசு கல்லூரிகள். இவற்றிலும் போதுமான பேராசிரியர்கள் இல்லை.  கிராமப்புறங்களில் புதிய பிசியோதெரபி கல்லூரிகள், மாநில பிசியோதெரபி கவுன்சில், அரசு மருத்துவமனைகளில் பிசியோதெரபிஸ்டுகளுக்கு புதிய பணி நியமனங்கள் போன்ற தமிழக அரசின் அறிவிப்புகள் ஆண்டுக்கணக்கில் செயல்படுத்தப்படவில்லை. குறிப்பாக அரசு மருத்துவமனைகளில், 200க்கும் குறைவான பணியிடங்களே உள்ளன. பெரிய மருத்துவமனைகளில் மட்டுமே பிசியோதெரபிஸ்டுகள் நியமிக்கப் படுகின்றனர். தாலுகா மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிசியோதெரபிஸ்டுகள் இல்லாததால், கிராம மக்களுக்கு பிசியோதெரபி சிகிச்சை கிடைப்பதில்லை. இதனால்   பிசியோதெரபி பட்டதாரிகளின் எதிர்காலம் கேள்விக் குறியாகி வருகிறது. 

தமிழகத்தில் பிசியோதெரபிஸ்டுகளின் சராசரி மாத வருமானம், 5,200 ரூபாய் முதல் 15,200 ரூபாய் வரையே உள்ளது. அரசு வேலை வாய்ப்பு இல்லாததாலும், தனியார் மருத்துவமனைகளில் குறைவான வருமானம் கிடைப்பதாலும் வேறு வேலைகளைப் பார்க்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பிசியோதெரபி படிப்புக்கு போதிய வரவேற்பில்லாததால் பல பிசியோதெரபி கல்லூரிகள் தற்போது மூடப்பட்டு வருகின்றன. இதனால், பிசியோதெரபி சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தும், அவர்களுக்கு சிகிச்சை அளிக்க திறமையான பிசியோதெரபிஸ்டுகள் இல்லாத நிலை உருவாகும்.

இதற்கிடையில், பிசியோதெரபிஸ்டுகளின் அங்கீகாரத்தை முறைப்படுத்த, பிசியோதெரபி கவுன்சில் (மாநில உடலியக்க மருத்துவர் பெருமன்றம்) அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.  சில தனியார் மருத்துவமனைகளில் நர்சுகள் மற்றும் முறையாக பிசியோதெரபி பட்டம் பெறாதவர்களை கொண்டு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது நோயாளிகளின் உயிருக்கே ஆபத்தாகிவிடும். இதை கட்டுப்படுத்தவும் போலி பிசியோதெரபிஸ்டுகளை தடுக்கவும் கவுன்சில் விரைவில் அமைக்கப்பட வேண்டியது அவசியமாக உள்ளது.

மாநில பிசியோதெரபி கவுன்சில் அமைப்பதற்கான அரசாணை, 2008ம் ஆண்டு, அக்டோபர் 18-இல் வெளியானது. ஆனால் அக்கவுன்சில் அமைக்கப்படவில்லை. இதனால், பணி பாதுகாப்பின்மை, பணிக்கு சட்டரீதியான அங்கீகாரம் கிடைக்காதது உள்ளிட்ட பிரச்னைகளுக்கு பிசியோதெரபிஸ்டுகள் ஆளாகி வருகின்றனர். "பிசியோதெரபி'யில் முதுநிலை பட்டப்படிப்பு (எம்.பி.டி.,) முடித்தவர்கள் தான், பிசியோதெரபி கல்லூரிகளில் முதல்வராக இருக்க வேண்டும். ஆனால் அரசு பிசியோதெரபி கல்லூரிகளில், இந்நடைமுறை பின்பற்றப்படவில்லை. அரசு கல்லூரிகளில் எம்.பி.டி., பட்டப்படிப்பும் இதுவரை துவங்கவில்லை. 

உள்நாட்டில் பிசியோதெரபிஸ்டுகளுக்கு வேலை வாய்ப்பு குறைவாக உள்ளது. வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு பெற வேண்டுமானால், மாநில பிசியோதெரபி கவுன்சிலின் அங்கீகாரம் அவசியம். ஆனால் இப்போது கவுன்சில் இல்லாததால் வெளிநாடுகளில் வேலை பெறுவதில் சிரமங்கள் ஏற்படுகின்றன. மேலும், பிசியோதெரபிஸ்டுகள் தங்களது பெயருக்கு முன், 'டாக்டர்' என போட்டுக் கொள்ள "அலோபதி' டாக்டர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆனால், பிற மாநிலங்களில் பிசியோதெரபிஸ்டுகள், தங்கள் பெயருக்கு முன், டாக்டர் என போட அனுமதிக்கப்படுகின்றனர் என பிசியோதெரபிஸ்டுகள் கூறுகின்றனர். 

முன்னதாக சுகாதாரத் துறை வெளிட்ட அரசாணையில் தமிழ்நாடு மாநில  உடலியக்க மருத்துவ பெருமன்றத்தின் கட்டமைப்பு, அதன் அதிகாரங்கள், பணிகள், தேர்தல் முறை, பெருமன்றத்தின் கூட்டம் ஆகியன பற்றி விவரிக்கப் பட்டுள்ளது. அது யார் 'பிசியோதெரபி' என்பதற்கு வரையறை தரும் போது, "யார் ஒருவர் அங்கீகரிக்கப்பட்ட உடலியக்க மருத்துவ கல்விக்கான பட்டத்தை பெற்று, அத்துடன் அவரது பெயர் உடலியக்க பெருமன்றத்தின் பதிவேட்டில் பதியப்பட்டுள்ளதோ அவர் 'பிசியோதெரபி' ஆவார் என்று கூறுகிறது. அதே நேரத்தில் அவர் தனது பெயருக்கு முன்னால் Dr. என்ற பட்டத்தை போட்டுக்  கொள்ளக் கூடாது என்றும், அவர் மருந்து ஏதும் எழுதிக் கொடுக்கக் கூடாது என்றும் அந்த ஆணை  கூறுகிறது. ("Physiotherapist” means a person who possesses recognized physiotherapy education and whose name has been entered in the Register of Physiotherapy Council. He shall not use “Dr” before his name and prescribe drugs)

இப்படி நிறைய பிரச்சனைகள் இவர்களுக்கு உள்ளன.  இவற்றையெல்லாம் களைய பலமுறை   பிசியோதெரபிஸ்ட்கள் போராட்டம் நடத்தி உள்ளனர். அரசிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால் பலன் ஏதும் கிட்டவில்லை.   

இன்றைய நவீன மருத்துவத்தில் தவிர்க்க முடியாதவர்களாக உள்ள, "பிசியோதெரபிஸ்ட்'களின் கோரிக்கைகளை, தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில், பட்டப்படிப்பிற்கு இத்துறையை தேர்ந்தெடுக்கும் மாணவர்கள் எண்ணிக்கை மெல்ல மெல்ல குறைந்து, நாளடைவில் இத்துறை அழியும் அபாயம் ஏற்படும். ஏற்கனவே பிசியோதெரபி படித்தவர்களின் மவுசும் மறைந்து போகும்.

Comments

பிஸியோதெரபிஸ்ட்-களின் பிரச்சினையை சிறப்பாக எடுத்துக் கூறியுள்ளீர்கள்!
நல்ல பதிவு.

மருத்துவ உலகில் பிஸியோதெரபிஸ்ட் -களின் பங்கு தவிர்க்க முடியாத ஒன்று.
இதை அரசு புரிந்துகொள்ள வேண்டும்.
@ அமைதி அப்பா
//பிஸியோதெரபிஸ்ட்-களின் பிரச்சினையை சிறப்பாக எடுத்துக் கூறியுள்ளீர்கள்! நல்ல பதிவு//

Nanri...
//மருத்துவ உலகில் பிஸியோதெரபிஸ்ட் -களின் பங்கு தவிர்க்க முடியாத ஒன்று.
இதை அரசு புரிந்துகொள்ள வேண்டும்//

Mei..
breeze said…
thank you for the awareness created by you in the public. Expecting government to take immediate steps.
@ breeze
//thank you for the awareness created by you in the public. //

Thanks for comments sir...
//Expecting government to take immediate steps.//

The dreams of physio will come true very shortly...