வேலூர் மாவட்டம் - இன்னொரு 'காக்க காக்க'

ஒரு நேர்மையான ஐ.பி.எஸ். அதிகாரி தனது பணியில் சந்திக்கும் பிரச்சனைகள் - இது திரைக் கதையின் ஒன் லைன். 

ஐ.பி.எஸ். அதிகாரி முத்துக்குமாராக நந்தா வெளுத்து வாங்கி இருக்கிறார். நல்ல நடிப்பு. உடலசைவும் பேசுகிறது. 

எம்.சி.ஏ. படிப்பு முடிந்தவுடன், ஐ.பி.எஸ். தேர்வில் நந்தா வெற்றி பெறுகிறார். தில்லி போலீஸ் அகாடெமி-யில் பயிற்சி முடிந்த  கையுடன் வேலூர் மாவட்டத்தில் ஏ.எஸ்.பி.-யாக பதவி ஏற்கும் நந்தா, அங்கு கட்ட பஞ்சாயத்து, ரியல் எஸ்டேட், அரசியல் செய்யும் ஒரு பிரமுகரின் சட்ட விரோத நடவடிக்கைகளை தடுக்கிறார். 'உனக்கெதுக்கு இந்த வேலையெல்லாம்' என்று சீனியர் அதிகாரிகள் கண்டிக்கின்றனர். இது நந்தாவிற்கு பிடிக்கவில்லை. "நீங்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் நான் அப்படி இல்லை" என்று சீனியர் அதிகாரியிடம் சூடாகிறார். கதையும் மெல்ல சூடு பிடிக்கிறது. 

இதைத் தொடர்ந்து நந்தாவிற்கு அந்த பிரமுகரால் நிறைய அவமானங்கள்  ஏற்படுகின்றன. அப்பிரமுகருக்கு எதிராக தகுந்த சாட்சியங்களுடன் ஒரு வழக்கை நீதிமன்றத்தில் நந்தா முன் வைக்கிறார். ஆனால் அத்தனை சாட்சியங்களும் அப்பிரமுகரால் முறியடிக்கப்படுகின்றன. அரசு  வழக்கு தோற்று விடுகிறது. ஒரு ஐ.பி.எஸ். அதிகாரியாக இருந்தும் ஒன்றும் செய்ய முடியவில்லையே என்று கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி தனது ஏ.எஸ்.பி. பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்து அதற்கான கடிதத்தையும் தனது மேலதிகாரியிடம் கொடுக்கிறார், நந்தா. 

வீட்டிற்கு திரும்பும் வழியில் அப்பிரமுகர் நந்தாவை கேலி செய்கிறார். ஏற்கனவே கொந்தளிப்பான மன நிலையில் இருந்த நந்தா, அவரை அடித்து புரட்டி எடுத்து விடுகிறார். எல்லா விசைக்கும் எதிர் விசை உள்ளது. அவர், ஆள் வைத்து நந்தாவை அடித்து துவைத்து எடுத்து விடுகிறார். உயிருக்கு ஆபத்தான நிலையில் நந்தா மருத்துவமனையில் படுத்திருக்கும் காட்சியில் இருந்து படம் ஆரம்பிக்கிறது. மேற்சொன்னது எல்லாம் இடைவேளை வரை ஒரு பிளாஷ்பேக். 

தில்லி உயர் அதிகாரிகள் நந்தா தனது பதவியை ராஜினாமா செய்யக் கூடாது, அவர் தொடர்ந்து பணியாற்றி அப்பிரமுகரையும், அவர் சார்ந்த ஆட்களையும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கின்றனர். இதை ஏற்று நந்தா மீண்டும் அதே வேலூர் மாவட்டத்தில் தனது பணியை தொடர்கிறார். இம்முறை தனக்கென ஒரு டீமை உருவாக்கி அவர்களின் துணையுடன் அப்பிரமுகரை சுற்றி வளைக்கிறார். 

அப்பிரமுகர் மாட்டிக் கொண்டால் அவருக்கு பின்னால் இருக்கும் இன்னொருவரும் மாட்டிக் கொள்வார். அந்த இன்னொருவர் ஒரு அமைச்சர். பிரமுகரை அதாவது அமைச்சரின் கைத்தடியை காப்பாற்ற அமைச்சர் பலவாறு முயற்சி செய்கிறார். ஆனால் பலன் இல்லை. எனவே அமைச்சர் தனது கையாளான பிரமுகரை போட்டுத் தள்ள ஏற்பாடு செய்து அவ்வாறு போட்டும் தள்ளி விடுகிறார். பிறகு அமைச்சர் எப்படி நந்தாவிடம் சட்டப்படி மாட்டிக் கொள்கிறார் என்பது கடைசி 10  நிமிடக் கதை. 

கல்பாத்தி அகோரத்தின் தயாரிப்பில் வெளி வந்துள்ள இப்படத்தில் விறுவிறுப்புக்கு கொஞ்சம்கூட பஞ்சமில்லை. காட்சிகள் பரபரப்பாக நகர்கின்றன, மாறுகின்றன. நடிப்பில் போட்டிக் போட்டுக் கொண்டு அனைவரும் நடித்துள்ளனர். 

நந்தாவிற்கு ஜோடியாக பூர்ணா. அவருக்கு பெரிய வேலை ஒன்றும் படத்தில் இல்லை. மனதிலும் பதியவில்லை. சாரி !

நகைச்சுவைக்கு சந்தானம். இன்னும் பல ஆண்டுகள் அவர் திரையில் நிலைத்து நிற்பார். இரசிக்கும்படியான, இயல்பான நடிப்பு. அவருக்கு சிங்கமுத்து அப்பா. ஆனால் இருவரும் அடிக்கும் லூட்டி கொஞ்சம் ஓவர். 

ஆரம்பத்தில் தில்லி, செங்கோட்டை ஆகிய இடங்களில் இருந்து பின் வேலூர், காட்பாடி, சத்துவாச்சாரி, வேலப்பாடி, ஜலகண்டேஸ்வரர் கோவில், சி.எம்.சி. மருத்துவமனை, ஏலகிரி மலை என்று காமிரா சுழல்கிறது. திறமையான படப்பிடிப்பு, ஒளிப்பதிவு. காதை  உறுத்தாத  பின்னணி இசை.

பாடல்கள் மட்டும் நன்றாக அமைந்து இருந்தால், 'வேலூர் மாவட்டம்' இன்னொரு 'காக்க காக்க'. படம் நன்றாக இருக்கிறது.

காசுக்கு மோசமில்லை ! பார்க்கலாம் !!

Comments

sakthi said…
திரை விமர்சனம் அருமை
நட்புடன் ,
கோவை சக்தி