சர்பாசி சட்டம் உரிமையியல் நீதிமன்றத்திற்கு இட்டுள்ள தடை - ஒரு முக்கிய வழக்கு.



சர்பாசி ஆக்ட் - இது வங்கிகள் கொடுத்த கடனை நீதிமன்றங்களை  நாடாமல்   அவ் வங்கிகளே வசூல் செய்து கொள்ள  அதிகாரம் தருகிறது. பிரச்சனை எழுந்தால்  'வங்கிக் கடன் வசூல் தீர்ப்பாயத்தின்' உதவியையும் நடலாம்.

SARFASI ACT - இதன் விரிவாக்கம் Securitisation and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest Act அதாவது 'நீதிச் சொத்தை பத்திரப்படுத்தலும்  மறு கட்டமைத்தலும் மற்றும் பிணைய நலனை வலியுறுத்தி செயல்படுத்தல்'. அப்பாடா... ரொம்ப பெரிய சட்டம்தான். இல்லியா பின்னே.? வங்கி கொடுத்த கடனை வசூலிக்க இந்த சட்டம் இயற்றப்பட்ட 2002-ஆம் ஆண்டுக்கு முன்பு வங்கிகள் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து, அதற்கு கடன் தொகைக்கு ஏற்ப நீதிமன்ற கட்டணம் (கோர்ட் பீஸ்) கட்டி, பிணயமாக (ஜாமீனாக) கொடுக்கப்பட்ட சொத்தை பற்றுகை (ஜப்தி) செய்ய ஆயிரத்தெட்டு சட்ட நடைமுறைகளை பின்பற்றி வங்கி வழக்கை நடத்தி தீர்ப்பு வாங்க வேண்டும்.

இப்போ இந்த சர்பாசி சட்டம் வந்ததற்கு பிறகு இந்த சுற்றி வளைக்கும் நடைமுறை எல்லாம் சுருங்கி போச்சு. இந்த சட்டம் வங்கி கொடுத்த கடனை அதுவாகவே வசூல் செய்ய முடியும். இச்சட்டத்தின் கீழ்  'கடன் வசூல் தீர்ப்பாயம்' (Debt Recovery Tribunal) ஒன்றும்   'கடன் வசூல் மேல்முறையீட்டு தீர்ப்பாயம்' (Debt Recovery Appellate Tribunal) ஒன்றும் கட்டமைக்கப்பட்டுள்ளது . இதில் எளிய முறையில் வங்கியானது கடன்காரர்கள் மீது வழக்கு தொடுக்கலாம். பிணைய சொத்தை அதற்கு முன்பாகவே வங்கியின் அதிகாரம் பெற்ற அலுவலர் மாவட்ட குற்றவியல் நடுவர் (DRO) மற்றும் மாவட்ட ஆட்சியர் வாயிலாக பற்றுகை செய்யலாம். நீதிமன்றம் பக்கம் போகும் வேலை வங்கிக்கு இல்லை. அதே மாதிரி கடன்காரர்கள் கண்டபடி எதிர்வாதம் (டிபென்ஸ்) எடுக்கவும் முடியாது. அந்த வகையில் பின்வரும் முக்கிய வழக்கு சுட்டிக்கட்டத்தக்கது.

அதாவது 'சுமதி - எதிர்- செங்கோட்டையன் மற்றும் பலர்' என்ற வழக்கில் செங்கோட்டையன் வகையறா பஞ்சாப் நேஷனல் பேங்க் என்ற வங்கியில் கடன் பெற்று இருந்தனர். அதை கட்ட முடியவில்லை. எனவே அவ்வங்கி சர்பாசி சட்டத்தின் கீழ் அவர்களது பிணைய சொத்தை பற்றுகை செய்து கடனை வசூலிக்க நடவடிக்கை எடுத்தது. இதற்காக கோவையில் உள்ள வங்கி கடன் வசூல் தீர்ப்பாயத்தில் மேற்படி செங்கோட்டையன் வகையறாவுக்கு எதிராக மனு தாக்கல் செய்தது. பிணைய சொத்தை ஏலத்தில் விற்கவும் நடவடிக்கை மேற்கொண்டது. இதை தவிர்க்க அவர்கள் மேல் முறையீடு, நீதிப்பேராணை மனு ஆகியவற்றை தாக்கல் செய்தனர். ஆனால் அவை அனைத்தும் தோல்வியில் முடிந்தன. இதற்கிடை யில் வங்கி தனது ஏல நடவடிக்கைகளை வேகமாக மேற்கொள்ள ஆரம்பித்தது. இதை நிறுத்த எதாவது செய்ய முடியுமா என்று மேற்படி செங்கோட்டையன் வகையறா மிகவும் தீவிரமாக சிந்தித்தது. முடிவில் செங்கோட்டையன் தனது மகள் சுமதியை விட்டு சம்பந்தப்பட்ட பிணைய சொத்திலிருந்து பாகப் பிரிவினை கோரி தங்கள் மீதும் மேற்படி வங்கியின் மீதும் வழக்கிட வைத்தனர். குறிப்பாக அப்பாகப்பிரிவினை வழக்கு முடிவாக முடியும் வரை வங்கியானது பிணைய சொத்தை ஏலத்திற்கு கொண்டு வரக் கூடாது என்று இடைக்கால உறுத்துக்கட்டளை (இண்டரிம் இஞ்சன்சன்) கோரி தனியாக ஒரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இம்மனு கீழமை மற்றும் முதல் மேல்முறை யீட்டு நீதிமன்றத்தில் தோற்றுப் போனது. எனவே இதை எதிர்த்து சுமதி சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் சீராய்வு மனு (சிவில் ரிவிசன் பெட்டிசன்) தாக்கல் செய்தார்.

இதை ஆராய்ந்த மாண்பமை நீதியரசர் எம். ஜெயபால் சர்பாசி சட்டம், 2002-இன் 34-ஆம் பிரிவின் வாயிலாக கூறியுள்ள தடையை தனது தீர்ப்புரையில் சுட்டிக்காட்டினர். அதாவது மேற்படி பிரிவு 34-இன்படி சர்பாசி சட்டத்தின் கீழ் வங்கிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்களை அவை செயல்படுத்துவதை தடுத்து நிறுத்தும்படி இடைக்கால உறுத்துக்கட்டளை உள்ளிட்ட இடைக்கால நிவாரணம் ஏதும் வழங்குவதிலிருந்து உரிமையியல் நீதிமன்றம் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே பஞ்சாப் நேசனல் வங்கி பிணைய சொத்தை ஏலத்திற்கு கொண்டு வருவதிலிருந்து அதை தடுத்து நிறுத்த சுமதி கோரியபடி இடைக்கால உறுத்துக்கட்டளை வழங்க முடியாது என்று மாண்பமை நீதியரசர் எம். ஜெயபால் தெளிவுபடுத்தினர். முடிவில் சுமதியின் உரிமையியல் சீராய்வு மனுவை (சிவில் ரிவிசன் பெட்டிசன்) தள்ளுபடி செய்து ஆணையிட்டார்.

இத்தீர்ப்பில் மற்றொரு சட்ட நிலைபாட்டையும் அவர் தெளிவுபடுத்தினர். அதாவது சுமதிக்கு உள்ளபடியே வங்கியின் சட்ட நடவடிக்கைளில் குறை ஏதும் இருந்தால் அல்லது அது தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி இருந்தால் அது பற்றி அவர் சர்பாசி சட்டம் பிரிவு 17-இன்படி கடன் வசூல் தீர்ப்பாயத்திடம் முறையிடலாம். ஆனால் சுமதி அவ்வாறு செய்யவில்லை. எனவே சுமதியின் மனுவில் நற்கூறுகள் இல்லை.

[Securitisation and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest Act, 2002 (54 of 2002) (SARFAESI Act), Section 34 - Code of Civil Procedure, 1908 (5 of 1908), Section 9, Order 39, Rules 1 and 2 - Plaintiff sought for interim injunction to restrain Bank from auctioning properties enforcing SARFAESI Act, pending partition Suit - In view of specific bar under Section 34, Trial Court has no authority to entertain Application for interim injunction against Secured Creditors who had already initiated proceedings - Concurrent findings of court rejecting Injunction Application, held, proper.

Alternative Remedy - Injunction Application to stall auction sale overlooking provisions of SARFAESI Act, held, not maintainable.]

Sumathi vs. Sengottiyan and others - Madras High Court - M.Jayapal, J. C.R.P. (PD) No. 1591 of 2009 and M.P. No. 1 of 2009 - decided on 05-0202010 - Citation : 2010 (3) CTC 53

Comments