25 ஆண்டுகளுக்கு முந்தைய வகுப்புத் தோழர்கள் ஒன்று சேர்ந்து செய்த செயல்

திரு கல்யாணசுந்தரம் எனது பள்ளித் தோழர். நானும் அவரும் இப்பால் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு (1983-85) சேலம், கோட்டை நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் +2 படித்தோம். அதற்குப் பின் என் விதிப்படி நான் சட்டம் படிக்க வந்து ஒரு வழக்குரைஞராகி விட்டேன். அவர் பட்டப் படிப்பு முடித்து சேலம் ஆண்டர்சன் பள்ளியில் மேலாளர் பதவியில் அமர்ந்து விட்டார்.

என் மகன் பிருத்விராஜனை 6-ஆம் வகுப்பில் சேர்க்க கடந்த 2005-ஆம் ஆண்டில் ஆண்டர்சன் பள்ளிக்கு சென்றிருந்த பொழுது எனது பள்ளித் தோழர் கல்யாணசுந்தரத்தை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. பள்ளி வாழ்க்கையின் பசுமை நினைவுகள் திரும்ப மலர்ந்தன.

எனது மகனை மேற்படி பள்ளியில் சேர்த்து விட்டபடியால் நானும் கல்யாணசுந்தரமும் சந்திப்பதும் இயல்பாக அடிக்கடி நிகழ்ந்தது. நிறைய பேசினோம். பள்ளி வாழ்க்கையின் பெருமைகளை இன்றைய கடும் பொறுப்புகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து ஏக்கப் பெருமூச்சு விட்டோம்.

இந்த நிலையில் தோழர் கல்யாணசுந்தரம் ஒரு யோசனையை முன் வைத்தார். அதாவது நானும் அவரும் சந்தித்ததை போல வகுப்புத் தோழர்கள் மற்றவர்களையும் தேடிக் கண்டுபிடித்து சந்திக்க வேண்டும்; ஒருவருக்கொருவர் பரஸ்பரம் உதவியாக நின்று, ஒற்றுமையாக சமூக நலப் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்றெல்லாம் அவர் கூறினார். இது ஒரு அருமையான யோசனையாக இருந்தது. 25 ஆண்டுகளுக்கு முன் ஒரே வகுப்பில் ஒன்றாக படித்தவர்கள் மீண்டும் சேர்ந்து பார்த்து பேசி மகிழ்வது என்பது நினைக்கவே பிரம்மாண்டமாக இருந்தது.

இதற்க்கான முயற்சியில் கடந்த 2009-ஆம் ஆண்டில் நானும் அவரும் இறங்கினோம். உடனடியாக தோழர்கள் திரு. ரங்கநாதன் (ஜவுளி உற்பத்தியாளர்), திரு. காளியப்பன் (வணிகர்), திரு. விசுவநாதன் (பள்ளி ஆசிரியர்), திரு. முருகைய்யன் (வழக்குரைஞர்), திரு. சரவணன் (வீட்டு மின் இணைப்பு ஒப்பந்தக்காரர்) ஆகியோரது முகவரி கிடைத்து அவர்கள் முகம் பார்த்தோம். இளமை மறையத் தொடங்கி மத்திய வாழ்வின் சுவடு (எங்களை போலவே) அவர்களிடம் தெரிந்தது.

நமது எண்ணத்தை அவர்களிடம் தெரிவித்தோம். அவர்களும் உற்சாகமடைந்தனர். மற்றவர்களையும் ஓரளவு தேடிக் கண்டுபிடித்தோம். அவர்களில் திருவாளர்கள் ஜெயராமன், விஸ்வநாதன் ஆகியோர் மருத்துவர்களாக உள்ளனர். திரு ஈஸ்வரன் பொறியாளராகி தற்போது தூத்துக்குடியில் இந்திய எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றுகிறார். திரு. முரளி சேலம் ஆவின் பல் பண்ணையில் கனணி இயக்குபவராக பணியாற்றுகிறார். எல்லோருக்கும் திருமணம் ஆகி பெரிய குடும்பியாக இருந்தனர்.

இவ்வாறு சேர்ந்த நாங்கள் அடிக்கடி கூட்டம் போட்டோம். அப்போது எங்களுக்கு +2 - வில் பாடம் எடுத்த ஆசிரியர்களுக்கு முதற்கண் பாராட்டும், மரியாதையும் செய்ய வேண்டும்; அதற்கு ஒரு விழா எடுக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. நாங்கள் சுமார் 25 பேர் சேர்ந்து இருந்தோம். எல்லோரும் தலைக்கு கொஞ்சம் பணம் போட்டோம். பெருந் தொகை சேர்ந்தது. அதை வைத்துக்கொண்டு விழாவிற்கான ஏற்பாடுகளில் முனைந்து இறங்கினோம்.


நாங்கள் அனைவரும் +2 - வில் முதல் குரூப் எடுத்து படித்தவர்கள். எங்களுக்கு ஆங்கிலத்தை திரு செல்வராசு அவர்களும், தமிழை புலவரைய்யா திரு கிருஷ்ணராஜ் அவர்களும், கணிதத்தை திரு ராஜாமணி அவர்களும், இயற்பியலை திரு. ராஜாராம் அவர்களும், வேதியியலை திரு மரிய ஜோசப் அவர்களும், விலங்கியியலை திரு. ராமகிருஷ்ணன் அவர்களும், தாவரவியலை திரு வெங்கடேசன் அவர்களும் எங்களுக்கு போதித்தனர். இவர்கள் தங்கள் ஆசிரியர் பணியை நன் முறையில் நிறைவு செய்து ஓய்வு பெற்று இருந்தனர். கணித ஆசிரியர் ராஜாமணி இறைவனடி சேர்ந்துவிட்டார். தமிழ் வைத்தியர் கிருஷ்ணராஜுக்கு பக்கவாதம் ஏற்பட்டு வீட்டில் படுத்தபடியாக இருந்தார். மற்றவர்களை தேடிக் கண்டுபிடித்து இந்த விழாவைப் பற்றி சொன்னதும் மிகவும் அக மகிழ்ந்தனர்.

இப்படி பாடம் கற்றுக்கொடுத்த ஆசரியர்களுக்கு பாராட்டு செய்து பரிசு தரும் பாச விழா சேலம் கோட்டை நகராட்சி மேல்நிலைப்பள்ளியின் 125 ஆண்டு கால வரலாற்றில் இதுவரை நடந்தது இல்லை என்றும், அந்த பேறும் பாக்கியமும் தங்களுக்கு எங்கள் வாயிலாக கிடைத்துள்ளதாகவும் கூறி பெரு மகிழ்ச்சி அடைந்தனர்.
எங்களுக்கும் பெருமையாக இருந்தது.

சேலம் கணேஷ் மகாலில் இம்மாதம் 1-ஆம் தேதியில் (மே தினம் - உழைப்பவர் தினம்) மேற்படி பாராட்டு விழாவிற்கு ஏற்பாடு செய்தோம். அளித்த ஆசிரியர்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தினருடன் வந்திருந்தனர். நாங்களும் எங்கள் குடும்பத்தினருடன் குழுமினோம். ஒவ்வொருவரும் தங்களது இன்றைய நிலை குறித்தும், வாழ்வின் திருப்பு முனையாக இருந்த +2 படிப்பில் எங்கள் ஆசிரியர்கள் எங்களை நெறிப்படுத்தி எவ்வாறு வழிகாட்டி ஊக்கப்படுத்தினார் (அதாவது படி.. படி.. என்று அடி மேல் அடி கொடுத்து எவ்வாறு பாடாய் படுத்தினர்) என்பது குறித்தும் பேசினோம். ஆசிரியர்கள் ஏற்புரை நிகழ்த்தினர். அவர்களுக்கு பொன்னாடையும், சந்தனமாலையும் அணிவித்து, கேடயம் கொடுத்து, நினைவு பரிசு வழங்கினோம். நிகழ்ச்சியை நான் தொகுத்து வழங்கினேன்.


விழா இனிதே நிறைவடைந்தது. அனைவரின் மனமும்தான் !
ஆசிரியர்களுடன் ஒரு அசத்தல் நிழற்படம்


நண்பர் கல்யாணசுந்தரம் பாராட்டுரை நிகழ்த்துகிறார்

இயற்பியல் ஆசிரியர் திரு ராஜாராமுக்கு தோழர் ரங்கநாதன் கேடயம் வழங்குகிறார்.

நான் நிகழ்சிகளை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறேன்


தாவரவியல் ஆசிரியர் திரு வெங்கடேசனுக்கு தோழர் கேடயம் வழங்குகிறார்

விலங்கியியல் ஆசிரியர் திரு ராமகிரிஷ்ணனுக்கு தோழர் விஸ்வநாதன் கேடயம் வழங்குகிறார்

வேதியியல் ஆசிரியர் திரு மரிய ஜோசப்புக்கு தோழர் ஈஸ்வரன் கேடயம் வழங்குகிறார்

ஆங்கில ஆசிரியர் திரு செல்வராசு அவர்களுக்கு பி.ஆர். ஜெயராஜன் ஆகிய நான் கேடயம் வழங்குகிறேன்.

ஆங்கில ஆசிரியர் திரு செல்வராசு அவர்களுக்கு தோழர் ராமசந்திரன் நினைவு பரிசு வழங்குகிறார்.

Comments

Sumi said…
Excellent job sir, Good examples will always be followed. :)
Thanks Sumi for your comment and support...
பழைய நபர்களை சந்திப்பது ஓர் இனிமையான அனுபவம். அத்தோடு ஆசிரியர்களை கௌரவப்படுத்துவது மிகவும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று.
இது மாதிரி, பழைய நண்பர்களை சந்தித்த போது, எனக்கு கிடைத்த அனுபவத்தை இங்கே பகிர்ந்துள்ளேன்.

இளைமையை மீட்டெடுக்க எளிய வழி!(40+)

நன்றி.
@ அமைதி அப்பா
//பழைய நபர்களை சந்திப்பது ஓர் இனிமையான அனுபவம். அத்தோடு ஆசிரியர்களை கௌரவப்படுத்துவது மிகவும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று//

நன்றி..
@ அமைதி அப்பா

//இது மாதிரி, பழைய நண்பர்களை சந்தித்த போது, எனக்கு கிடைத்த அனுபவத்தை இங்கே பகிர்ந்துள்ளேன்.//

எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி உங்களுக்கும் ஏற்பட்டதை அறிந்து மகிழ்ச்சி..
நல்ல நண்பர்கள் நமக்கு பலம்.
நல்ல பதிவு.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
வாழ்த்துகள்.
@ Rathnavel
//நல்ல பதிவு.எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.வாழ்த்துகள்.//

தங்கள் வாழ்த்துகளுக்குகும் பகிர்ந்தமைக்கும் நன்றி அய்யா...