தன்முனைக் கவிதைகள் பற்றி "கவிச்சுடர்" கா.ந.கல்யாணசுந்தரம் விமான நிலையத்திலிருந்து பேட்டி...



தென் கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான கம்போடியாவில் அண்மையில்  உலகத் தமிழ்க் கவிஞர்கள் மாநாடு நடைபெற்றது.

கம்போடியாவின் சியம் றீப் மாகாணத்தில் மிகப் பிரமாண்டமாகவும், பாரம்பரிய முறையுடனும்  நடைபெற்ற இந்த மாநாட்டை கம்போடிய கலாச்சார மற்றும் நுண்கலைகள் துறையுடன் இணைந்து அங்கோர் தமிழ் சங்கம், பன்னாட்டு தமிழர் நடுவம், சீனு ஞானம் பயண ஏற்பாட்டாளர்கள் நடத்தினர்.

இந்த  மாநாட்டில் கலந்து கொண்டு கவிதை அரங்கேற்ற, கவிதையின் தடம் பற்றி சொற்பொழிவாற்ற உலகெங்கிலும் இருந்து கவிஞர்களும், தமிழுக்கு தொண்டாற்றிய அறிஞர் பெருமக்கள் பலரும் அழைக்கப்பட்டிருந்தனர்.

கவிதையில் மரபுக் கவிதை, புதுக்கவிதை, ஹைகூ என பல வடிவங்களை நாம் அறிவோம். அந்த வரிசையில் "தன்முனைக் கவிதைகள்" (Self-Assertive Verses) என்ற பெயரில் ஓர்  புதிய வடிவிலான கவிதையை மாநாட்டில் அரங்கேற்ற கவிச்சுடர் கா.ந. கல்யாணசுந்தரம் அவர்களும் கம்போடியா புறப்பட சென்னை விமான நிலையம் வந்திருந்தார்.

அச்சமயத்தில் தன்முனைக் கவிதைகள் பற்றி அவர் நமது "சட்டப்பார்வை"க்காக பேட்டி ஒன்றை விமான நிலையத்தில் வைத்து கொடுக்கும் போது, "தெலுங்கு வடிவ நானிலு என்பதை தழுவி தமிழில் தன்முனைக்கவிதைகள் எனப் பெயரிட்டு எழுதப்படும் குறுங்கவிதைகளுக்கு ஒரு அங்கீகாரம் அளிப்பதை அனைவரும் வரவேற்றுள்ளதாக" தெரிவித்தார். மேலும் தன்முனைக் கவிதையை சுருக்கமாக வரையறுக்கும்படி கேட்டதற்கு, "இது தமிழ்க்கவிதை உலகில் புதியதோர் வடிவமைப்பு என்றும், கவிஞர்கள் எளிய சொற்களால் மக்கள் மனதில் பதியும்படியான கருத்துகளை, தங்களை முன்னிறுத்தி ஈடுபாடோடு எழுதப்படுபவை" என்றும் கருத்துரைத்தார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், தன்முனைக்கவிதைகள் எழுத சில விதிமுறைகள் உள்ளன என்றும், அடிப்படையில் அவை நான்கு வரிகளில் எழுதப்பட வேண்டும் என்றும், ஒரு வரிக்கு அதிகபட்சமாக மூன்று வார்த்தைகள் என நான்கு வரிகளில் 12 வார்த்தைகளுக்கு மிகாமல் எழுதப்படவேண்டும் என்றும், முதல் இரண்டு வரிகளில் காட்சி, நிகழ்வு அல்லது ஒரு செய்திக்குறியீட்டை அமைத்து முடித்த நிலையில் அடுத்த இரண்டு வரிகளில் அதைச் சார்ந்தோ அல்லது முரணாகவோ (எதிர்த்தோ ) தொடர்புபடுத்துதல் முக்கிய அம்சமாகக் கருதப்படும் என்றும்,  கவிஞர்கள் இயற்கை, அறிவியல், மனிதநேயம், சமூக சூழல், அவலம், அன்பு, காதல் ,உறவுகள், உணர்வுகள் போன்ற கருத்துகளில் தம்மை ஈடுபடுத்தி எழுத்திடல் வேண்டும் என்றும் சில முக்கிய விதிமுறைகளை தெளிவுபடுத்தினார்.

பேட்டியின் போது அவருடன் சக கவிதாயினிகள் சுமதி சங்கர், முனைவர்  தர்மாம்பாள் இரத்தினம், அன்புச்செல்வி சுப்புராஜூ ஆகியோர் உடனிருந்தனர்.

கடந்த செப்டம்பர் மாதம் 21, 22 ஆகிய இரு தேதிகளில் நடைபெற்ற இந்த மாநாட்டில் ஓசூர் கவிஞர் மணிமேகலை உள்ளிட்ட 52 கவிஞர்கள் எழுதியதும் கவிச்சசுடர் கல்யாண சுந்தரம் தொகுத்து தந்ததுமான  "வானம் தொடும் வண்ணத்து பூச்சிகள்" எனும் தன்முனைக் கவிதைகள் நூல் வெளியிடப்பட்டது. இதனை ஓவியா பதிப்பகம் பதிப்பித்துள்ளது.


 
 

காணொலி உதவி :  Focustudioz

Comments