இந்தியாவின் அடுத்த தலைமை நீதியரசர் எச்.எல். டட்டு

இந்தியாவின் அடுத்த தலைமை நீதியரசர் எச்.எல். டட்டு;
ஆர்.எம்.லோதா வரும் 27ம் தேதி ஓய்வு பெறுகிறார்.
----------------------------------------------------------------


இந்திய தலைமை நீதியரசராக தற்போது பதவியில் உள்ள மாண்பமை நீதியரசர் ஆர்.எம்.லோதா வரும் 27ம் தேதி ஓய்வு பெறுகிறார். அடுத்த தலைமை நீதியரசராக எச்.எல். டட்டு நியமிக்கப்பட உள்ளார். இதற்கான பரிந்துரை குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அடுத்த மூத்த நீதிபதி எச்.எல்.டட்டு :

தற்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதியரசராக உள்ள ஆர்.எம்.லோதா இம்மாதம் 27ம் தேதி ஓய்வு பெறுகிறார். இவருக்கு அடுத்தபடியாக உச்ச நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக எச்.எல்.டட்டு பணியாற்றி வருகிறார். இவரை அடுத்த தலைமை நீதியரசராக நியமிப்பது குறித்து மைய அரசு பரிசீலித்து வந்தது. தற்போது, இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தத்துவை தலைமை நீதியரசராக நியமிப்பது குறித்து பிரதமர் அலுவலகத்தில் இருந்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது. அவர் ஒப்புதல் அளித்ததும் தலைமை நீதியரசர் நியமனம் குறித்த அறிவிப்பு வெளியாகும்.

1975-ல் வழக்குரைஞராக தனது சட்டத் தொழிலை தொடங்கியவர் :

1950-ஆம் ஆண்டு பிறந்த நீதிபதி டட்டு, 1975-ஆம் ஆண்டில் வழக்குரைஞராக பெங்களுரில் தனது சட்டத் தொழிலை தொடங்கினார். 1995-ஆம் ஆண்டில் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் சட்டீஸ்கர், கேரளா ஆகிய மாநிலங்களின் உயர் நீதிமன்ற தலைமை நீதியரசராக பணியாற்றினார். இதை அடுத்து கடந்த 2008-ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தின் முதல் தலைவர் :

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பி.ஜே.பி. அரசு, நீதிபதிகள் நியமனத்திற்காக "தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் அமைப்பதற்கான சட்ட முன்வடிவை" (National Judicial Appointments Commission Bill)   நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இது மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டதும் சட்டமாக்கப்பட்டு, இதன் தலைவராக உச்ச நீதிமன்ற தலைமை நீதியரசர் பொறுப்பு ஏற்று கொள்வார். இதனால், அடுத்த தலைமை நீதியரசராக  நியமிக்கப்பட உள்ள எச்.எல்.தத்துவுக்கு தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தின் முதல் தலைவராகும்  வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது.

பணிக்காலம் :

தற்போது 63 வயதாகும் டட்டு, இப்பதவியில் ஓராண்டிற்கும் சற்று மேலாக அதாவது டிசம்பர் 2015 வரை நீடிப்பார்.

கடின உழைப்பு, நேர்மை மற்றும் பணிவு :

இவர் தொலைக்காட்சி ஒன்றுக்கு அண்மையில் அளித்த பேட்டி ஒன்றின் போது, தான் கடின உழைப்பு, நேர்மை மற்றும் பணிவு ஆகிய மூன்று கோட்பாடுகளை நம்புவதாகவும், தான் இன்று  இந்நிலையில் இருப்பதற்கு காரணம் தனது பெற்றோர்கள், தனது குருவான மேனாள் இந்திய தலைமை நீதியரசர் ராஜேந்திர பாபு, கடவுள் பாலாஜி ஆகியோரின் ஆசிகள்தாம், என்று குறிப்பிட்டார்.

Comments