"தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு செய்வது எனது பொழுதுபோக்கு"


தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் கேட்டால், அங்கீகரிக்கப்பட்ட விதிவிலக்கான சூழல்களில் தவிர, மற்ற நேர்வுகளில் பொது அதிகாரஅமைப்புகள் வகுத்துரைக்கபட்ட கால வரையறைக்குள் தகவல் கொடுத்தாக வேண்டும்; தகவல் தரத் தவறும் பொதுத் தகவல் அலுவலர்கள் அபராதம், ஒழுங்கு நடவடிக்கை ஆகியவற்றுக்கு உள்ளாவார்கள். இந்த சிறப்பம்சங்களை கொண்ட பயன்மிகு இச்சட்டத்தை பலர் பலவிதங்களில் பயன்படுத்தி பலன் பெற்றுள்ளனர்/பெற்று வருகின்றனர். அது தனிநலன் கருதியோ, பொது நலனை முன்னிட்டோ இருப்பதுண்டு.

ஆனால் சிலர் அரசு அலுவலகங்களை வேண்டுமென்ற சீண்ட இந்த சட்டத்தை ஒரு பொழுதுபோக்காகவும் பயன்படுத்துகின்றனர். அவர்கள் அனைவருக்கும் அண்மையில் மைய தகவல் ஆணையம் ஒரு "குட்டு" வைத்துள்ளது.

ஒருவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தை தனது பொழுதுபோக்காக வைத்துக் கொள்ள முடியுமா ? அதிலும் குறிப்பாக தகவல் கேட்பதில் பொது நலன் ஏதும் உள்ளடங்காத நிலையில் ? இதை வாசிக்கும் போது நமக்கே ஒரு எரிச்சல் தோன்றுகிறது. அப்படியிருக்க மைய தகவல் ஆணையத்திற்கு கடும் எரிச்சல் தோன்றியதில் வியப்பு ஒன்றும் இல்லை.

அண்மையில் மைய தகவல் ஆணையத்தின் முன் நடந்த விசாரணை ஒன்றில் மனுதாரர் ஒருவர், "தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு செய்வது எனது பொழுதுபோக்கு, அந்த மனுக்களில் பொது நலன் ஏதும் கிடையாது" என்று மிகக்குளிர்ச்சியாக கூறினார். (இதைக் கேட்ட மைய தகவல் ஆணையத்திற்கு 'மூக்கின் மீது கோபம் வந்துவிட்டது' அல்லது 'தலை சுற்றியது' என்று எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். எனினும் நடை நயம் கருதி..) இதைக் கேட்டு மனுதாரர் மீது கடும் மனக்குறைவு அடைந்த மைய தகவல் ஆணையம், "பொது நலன் ஏதும் இல்லாமல் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பொழுதுபோக்காக மனு தாக்கல் செய்வது என்பது அரசாங்கத்தின் காலத்தையும், சக்தியையும் வீணடிப்பது. பொது அதிகாரஅமைப்பின் வளஆதாரங்களை பொருத்தமில்லாத வகையில் மாற்றிவிடக்கூடியது" என்று கடிந்து கொண்டது. [Sec. 7(9) An information shall ordinarily be provided in the form in which it is sought unless it would disproportionately divert the resources of the public authority or would be detrimental to the safety or preservation of the record in question.]

மனுதாரரை எச்சரிக்கும் முகமாக, "பொது அதிகாரஅமைப்பின் காலத்தையும் வளங்களையும் வீணடிக்கக்கூடாது என்றும், தவறினால் அப்படிப்பட்ட மேல்முறையீட்டையோ, புகாரையோ விசாரணைக்கு ஏற்காது என்றும்" மைய தகவல் ஆணையம் கூறியது.

முன்னதாக இந்த மனுதாரர் 11 மனுக்களை தாக்கல் செய்திருந்தார். அவற்றில் சுமார் 15 முதல் 22 இனங்களில் தகவல் கோரியிருந்தார். அவை அனைத்தும் ஹிஸ்சூரில் உள்ள பிரச்சார் பாரதியின் (All India Radio) அரசாங்க மற்றும் தனியார் வாகனங்களின் பயணக்குறிப்பு புத்தகம் பற்றியது. இந்த தகவல் எதற்காக தேவைப்படுகின்றது என்றும், இதில் அடங்கியுள்ள பொது முக்கியத்துவம் என்ன என்பது குறித்தும் மைய தகவல் ஆணையம் வினவிய போது, தான் ஹரியானா வேளாண் பல்கலைக்கழகத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும், அனைத்திந்திய வானொலி நிலையத்தில் இருந்து அத்தகு தகவலை 'பொழுதுபோக்காக' கேட்டதாகவும், அதில் பொது நலன் ஏதும் இல்லை என்றும் மனுதாரர் பதில் அளித்தார்.

இங்கு ஒன்று கவனிக்கத்தக்கதாக உள்ளது. அதாவது, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 6(2)-இன்படி எதற்காக தகவல் கோரப்படுகின்றது என்று பொதுத் தகவல் அலுவலர் கேட்கக்கூடாது. வேறு விதத்தில் சொன்னால் தகவல் கோரிக்கைக்கான காரணங்களை பொது அதிகாரஅமைப்பு வினவக் கூடாது. இந்நிலையில் பிரிவு 7(9)-அய்ப் பயன்படுத்தி மைய தகவல் ஆணையம் மேற்கண்டவாறு கொடுத்த சட்டப் பொருள்விளக்கம் வரவேற்கத்தக்கது.

- Jaya Rajan

Comments

சிறப்பான தகவல் நன்றி!