இறந்து போன மனைவியின் பணத்தைக் கேட்க, திருமணமே செல்லாது என்று வழக்கு தொடுத்த கணவருக்கு உரிமை இல்லை - சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு.

அண்மையில் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பை வாசித்தேன். கற்றறிந்த வழக்குரைஞர் சிராஜுதீன் வாதத்தைகேட்டறிந்து மாண்பமை நீதியரசர் பால் வசந்தகுமார் கடந்த மார்ச் 28-ஆம் தேதி நல்கிய தீர்ப்பு அது.

இதில் இறந்து போன மனைவியின் பணப்பலன்களை கேட்க திருமணமே செல்லாது என்று விளம்பக் கோரி வழக்கு தொடுத்த கணவருக்கு உரிமை இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்புரைத்தது.

வழக்கின் சங்கதிகள்படி காஞ்சனா என்பவர் தமிழக அரசின் வருவாய்த் துறையில் இள நிலை உதவியாளராக 1993-ஆம் ஆண்டில் பணியில் சேர்ந்தார். பின்னிட்டு வேலூரில் இருந்து சென்னைக்கு மாற்றலாகி வந்த காஞ்சனா, 1996-ஆம் ஆண்டில் பிரகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். 

திருமணம் நடந்த சில நாட்களில் இருவருக்கும் கருத்து வேறுபாடு தோன்றவே, காஞ்சனா தனது தாய்வீடு திரும்பி விட்டார். இவர்களுக்கு குழந்தை ஏதும் பிறக்கவில்லை. தாய் வீடு சென்ற காஞ்சனாவை, பிரகாஷ் திரும்ப அழைக்கவில்லை. மாறாக தனக்கும் காஞ்சனாவுக்கும் நடந்த திருமணம் செல்லத்தக்கதல்ல என்று விளம்பக் கோரி (praying for a declaration of nullity of marriage) பிரகாஷ் சென்னை குடும்ப நீதிமன்றத்தில் 2007-ஆம் ஆண்டில் மனு தாக்கல் செய்தார். காஞ்சனா இந்த வழக்கை எதிர்த்து வழக்காடி வந்தார். 

மண வாழ்க்கையும், வழக்கும் தந்த மன உளைச்சல் காரணமாக, காஞ்சனா உடல் நலம் குன்றி நோய் வாய்ப்பட்டார். தொடர்ந்து மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார். அப்போது கூட பிரகாஷ் அவரை வந்து பார்க்கவில்லை. இந்த வேதனைகளின் காரணமாக மேலும் உடல் நலம் பாதித்து காஞ்சனா 2011-ஆம் ஆண்டில் இறந்து போனார். அவரது இறுதிக் காரியங்களுக்கு கூட பிரகாஷ் வரவில்லை. காஞ்சனாவின் இறப்பு நிகழும் வரை வழக்கு நடந்து கொண்டிருந்தது. அதை எதிர்த்து காஞ்சனா வழக்காடி வந்தார். 

காஞ்சனா இறந்து போன பிறகு, அவருக்குரிய பணப் பலன்களை தனக்கு வழங்க வேண்டும் என்று கோரி அவரது தாயார் பிரேமாவதி வருவாய்த் துறையிடம் விண்ணப்பித்தார். இதற்கு பிரகாஷ் ஆட்சேபணை செய்தார். இறந்து போன காஞ்சனாவின் கணவர் என்ற முறையில் தனக்கே அவரது பணப்பலன்கள் வழங்கப்பட வேண்டும் என்று அவர் கோரினார். எனவே மகள் காஞ்சனாவின் பணப்பலன்கள் ஏதும் பிரேமாவதிக்கு வழங்கப்படவில்லை. இதனால் அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். 

இறப்புக்கு பின் பலனை அடையும் நபராக (நாமினி) காஞ்சனா தனது தாயார் பிரேமாவதியின் பெயரை தனது பணி படிவங்களில் குறிப்பிட்டு இருப்பதால், அவருக்கே அப்பலன்களை வழங்க வேண்டும் என்று மனுதாரர் பிரேமாவதியின் சார்பில் கற்றறிந்த வழக்குரைஞர் சிராஜுதீன் அவர்கள் வாதிட்டார். மேலும், காஞ்சனாவின் இறப்பிற்கு முன் திருமணமே செல்லாது என்று மனு தாக்கல் செய்து விட்டு, தற்போது அவர் இறந்த பிறகு கணவர் என்ற முறையில் பலன் தனக்கு தரப்பட வேண்டும் என்று பிரகாஷ் தரப்பில் முன் வைக்கப்படும் வாதம் ஏற்புடையதல்ல என்றும் அவர் வாதிட்டார். 

தனது மகளின் வாழ்வை துயரத்தில் தள்ளியதோடு மட்டுமல்லாமல், நடந்த திருமணத்தையும் செல்லாத ஒன்றாக விளம்பக் கோரியவருக்கு தனது மகளின் இறப்பினால் கிடைக்கும் எந்தப் பலனும் சென்றடையக் கூடாது என்று அத்தாயார் முன் வைத்த வாதத்தை மாண்பமை நீதியரசர் பால் வசந்த குமார் ஏற்றுக் கொண்டு, காஞ்சனாவின் அனைத்து பலன்களையும் அவரது தாயார் பிரேமாவதிக்கு வழங்க ஆணையிட்டார். 

அவர் தனது தீர்ப்பில், பெயர் நியமன படிவத்தில் காஞ்சனா தனது தாயார் பிரேமாவதியின் பெயரைத்தான் குறிப்பிட்டுள்ளார். அதை அவர் மாற்றவில்லை. எனவே அவரது பணப் பலன்களை கோர பிரகாசுக்கு சட்டப்படியான உரிமை இல்லை. வாழும் பொழுது காஞ்சனாவை தனது மனைவியாக பிரகாஷ் ஏற்கவில்லை. அந்த திருமணத்தை செல்லாது (disclaimed the marriage) என்று விளம்பக் கோரியிருந்தார். எனவே காஞ்சனா இறந்த பிறகு அவரது பணப்பலன்களை பெற பிரகாசுக்கு தார்மிக உரிமையும் இல்லை. எனவே காஞ்சனாவின் பணப் பலன்களை அவரது தாயாருக்கு வழங்க வேண்டும். கடந்த மூன்று ஆண்டு காலமாக வழக்கை தாமதப்படுத்தியதால் அவருக்கு பத்தாயிரம் ரூபாயை வழக்கு செலவுத் தொகையாக வருவாய்த் துறை வழங்க வேண்டும், என்று ஆணையிட்டார்.

Comments