இந்தியாவின் அடுத்த தலைமை நீதிபதி மாண்பமை நீதியரசர் ஆர்.எம்.லோதா


மாண்பமை நீதியரசர் ஆர்.எம்.லோதா

உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான திரு ஆர்.எம்.லோதா, இந்தியாவின்  41வது தலைமை நீதியசராக பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இவர், ஏப்ரல் 26ஆம் தேதியில் ஓய்வு பெறும் இந்திய தலைமை நீதியரசர் பி.சதாசிவத்திற்கு அடுத்து அப்பதவியில் அமர உள்ளார். இந்நியமனத்திற்கான அறிவிக்கை இன்னும் இரண்டு வாரங்களுக்குள் வெளியிடப்படும்.

இராஜஸ்தான் உயர் நீதிமன்ற மேனாள் நீதியரசர் எஸ்.கே.மால் லோதாவின் மகனான ஆர்.எம்.லோதா தனது சட்டக்கல்வியை ஜோத்பூர் பல்கலைகழகத்தில் படித்து முடித்து, 1973-ஆம் ஆண்டில் இராஜஸ்தான் வழக்குரைஞர் பெருமன்றத்தில் தன்னை ஒரு வழக்குரைஞராக பதிவு செய்து கொண்டார். இராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் தனது சட்டத் தொழிலை ஆரம்பித்த திரு ஆர்.எம்.லோதா, 1994-ஆம் ஆண்டு ஜனவரி 31-ஆம் தேதியில் இராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார். பின்னிட்டு பம்பாய் உயர் நீதிமன்றத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்டார். 

தொடர்ந்து வந்த காலகட்டங்களில் இவர் மகாராஷ்டிரா மாநிலத்தில், 1974-ஆம் ஆண்டின் காபிபோசா சட்டம், 1981-ஆம் ஆண்டின் எம்.பி.டி.எ. சட்டம் ஆகியவற்றின்  கீழ் கட்டமைக்கப்பட்ட ஆலோசனை வாரியத்தின் தலைவராக பணியாற்றினார். இதை அடுத்து இவர் 2007-ஆம் ஆண்டில் மீண்டும் இராஜஸ்தான் உயர் நீதிமன்றத்திற்கே பணி மாற்றம் செய்யப்பட்டார். அங்கு இவர் நிருவாகத்துறை நீதிபதியாக பணியாற்றினார். மேலும் ஜோத்பூர் தேசிய சட்ட பல்கலைக்கழகத்தின் செயல் துறை உறுப்பினராகவும், இராஜஸ்தான் மாநில நீதிமுறை கல்விக்கழகத்தின் தலைவராகவும் பணியாற்றினார்.  
2008-ஆம் ஆண்டில் பாட்னா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதியரசராக நியமனம் செய்யப் பட்டார். தொடர்ந்து அதே ஆண்டில் உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் பதவி உயர்வு பெற்றார். 
உச்ச நீதிமன்ற நீதியரசராக பணியாற்றிய கடந்த 5 ஆண்டுகளில், இவர் பல்வேறு முக்கியத் தீர்ப்புகளை நல்கியுள்ளார். வழக்கொன்றில் இவர் சில்லறை  விற்பனை கடைகளில் அமிலம் விற்பதற்கு தடை விதித்து, அமில வீச்சால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் தலா 3 இலட்சம் ரூபாய்  இழப்பீடு வழங்க ஆணையிட்டார். 
  • Satya Pal Anand vs. State of MP [2013 (10) SCALE 88) என்ற மற்றொரு வழக்கில் வன்புணர்வு குற்றத்தால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு 10 இலட்ச ரூபாய் வழங்க ஆணையிட்டார். 
  • Deepak Aggarwal v. Keshav Kaushik என்ற வழக்கில், அரசு குற்ற வழக்கறிஞராக அல்லது அரசு உரிமையியல் வழக்குரைஞராக நியமனம் செய்யப்படும் ஒருவர், 1961-ஆம் ஆண்டின் வழக்குரைஞர் சட்டம் மற்றும் இந்திய வழக்குரைஞர் மன்ற விதிகளின் கீழ் 'வழக்குரைஞர்' -ஆக செயல்படுவதற்கு அற்றவர் ஆகிவிட மாட்டார் என்று தெளிவு படுத்தினார். 
  • விசாகா - 2 என்று சிறப்பாக அழைக்கப்படும் Medha Kotwal Lele v. Union of India என்ற வழக்கில், பாலியல் தொந்தரவுகளில் இருந்து பெண்களை பாதுகாக்க மேலும் பல வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துரைத்தார். 
  • Bar Council of India v. Union of India என்ற வழக்கில் 'நிரந்தர மக்கள் மன்றங்களை' கட்டமைக்க வகை செய்யும் 1987-ஆம் ஆண்டின் சட்டப் பணிகள் ஆணைக்குழுக்கள் சட்டப்  பிரிவு 6எ-இன் செல்லுந்தன்மையை நிலை நிறுத்தினார்.

அண்மையில் மேனாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.கே.கங்குலிக்கு எதிராக, அவரிடம் சட்டப் பயிற்சிக்காக சேர்ந்த பெண் ஒருவர் செய்த பாலியியல் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரித்த மூன்று நபர் அடங்கிய குழுவிற்கு நீதியரசர் லோதா தலைமை வகித்தார். அப்பெண்ணின் எழுத்துபூர்வமான மற்றும் வாய்மொழியான வாக்கு மூலங்களை பதிவு செய்த இக்குழு தனது முடிவில் 'வரவேற்கத்தக்கதற்ற நடத்தை'-க்கான செயலை அவை வெளிப்படுத்துவதாக கூறியது. இதன் விளைவாக நீதியரசர் கங்குலி தான் வகித்து வந்த மேற்கு வங்க மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவர் பதவியை துறந்தார். 

Comments