நுகர்வோருக்கு தகவல் அளிக்காத பொதுத் தகவல் அலுவலர் இழப்பீடு வழங்க வேண்டும் ...!

ஆசிரியர் ஒருவருக்கு இழப்பீடு வழங்கும்படி ஆசிரியர் தேர்வு வாரியத்தின் பொதுத் தகவல் அலுவலருக்கு நுகர்வோர் மன்றம் ஆணையிட்டுள்ளது.


வினாத்தாளில் கேட்கப்பட்ட மூன்று கேள்விகளுக்கு சரியான விடைகளை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டும் அளிக்காத காரணத்தால் மன உளைச்சல் அடைந்த ஆசிரியர் ஒருவருக்கு இழப்பீடு வழங்கும்படி கரூர் நுகர்வோர் குறை தீர்மன்றம் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் பொதுத் தகவல் அலுவலருக்கு ஆணையிட்டுள்ளது.

கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் என். அரசகுமாரன். இவர் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதினார். தேர்வை சிறப்பாக எழுதியதாக நம்பிய இவர், தனக்கு அரசுப் பணி கிடைத்து விடும் என்றும் நம்பினார். 

தேர்வு எழுதிய பிறகு வினாக்களுக்கு உண்டான விடைகளை  தரும் புளு பிரிண்ட்-ஐ ஆசிரியர் தேர்வு வாரியம் இணைய தளத்தில் வெளியிட்டது. அதை அரசகுமாரன் சரிபார்க்கும் போது, அவற்றில் பொருளாதாரப் பாடத்தில் கேட்கப்பட்ட மூன்று கேள்விகளில் இரண்டு கேள்விகளுக்கு ஒவ்வொரு கேள்விக்கும் இரண்டு விடைகள் தரப்பட்டிருந்தன. அதே நேரத்தில் வேறு மூன்று கேள்விகளுக்கு விடைகள் தரப்படவில்லை. புளு பிரிண்டில் உள்ள இந்தக் குழப்பத்தை விளக்கும்படியும், சரியான விடைகள் என்ன என்று கேட்டும்  அரசகுமாரன் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் பொதுத் தகவல் அலுவலருக்கு விண்ணப்பம் செய்தார். அத்துடன் சரியான விடைகளைக் கொண்ட தேர்வு வழிகாட்டி ஒன்றையும் இணைத்திருந்தார். ஆனால் இதற்கு எந்த ஒரு தகவலையும் பொதுத் தகவல் அலுவலர் அளிக்கவில்லை. இதனால் கடும் மன உளைச்சல் அடைந்த அரசகுமாரன் பொது தகவல் அலுவலருக்கு எதிராக கரூர் நுகர்வோர் குறை தீர் மன்றத்தில் வழக்கிட்டார்.

வழக்கின் போது, தனக்கு சரியான விடைகளை உரிய காலத்தில் வழங்கி இருந்தால், சம்பந்தப்பட்ட அதிகார அமைப்புகளை அணுகி வேலை வாய்ப்புக்கு முனைந்து இருப்பேன் என்றும், தனக்கு அரசு ஆசிரியர் பணி கிடைத்திருக்கும் என்றும் வாதிட்டார்.

இதைக் கேட்டறிந்த கரூர் மாவட்ட  நுகர்வோர் குறை தீர் மன்ற தலைவர் நீதிபதி பி.இராமகிருஷ்ணன், உறுப்பினர் பி.விசாகன் அவர்கள், தகவல் கேட்டு உரிய காலத்தில் தகவல் அளிக்காதது ஒரு சேவைக் குறைபாடு ஆகும் என்றும், தகவல் அளிக்காத பொது தகவல் அலுவலர் சேவைக் குறைபாடு செய்தவர் என்றும், எனவே புகார்தாரர் அரசகுமரனுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக அவர் ரூ.5000/- இழப்பீடு  வழங்க வேண்டும் என்றும், வழக்கு செலவுத் தொகையாக ரூ. 500/- வழங்க வேண்டும் என்றும் ஆணையிட்டனர். 

Comments

என். அரசகுமாரன் அவர்களுக்கு பாராட்டுக்கள்...

தகவலுக்கு நன்றி...
உரிய காலத்தில் தகவல் அளிக்காதது ஒரு சேவைக் குறைபாடு ஆகும் என்று அறியவைத்த பகிர்வுக்கு நன்றிகள்...