குத்தி விடும் ஆண்கள்
'பல்வேறு ஆண்களின் ராசி பலன்கள்" என்ற சென்ற பதிவின் முடிவில் குத்தி விடும் ஆண்களைப் பற்றி தனியாக ஒரு பதிவு எழுத வேண்டும் என்று சொல்லி முடித்திருந்தேன். அதை இங்கு தருகின்றேன்.
குத்தி விடும் பெண்களும் உண்டு. இவர்களுக்கு அறிவு வேலை செய்யாது. குத்தி விட்டு தானும் மாட்டிக் கொண்டு மூக்கறுபடுவர். ஆனால் குத்தி விடும் ஆண்கள் அபாயகரமானவர்கள்.
அதென்ன குத்தி விடுவது?
ஒரு பிரச்சனையில் இருவரையும் குத்தி விட்டு குளிர் காய்வது அல்லது சுய லாபம் அல்லது பலன் பெறுவது. எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம் ! பிரச்சனைக்குரிய இருவர் எப்படி வேண்டுமானாலும் போகட்டும் !! அவர்கள் பிரச்சனையில் நாம் பிழைத்தால் சரி என்ற மனப்போக்கை கொண்ட ஆண்கள். கிட்டத்தட்ட கோள் மூட்டுவது அல்லது தூபம் போடுவது இவர்களுக்கு கை வந்த கலை. சகுனியை விஞ்சிய எத்தர்களாக இவர்களை கிரகங்கள் செயல்பட வைக்கும். இவர்கள் பேச்சில் மயங்கி விட்டால் பிரச்சனை மேலும் வலுவடையுமே தவிர, தீராது. இதுதான் இவர்கள் எதிர்பார்க்கும் ஒன்று.
குத்தி விடும் ஆண்கள் இருக்குமிடம் !
இவர்கள் எங்கு இருப்பார்கள் என்று வலை வீசித் தேட வேண்டியதில்லை. நம்முடனே இருப்பார்கள். நம்பிக்கையாக, உண்மையாக, நட்பாக நடப்பதாக காட்டிக் கொள்வார்கள். ஆனால் மெல்ல மெல்ல படிப்படியாக குத்தி விட்டுக் கொண்டே இருப்பார்கள். இவர்களை எவ்வளவு விரைவாக இனம் அல்லது அடையாளம் கண்டு கொள்ள முடிகின்றதோ அவ்வளவுக்கு நல்லது. உடனே இவர்களை மெல்ல கழட்டி விட்டு விட வேண்டும்.
குத்தி விடும் ஆண்கள் என்ன செய்வார்கள் ?
பிரச்சனைக்குரிய நபர்களுக்கு இவர்கள் பொதுவான, மிகவும் அறிமுகமான, அதாவது ஒரு நண்பராக, உறவினராக இருப்பார். பிரச்சனையில் ஆலோசனை சொல்கின்றேன் பேர்வழி என்று மார் தட்டிக் கொண்டு பிரச்சனையை பெரிது படுத்துவார்கள். இவரே பிரச்சனையின் மறு பக்கத் தரப்பினரிடம் சென்று "அவர்கள் ஏதேதோ செய்கின்றார்கள்... நீங்கள் பேசாமல் இருந்தால் எப்படி...?" என்று தூபம் இடுவார்கள். இவர் வழங்கும் ஆலோசனைக்கு இரு தரப்பினரிடம் இருந்தும் மற்றவருக்கு தெரியாமல் இவர் பணம் பெறலாம். அல்லது இவருக்கு மரியாதை கிடைக்கலாம் அல்லது சம்பந்தப்பட்டவர்கள் தங்களுக்கு பக்க பலமாக இருக்கின்றார் என்ற நம்பிக்கையில் இவரிடம் வேறு பணிகளை சன்மானத்தின் அடிப்படையில் ஒப்படைக்கலாம் அல்லது குடும்ப இரகசியங்களை சொல்லலாம். குத்தி விடும் ஆண், எல்லாவற்றையும் சமயம் பார்த்து பயன்படுத்தி கொண்டே வருவர். ஒரு கட்டத்தில் தனக்கு தெரிந்த விவரங்களை சம்பந்தப்பட்டவருக்கு எதிராகவே பயன்படுத்தவும் இவர்கள் தயங்க மாட்டர். இவர்களை அடையாளம் கண்டு கொள்ளாமல் இவர்களிடம் சிக்கிக் கொண்டால் கிட்டத்தட்ட் சனி பிடித்த மாதிரிதான்.
குத்தி விடும் ஆண்களின் சூட்சுமம் !!
பிரச்சனைக்குரிய நபர்களை தூண்டி விட்டு ஆதாயம் அடைவது இவர்கள் வேலை. அவ்வாறு தூண்டி விட வேண்டுமானால், தரப்பினர்கள் சமரசம் அடைந்து விடக்கூடாது. எனவே இரண்டு பக்கமும் ஒரு நல்ல நண்பராகவே இவர்கள் பழகி இருவரையும் ஒருவரை மற்றவருக்கு எதிராக குத்தி விட்டுக் கொண்டே இருப்பார். ஆனால் பேசும் போது எதிர் தரப்பினரை தனது ஜென்ம விரோதியாக கருதி பேசி ஒரு தரப்பினரை உசுப்பேத்துவர். "அவரு ஏதாவது பண்றத்துக்கு முன்னாடி, நாம இப்படி செஞ்சிடரது நல்லது... அதுக்கு என்கிட்டே ஒரு 'ஃபிட் பெர்சன்' இருக்காரு... அவருகிட்டே கொஞ்சம் ஃபீஸ் கொடுத்தா போதும்... அவர் பட்டையை கிளப்பிடுவாரு" என்று ஒரு தரப்பினரிடமும், "அவங்களுக்கு எவ்வளவு துணிச்சல் இருந்த இப்படி பண்ணுவாங்க.... அவங்களை லேசுலே விடக்கூடாது, இருங்க என்ன செய்றது என்று ரூம் போட்டு யோசிக்கின்றேன்" என்று மற்றொரு தரப்பினரிடமும் பேசி பிரச்சனையை வளர்த்துவர். தரப்பினர்களை அவ்வளவு எளிதில் இணக்கமாக விட மாட்டர்.
குத்தி விடும் ஆண்களிடமிருந்து விலகுவது எப்படி ?
பிரச்சனைக்குரிய நபர்களை தூண்டி விட்டு ஆதாயம் அடைவது இவர்கள் சுபாவம். பிரச்சனையில் யாராவது ஒருவர் இறங்கி வந்தால் இவர்களுக்கு வேலை இல்லை. "என்னங்க... நான் ஏதேதோ யோசனை சொன்னேன்.. இப்படி மோசம் போயிட்டீங்களே" என்று ஒரு போலி ஒப்பாரி வைத்து விட்டு கிளம்பி விடுவர். எனவே அடையாளம் தெரிந்து கொண்ட இவர்களை, "எல்லாம் நாங்க பாத்துகிறோம்... நீ கிளம்பு ஃபர்ஸ்ட்" என்று லேசாக கழுத்தின் மீது கை வைத்து நட்பாக நெட்டித் தள்ளி விட வேண்டும். அதுதான் புத்திசாலித்தனம்.
பல குடும்பங்கள், தொழில்கள், உறவுகள் இத்தகு சுயநல ஆண்களால் சிதைந்து போனது என்பதுதான் நிதர்சனம்.
முடிவாக, புழுவை விட கேவலமான இவர்களை உடனே அடையாளம் கண்டு களையுங்கள் நண்பர்களே...!
Comments
வாழ்க வளமுடன்
கொச்சின் தேவதாஸ்