பாங்காக்கில் உள்ள Forum Asia அமைப்பு

Forum Asia - இது மனித உரிமை மற்றும் அதன் மேம்பாட்டிற்காக செயல்பட்டு வரும் ஓர் பெரும் அமைப்பாகும். இதன் அலுவலகம் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் அமைந்துள்ளது.

எனது தாய்லாந்து சுற்றுப்பயணம் ஒரு சுற்றுலாவாக இருந்தாலும், ஆசியப் புகழ் பெற்ற இந்த Forum Asia அமைப்பை கண்டு வரும் வாய்ப்பையும் உள்ளடகியதாக இருந்தது. அமைப்பு நிருவாகிகளும் அழைப்பு விடுத்திருந்தனர்.

உலகின் போக்குவரத்து நெருக்கடி மிக்க நகரங்களில் மூன்றாவது இடத்தில உள்ள பாங்காக் நகரில் அமைந்துள்ள Forum Asia என்ற இந்த அமைப்பு மனித உரிமை மீறல்களை சட்ட முறையில் தட்டிக் கேட்டு அதன் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டிற்காக சிறப்பாக செயல் பட்டு வருவதும் ஆசியா முழுவதிலும் உள்ளதுமான 41 மனித உரிமை அமைப்புகளை உறுப்பினர்களாக கொண்டதும் ஆகும். நமது நாட்டைப் பொறுத்தவரை வழக்குரைஞர் திரு ஹென்றி டிபென் அவர்களை நிருவாகத்  தலைவராக கொண்டு செயல்பட்டு வரும் 'மக்கள் கண்காணிப்பகம்' உள்ளிட்ட 6 அமைப்புகள் இதில் உறுப்பினர்களாக உள்ளன. இதில் பெருமைக்குரிய அம்சம் என்னவென்றால், திரு டிபென் அவர்கள் இந்த Forum Asia அமைப்பின் நிருவாகக் குழு உறுப்பினராக உள்ளார்.

என்னுடன் மக்கள் கண்காணிப்பக மண்டல சட்ட அலுவலர் ஏ. அசோகன், மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்க சட்ட ஆலோசகர்கள் வழக்குரைஞர் ஆர்.மோகன முரளி, கே. திருமுகம், ஆர்.ராஜேந்திரன் ஆகியோர் வந்திருந்தனர். அனைவரும் எங்கள் தாய்லாந்து சுற்றுலா பயண அட்டவணையிலிருந்து ஒரு நாள் ஒதுக்கி மேற்படி அமைப்பை சென்று பார்வையிட்டு, அதன் நிருவாகிகளிடம் கலந்துரையாடிவிட்டு வந்தோம்.

எங்களை அந்த அமைப்பின் தெற்காசிய இயக்குனரும் நேபாள நாட்டைச் சேர்ந்த வழக்குரைஞருமான திரு. சூர்யா வரவேற்றார். அங்கு பயிற்சி பெற்று வரும் நமது தமிழகத்தைச் சேர்ந்த திரு ஜெயராமன் இதர நிருவாகிகளையும், பல நாடுகளிலிருந்து அங்கு வந்து தங்கி மனித உரிமை பயிற்சி பெறுனர்களையும் அறிமுகம் செய்து வைத்து அலுவலகத்தை சுற்றிக் காண்பித்தார்.

பிறகு இயக்குனர் திரு சூர்யாவுடன் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியின் போது, இந்தியாவில் மனித உரிமை மீறல்கள் மற்றும் பாதுகாப்பு பற்றிய கருத்துகளை அவர் விவாதித்தார். குறிப்பாக வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது அதிரடிப்படையினரின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக மக்கள் கண்காணிப்பகம் எடுத்த நடவடிக்கைகள் பற்றி அவர் ஆர்வமுடன் கேட்டறிந்தார். மேலும் மணிப்பூரில் இராணுவத்தினருக்கு கொடுக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரம், அங்கு வாழும் மக்களின் மனித உரிமைகளை பறிப்பதை சுட்டிக்காட்டி பேசினார்.

தொடர்ந்து ஆசியா நாடுகளில் நிகழ்ந்து வரும் பல்வேறு மனித உரிமை மீறல்களை உறுப்பு அமைப்புகளின் தோழமையுடன் எதிர்கொள்வது எப்படி என்பதை பற்றிய தனது சிந்தனைகளை அவர் பகிர்ந்து கொண்டார். இதையடுத்து அங்கிருந்த நூலகத்தையும், மனித உரிமை பரப்புரைக்காக வெளியிடப்பட்ட பதாகைகளையும் அவர் காட்டினார்.

இச்சந்திப்பின் முடிவில் உள்ளுறை பயிற்சி பெறுநர்கள் பேன்க், டெரிக், தினேஷ் கனால், மந்தா ஆகியோர் வாழ்த்துகளை தெரிவித்து அன்புடன் எங்களை வழியனுப்பி வைத்தனர்.
 
பயணத்திற்கு கிளம்புகிறேன்... ரெடி ஜுட் .....

பாங்காக்கில் உள்ள இந்திய உணவகம் (கரம் மசாலா ரெஸ்டாரென்ட்) ஒன்றில் வயிறு நிறைந்தது ....

கப்பலில் கேண்டில் லைட் டின்னர்...
"காட்டுலே மேட்டுலே உழைச்சவன்  நான் .... ஆடிட பாடிட வேண்டாமா... " 

Forum Asia -வின் தெற்காசிய இயக்குனர் திரு சூர்யாவுடன் வழக்குரைஞர்கள்
மற்றும் நான்

தமிழகத்தை சேர்ந்த பயிற்சி பெறுனர் திரு ஜெயராமனுடன் நாங்கள்
(இடமிருந்து வலமாக மூன்றாவது)

Forum Asia-வில் பயிற்சி பெறும் மற்றவர்களுடன் நாங்கள்..

Forum Asia-வில் பயிற்சி பெறும் மற்றவர்களுடன் நாங்கள்..

Forum Asia-வில் அமைந்திருக்கும் நூலகம்...

Forum Asia-வில் வைக்கப்பட்டுள்ள மனித உரிமை பரப்புரை பதாகைகள்...

இலங்கை நாட்டுப் பயணத்துடன் பயணம் இனிதாக நிறைவடைந்தது

Comments

ரவி said…
நல்ல பதிவு ! இன்னும் படங்கள் போடவும் !!!
நன்றி... செய்கிறேன்...