மாவட்ட நீதிபதி தேர்வு எழுதுவோரின் கனிவான கவனத்திற்கு...


மாவட்ட நீதிபதி தேர்வு:

மாவட்ட நீதிபதி பதவிக்கு (புகு நிலை) தகுதியானவர்களை தேர்ந்தெடுக்க தமிழக அரசு தேர்வு வைத்துள்ளது. மொத்தம் 17 இடங்கள். அவற்றில் 5 பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 7 ஆண்டுகள் வழக்குரைஞராக சட்டத் தொழில் புரிந்து வருபவர்கள் இதற்க்கான தேர்வை எழுதலாம். இதை சென்னை உயர் நீதிமன்றம் நடத்துகிறது. எழுத்துத் தேர்வும் வாய்மொழித் தேர்வும் (நேர்காணல்) நடத்தப்படும். இதற்கான விண்ணப்பப்படிவ மாதிரியை அண்மையில் தமிழக அரசு எல்லா செய்தித் தாள்களிலும் விளம்பரப்படுத்தியுள்ளது.

மேலும் http://www.tn.gov.in/departments/public/DJ_Advt_Notification_160710.pdf  என்ற வலைதளத்திலும் காணலாம்.


முக்கிய நாட்கள்:

விண்ணப்பப்படிவதுடன் சட்டத் தொழில் அனுப சான்றிதழ், நன்னடத்தை சான்றிதழ் போன்றவற்றை இணைக்க வேண்டும். விண்ணப்பப்படிவங்கள் சென்று சேர வேண்டிய இறுதி நாள் : 16-07-2010. தேர்வு நடக்கும் நாள் : 01-08-2010. சென்னையில் தேர்வு நடத்தப்படும். தேர்வு இடம் பின்னர் அறிவிக்கப்படும். தேர்வுக்கட்டணம் ரூபாய் 250/-. விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி : The Secretary to Government of Tamil Nadu, Pubilc (Special A) Department, Secretariat, Chennai 600 009.

சம்பளம்:

Rs. 16750-400-19150-450-20500 (Pre revised scale)

வயது வரம்பு:

45 வயதை நிறைவு செய்து இருக்கக் கூடாது. SC/ST-க்கு 48 வயது. (01-07-2010 அன்று)


தேர்வுகள் :
 
3 மணி நேர கால அளவு கொண்ட தேர்வு நடத்தப்படுகிறது. அதில்

Law Paper - I (Civil)
Law Paper - II (Criminal)
Law Paper - III (General)

என்ற 3 பகுதிகள் உள்ளன. மேற்கண்ட ஒவ்வொரு பகுதிக்கும் தலா 25 மதிப்பெண்கள். மொத்தம் 75 மதிப்பெண்கள். மீதமிருக்கும் 25 மதிப்பெண்கள் வாய்மொழி தேர்வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

வினாத்தாள் எந்த வடிவில் இருக்கலாம்? எப்படி கேள்விகள் வரலாம்?

வினாத்தாள் எந்த வடிவில் இருக்கலாம் என்பதற்கு எந்த மாதிரியையும் தமிழக அரசோ, சென்னை உயர் நீதிமன்றமோ தெரிவிக்கவில்லை. எனினும் ஊகிக்க முடிந்தது என்னவென்றால்,-

1 . ஒவ்வொரு பகுதிக்கும் 25 மதிப்பெண்கள் மட்டுமே என்பதால் 25 வினாக்கள் கேட்டு அதற்கு 3 வரிகளில் விடையளித்தால் தலா ஒரு மதிப்பெண் கொடுக்கப்படலாம். அல்லது 5 வினாக்கள் கேட்டு அதற்கு தலா 5 மதிப்பெண்கள் கொடுக்கப்படலாம்.

2 . Law Paper I - இது உரிமையியல் சட்டம் சம்பந்தப்பட்டது என்பதால் இதில் உரிமையியல் நடைமுறை சட்டம், கால வரையறை சட்டம், சொத்துரிமை மாற்றுச் சட்டம், வசதியுரிமை சட்டம், குறித்த வகை நிவாரண சட்டம், நீதிமன்ற முத்திரை மற்றும் வழக்கு மதிப்பீடு சட்டம், உரிமையியல் நீதிமன்ற நடைமுறை விதிகள் போன்ற உரிமையியல் வழக்கு தொடர்பான சட்டங்களிலிருந்து கேள்விகள் கேட்கப்பட வாய்ப்புண்டு.

3. Law Paper II - இது குற்றவியல் சட்டம் சம்பந்தப்பட்டது என்பதால் இதில் குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சிய சட்டம், இதர குற்றவியல் சட்டங்களிலிருந்து (Minor Criminal Acts) கேள்விகள் கேட்கப்பட வாய்ப்புண்டு.

4. Law Paper III - இது பொதுவான சட்டம் சம்பந்தப்பட்டது என்பதால் இதில் இந்திய அரசியலைமைப்பு சட்டம், வாதுரை சட்டம், இசைவுத் தீர்ப்பு மற்றும் சமரச முறை சட்டம், மனித உரிமை பாதுகாப்பு சட்டம், நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் போன்ற பொதுவான சட்டங்களிலிருந்து கேள்விகள் கேட்கப்பட வாய்ப்புண்டு.

5. விடையில் சரியான சட்டப் பிரிவை குறிப்பிட்டு எழுதுதல் மதிப்பெண்ணை பெற்றுத் தருவதாக அமையும்.

6 . பிரச்சனைகள் வடிவிலும் கேள்விகள் கேட்கப்பட வாய்ப்புண்டு.

7. வாய்மொழித் தேர்வானது, கேள்வி கேட்பதற்காக அமரும் நீதியரசரின் சிந்தனையை பொருத்தது.

நீண்ட கால இடைவெளிக்கு பிறகு மீண்டும் வந்திருக்கும் இந்தத் தேர்வை நன்முறையில் எழுதி, வாய்மொழித் தேர்விலும் வெற்றி பெற வாழ்த்துகள்!

Comments