ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வதால் பிறக்கும் குழந்தைகளுக்கு மூதாதையர் சொத்தில் பங்கு இல்லை - இந்திய உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.
உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு:
இந்து திருமண சட்டத்தின் பிரிவு 16 என்ன சொல்கிறது?
சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு:
கீழமை நீதிமன்றத்தில் எழுந்த வழக்கின் சங்கதிகள்:
ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழும் உறவில் (live-in-relationship) பிறக்கும் குழந்தை இந்து மூதாதையர் பங்குரிமை சொத்தில் வாரிசுரிமை கோர முடியாது என்றும், அக்குழந்தை பெற்றோர்களின் சுய சம்பாத்திய சொத்து ஏதும் இருந்தால் அதில் வேண்டுமானால் பாகம் கோரலாம் என்றும் நமது இந்திய உச்ச நீதிமன்றம் மாறுபட்ட, அதிரடியான முக்கியத் தீர்ப்பு ஒன்றை கடந்த வாரம் மேல்முறையீடு வழக்கு ஒன்றில் நல்கியுள்ளது.
இந்து திருமண சட்டத்தின் பிரிவு 16 என்ன சொல்கிறது?
இந்து திருமண சட்டம் பிரிவு 16-ஆனது முறையற்ற மணபிறப்பு குழந்தைகளைப் பொறுத்த வரையில் ஓர் சட்டங்கொள் புனைவு (legal fiction) உரிமையை உருவாக்கியுள்ளது. அதாவது இல்லா நிலை மற்றும் தவிர்தகு நிலை திருமணத்தின் வாயிலாக பிறக்கும் குழந்தைகளின் சட்டமுறை நிலை (Legitimacy of children of void and voidable marriages) குறித்து அது கூறுகிறது. சற்று விளங்கச் சொன்னால், இந்து திருமண சட்டத்தின் வகைமுறைகளில் ஒரு இந்து ஆண் அல்லது பெண் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்றால் அதற்கு சில நிபந்தனைகள் வரையறுக்கபட்டுள்ளன. எடுத்துக்காட்டாக ஒரு இந்து ஆணோ, பெண்ணோ திருமணம் செய்து கொள்ளும் காலத்தில் அவருக்கு ஏற்கனேவே திருமணம் ஆகி அந்த வாழ்க்கைத் துணை உயிருடனோ அல்லது அத்திருமணம் சட்ட முறையில் இரத்து ஆகாமல் அமலிலோ இருத்தல் ஆகாது. ஆனால் அப்படி இருந்து அந்த இந்து ஆணோ, பெண்ணோ மீண்டும் மற்றொருவரை திருமணம் செய்து கொண்டால் அது சட்டப்படி செல்லாது. அது வெறுமனே சேர்ந்து வாழும் உறவு முறை (live-in-relationship) மட்டுமே ஆகும். அப்படிப்பட்ட கணவனோ, மனைவியோ முறையே 'சட்டமுறையற்ற கணவன் அல்லது மனைவி' (Illegitimate husband or wife) என்று மட்டும்தான் ஆவர். இப்படிப் பட்டவர்களுக்கு ஒருவர் மற்றொருவருக்கு எதிராக எந்த சட்ட உரிமையும் எழாது. வாழ்கை பொருளுதவியோ (ஜீவனாம்சம்), சொத்தில் உரிமையோ கோர இயலாது. இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் "சட்டமுறையற்ற மணப் பிறப்பு குழந்தைகள்" (Illegitimate children) ஆகின்றனர். எனினும் மேற்படி பிரிவு 16-ஆனது இப்படிப்பட்ட "சட்டமுறையற்ற மணப் பிறப்பு குழந்தை களுக்கு" பெற்றோர்களின் சொத்தில் வாரிசுரிமை கொண்டாடும் உரிமை உள்ளிட்ட எல்லா நடைமுறை நோக்கங்களுக்கும் அக்குழந்தைகள் சட்ட முறை மணப் பிறப்பு குழந்தைகளாகவே பாவிக்கப்பட வேண்டும் என்று ஒரு புனைவான உரிமையை சட்டப்படி வழங்கியுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு:
முன்னதாக இந்த வழக்கின் இரண்டாம் மேல்முறையீட்டு நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியிருந்தது. அதன்படி, நீண்ட கால உறவில் வாழும் போது அங்கு திருமண உறவு உள்ளது என்ற அனுமானம் இருப்பதால், அப்படிப்பட்ட வாழ்க்கை உறவில் பிறக்கும் குழந்தைகளுக்கு மூதாதையர் சொத்தில் பங்குரிமை உள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருந்தது. ஆனால் இத்தீர்ப்பை உச்ச நீதிமன்றத்தின் கோடை விடுமுறை கால மாண்பமை நீதியரசர்கள் திரு பி.எஸ். சவுஹன், சுவேதந்தர் குமார் ஆகியோர் அடங்கிய ஆயம் இரத்து செய்து அப்படிப்பட்ட குழந்தைகளுக்கு மூதாதையர் சொத்தில் பங்குரிமை இல்லை என்று தீர்ப்புரைத்தது.
கீழமை நீதிமன்றத்தில் எழுந்த வழக்கின் சங்கதிகள்:
இவ்வழக்கின் சங்கதிகள்படி, ரங்கம்மாள் என்பவர் முத்து ரெட்டியார் என்பவருடன் 'வாழ்கை உறவு முறையில்' வாழ்ந்து வந்ததாகவும், அதன் வாயிலாக இரண்டு குழந்தைகள் பிறந்ததாகவும், எனவே அக்குழந்தைகளுக்கு முத்து ரெட்டியாரின் மூதாதையர் சொத்தில் பாகம் கேட்க உரிமை உண்டு என்றும் கோரி வழக்கிட்டார்.
இந்நிலையில் முத்து ரெட்டியாரின் மூதாதையர் சொத்தின் மீது 'முந்தைய உரிமை உள்ளவர்களான' (predecessor-in-interest) ஒரு பாரத மாதா என்பவரும் மற்றொருவரும் ரங்கம்மாளின் மேற்படி வழக்குக் கோரிக்கையை எதிர்த்து அவர் மீது ஒரு வழக்கை தாக்கல் செய்கின்றனர். அதில் ரங்கம்மாள் என்பவர் ஒரு அழகர்சாமி ரெட்டியார் என்பவரின் சட்டப்படியான மனைவி ஆவர் என்றும், அவருக்கும் முத்து ரெட்டியருக் கும் மண வாழ்கை உறவு முறை ஏதும் இல்லை என்றும் வாதுரைத்திருந்தனர்.
இந்த இரண்டு வழக்கையும் விசாரித்த கீழமை விசாரணை நீதிமன்றம் ரங்கம்மாள் என்பவர் அழகர்சாமி ரெட்டியார் என்பவரின் மனைவி என்றும், மேற்படி ரங்கம்மாள் முத்து ரெட்டியருடன் வாழ்த்த பொழுது அழகர்சாமி ரெட்டியார் உயிருடன் இருந்து உள்ளார் என்றும் தீர்ப்புரைத்து, மேற்படி பாரத மாதாவும், மற்றொருவரும் தாக்கல் செய்த வழக்கில் அவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு கூறியது.
இத்தீர்ப்பை முதல் மேல்முறையீட்டு நீதிமன்றமும் உறுதி செய்தது. ஆனால் இதை இரண்டாம் மேல்முறையீட்டில் சென்னை உயர் நீதிமன்றம் இரத்து செய்து ரங்கம்மாளின் இரண்டு குழந்தைகளும் முத்து ரெட்டியாரின் மூதாதையர் சொத்தில் பாகம் கோர உரிமை உண்டு என்று தீர்ப்பு வழங்கியது.
இத்தீர்ப்பை எதிர்த்து பாரத மாதாவும், மற்றொருவரும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இதை ஆராய்ந்த உச்ச நீதிமன்றம், வழக்கின் ஆவணங்களில் இருந்து முத்து ரெட்டியார் தனது கூட்டுக் குடும்ப சொத்தை பாகப்பிரிவினை செய்யவில்லை என்பதும், அவர் உயில் ஏதும் எழுதி வைக்காமல் 1974-ஆம் ஆண்டில் இறந்து விட்டார் என்பதும் தெளிவாக தெரிகிறது. எனவே மண உறவு முறையில் சேர்ந்து வாழ்ந்ததால் பிறந்த சட்டமுறையற்ற மணப் பிறப்பு குழந்தைகளுக்கு முத்து ரெட்டியாரின் மூதாதையர் சொத்தில் பாகம் கோர உரிமை உண்டா என்ற கேள்வியே எழாது என்றும், அவர்களுக்கு அத்தகு உரிமை இல்லை என்றும் தீர்ப்பு வழங்கியது.
இத்தீர்ப்பை எழுதும் போது மாண்பமை நீதியரசர் சவுஹான், "உயர் நீதிமன்றம் ஆவண சாட்சியங்களை மீண்டும் பரிசீலித்து இரண்டு கீழமை நீதிமன்றங்களும் எடுத்திருந்த முடிவிற்கு முரணாக ஒரு முடிவை எடுத்துள்ளது. சட்டம் சார்ந்த முக்கிய பிரச்சனை ஏதும் உள்ளடங்கி இருக்காத நேர்வில் இரண்டாம் மேல்முறையீட்டில் உயர் நீதிமன்றம் சாட்சியங்களை மீண்டும் பரிசீலனை செய்திருப்பது சரியானதல்ல. இரண்டு கீழமை நீதிமன்றங்களும் ரங்கம்மாள் என்பவர் அழகர்சாமி என்பவரின் சட்டப்படியான மனைவி என்பதை பதிவு செய்துள்ளது" என்று பகர்ந்துள்ளார்.
முடிவில் பாரத மாதா மற்றும் மற்றொருவரின் மேல்முறையீட்டை அனுமதித்து சென்னை உயர் நீதிமன்றத்தின் குறையுடைய தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இரத்து செய்தது.
Comments
It is time, live-in relationships too are legally defined and the 'rights' and 'liabilities' defined. It will of course be messy to discuss the aspects of such relationships; but, if the actors or their progeny have to knock at the doors of the law courts, it will be worthwhile to conceive a law, to minimise legal wrangles, crowding out the courts' valuable time discussing the nature of intimacy between live-in partners.
It would be of interest to know how the 'west', where such relationships are rule than an exception, deal with this phenomenon.