சூர்யா 'சிங்கம்' கர்ஜிக்கிறது
எனது மகன் நடிகர் சூர்யாவின் தீவிர இரசிகர். அவர் சூர்யா நடித்து தற்போது வெளிவந்துள்ள 'சிங்கம்' என்ற திரைப்படத்திற்கு இரண்டு நுழைவுச்சீட்டுகளை முன்பதிவு செய்து கொண்டு வந்தார். படம் பார்க்கும் மனநிலை இல்லை என்றாலும் மகன் அழைத்தாரே என்ற காரணத்திற்காக நேற்று அந்த படத்திற்கு சென்று பார்த்தேன். நல்ல படம்தான்.
மிரட்டி பணம் பறிக்க ஆட்கடத்தல் செய்யும் கும்பலை மையமாக வைத்து காதல், நகைச்சுவை, அடிதடி ஆகியவற்றை கலந்து ஜனரஞ்சகமாக சிங்கத்தை கர்ஜிக்க வைத்துள்ளது சன் பிக்சர்ஸ். ஆட்கடத்தல் தடுப்பு சிறப்பு பிரிவு காவல் உதவி ஆணையராக வரும் சூர்யா தனது பாத்திரத்தை நன்றாக செய்துள்ளார். காக்கி உடை நன்கு பொருந்தும் மற்றொரு நடிகராக சூர்யா ஆகிவிட்டார்.
வசதியான வீட்டுப் பிள்ளைகளை குறி வைத்து ஆட்கடத்தல் கும்பல் (பிரகாஷ் ராஜ் பார்ட்டி) பிடித்துக் கொண்டு போவதும், பிறகு பணம் கேட்டு மிரட்டி செல்பேசி வந்ததும் 50 லட்சமோ, 1 கோடியோ சத்தமில்லாமல் கொண்டு வந்து வைத்துவிட்டு தங்கள் பிள்ளைகளை பெற்றோர்கள் மீட்டுக் கொண்டு செல்வதும் சென்னை மாநகரில் ஒரு வாடிக்கையான செயலாக ஏதோ அல்வா வியாபாரம் போல காட்டியிருப்பது நெருடுகிறது. எனினும் இத்தகு குற்றங்கள் தற்போது சற்று பெருகி வருகிறது என்பதையும் எண்ணிப்பார்க்க வேண்டியுள்ளது. (சென்னை நகரில் கடந்த 5 ஆண்டுகளில் ஆட்கடத்தல் வழக்குகள் எத்தனை பதிவாகி உள்ளன, எத்தனை பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர், தண்டனை பெற்ற குற்றவாளிகள் எத்தனை பேர், நிலுவையில் உள்ள வழக்குகள் எத்தனை என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் பிரிவு 6(1)-இன் கீழ் கேட்கலாம் என்று நினைத்துள்ளேன். ஹி.. ஹி.. ஒரு அகடமிக் இண்டரஸ்ட்தான்!)
அனுஷ்கா அழகில் மட்டுமல்ல நடிப்பிலும் தேர்ந்து வருகிறார். எல்லாப் பாடல்களும் அருமை. பின்னணி இசை காதை உறுத்தவில்லை. சண்டைக் காட்சிகளில் அனல் பறக்கிறது. அனுஷ்காவின் அப்பாவாக வரும் நாசரின் நடிப்பு அவருக்கே உரிய பாணியில் அமைந்துள்ளது. விவேக் காமெடி கொஞ்சம் 'ஓவர் ஆக்டிங்'. கச்சமுச்சா பஞ்சிங் வசனங்கள் இல்லை என்பது ஒரு ஆறுதல். ஆரம்பக் கதைக் களம் நெல்லை என்பதால் நெல்லை தமிழ் உச்சரிப்பை சூர்யாவும் மற்றவர்களும் நன்றாகவே செய்துள்ளனர்.
ஒரு நல்ல கதையோடு கூடிய மசாலா படம். அதோடு சூர்யாவுக்கும், சன் பிக்சர்ஸ்-க்கும் இது ஒரு மெகா வெற்றிப் படம்.
ஏதேது... நானும் என் மகனைப் போல சூர்யாவின் இரசிகனாகி விட்டேனோ?
Comments
நன்றி ஐயா!
அதிகம் படிப்பதில்லை. உங்களுடைய பிளாக்கில் விமர்சனம் உள்ளதே அப்படி என்னதான் எழுதியிருக்கீங்கன்னு பார்க்க வந்தேன்.
நான் ஏமாறவில்லை.
"சென்னை நகரில் கடந்த 5 ஆண்டுகளில் ஆட்கடத்தல் வழக்குகள் எத்தனை பதிவாகி உள்ளன, எத்தனை பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர், தண்டனை பெற்ற குற்றவாளிகள் எத்தனை பேர், நிலுவையில் உள்ள வழக்குகள் எத்தனை என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் பிரிவு 6(1)-இன் கீழ் கேட்கலாம் என்று நினைத்துள்ளேன்" என்று நீங்கள் சொல்லியிருப்பதால், இது விமர்சனம் மட்டுமல்ல, இதனால் விமோசனமும் கிடைக்கும் என்று நம்புகிறேன்.
நன்றி.