"கல்லிலே கலைவண்ணம் : அதிசயக் கோவில் அங்கோர்வாட்" - கம்போடியா செல்வோருக்கான ஓர் அரிய கையேடு

 


தென் கிழக்கு ஆசிய  நாடுகளில் ஒன்றான கம்போடியா, ஏராளமான அதிசயங்களை கொண்டதாகும். அந்நாட்டைப் பற்றி யாரேனும் ஒருவர் சொல்லக் கேட்கும் பொழுது, அதைக் கேட்பவர் மனதில்  "ஏன்?", "எப்படி?" என்ற கேள்விகள் நிறைய எழும். காரணம், அந்த அளவிற்கு மிகப்பெரும் வரலாற்று மர்மங்களை கம்போடியாவும், அங்கிருக்கும் அங்கோர்வாட் கோவிலும் தன்னுள் ஒளித்து வைத்துள்ளன என்று சொன்னால் அதில் மிகை ஏதுமில்லை. வரலாற்று ஆய்வாளர்கள், தொல்லியல் நிபுணர்கள் பலர் இந்த நாடு நமது இந்திய நாட்டுடன் எவ்வாறு வம்சாவளி தொடர்பு கொண்டுள்ளது என்பதை பல்வேறு கல்வெட்டுக் குறிப்புகள் மற்றும் அங்கோர்வாட் கோவிலை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்து பலப்பல சங்கதிகளை உலகிற்கு தந்துள்ளனர்.


அந்த வகையில் இன்று திரு அமுதன் எனும் பத்திரிக்கையாளர் மற்றும் வரலாற்று எழுத்தாளர், மற்ற ஆங்கில ஆராய்ச்சியாளர்களுக்கு சற்றும் சளைக்காமல் ஆராய்ச்சி மேற்கொண்டு பல்வேறு வரலாற்று தகவல்களை திரட்டி இன்று  "கல்லிலே கலைவண்ணம் : அதிசயக் கோவில் அங்கோர்வாட்" என்ற தனது பிரமாண்டமான நூலில் தந்துள்ளார். இதற்காக இவர் பலமுறை கம்போடியா சென்று வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கம்போடியாவின் 'கெமர்' பரம்பரை மன்னர்களின் மூதாதையர்கள் எங்கிருந்து ஆரம்பமாகின்றனர் என்று ரிஷி மூலத்தை தேடிய கதையாக இந்நூலாசிரியர் ஆய்வு செய்கையில் அவருக்கு கிடைத்த வியப்பான தகவல்கள் நமக்கும் வியப்பை தருவதாகவே  உள்ளன. ஆம்.. கெமர் பரம்பரைக்கு வித்திட்டதே தமிழகத்தை சேர்ந்த ஓர் இளைஞர்தான் என்று திரு அமுதன் கூறுகின்றார். இதைத் தொடர்ந்து தமிழகத்திற்கும் கம்போடியாவிற்கும் ஏற்பட்ட அரச பரம்பரை தொடர்பு மற்றும் வம்சாவளி விருத்தி பற்றி நிலவும் மூன்று கதைகள் பற்றி நூலாசிரியர் திறம்பட, அதேநேரம் சுவையாக நூலின் 3-ஆம் இயலில்  விளக்கியுள்ளார்.  மேலும் தமிழகத்தை ஆண்ட பல்லவ மன்னவர்களின் பரம்பரை, வாரிசு இல்லாமல் முடிந்து போக இருந்த நேரத்தில், கம்போடியாவில் இருந்து ஒரு இளவரசர் தமிழகம் வந்து பல்லவ மன்னரானார் (2-ஆம் நந்தி வர்மன்) என்ற வரலாறு உண்மை பற்றி திரு அமுதன் கூறுகையில் அவரைப் போலவே நாமும் வியப்பில் மூழ்குகின்றோம். இவை வெறும் கதைகள் மட்டுமல்ல, இதற்கு சான்று பகர கல்வெட்டுக் குறிப்பும் உண்டு என்று அதையும் தனது நூலில் குறிப்பிடுகின்றார் ஆசிரியர் அமுதன். காஞ்சிபுரத்தில் உள்ள வைகுண்ட பெருமாள் கோவிலுக்கும், அது  கட்டப்பட்டு சுமார் 3 நூற்றாண்டுகள் கழித்து கம்போடியில் கட்டப்பட்ட அங்கோர்வாட் கோவிலுக்கும் இடையே உள்ள ஒற்றுமைகள் குறித்து நூலாசிரியர் பட்டியலிட்டுக் காட்டும்போது வியப்பு மேலும் அதிகரிக்கின்றது. இவற்றையெல்லாம்  வாசித்து அறியும் நாம் ஒவ்வொருவரும் "நமது நாட்டின் தொப்புள் கொடி உறவினர்களையும், அங்கோர்வாட் கோவிலையும் நாம் பார்க்காமல் இருப்பதா?" என்ற உணர்வுக்கு நிச்சயம் வருவர்.

அங்கோர்வாட் கோவில், நாம் அனைவரும் நமது வாழ்நாளில் அவசியம் பார்க்க வேண்டியதொரு கோவில். அதுபோல் கம்போடியாவில் இன்னும் பல கோவில்கள் உள்ளன. குறிப்பாக "தா புரோம் கோவில்", "போயேன் கோவில்" என இரண்டு கோவில்கள் அவசியம் பார்க்க வேண்டியவை. ராட்சத மர வேர்களின் பிடியால்  சிதிலம் அடைந்துள்ள "தா புரோம் கோவில்"-ஐ பற்றி ஆசிரியர் தனது நூலின் 10-ஆம் இயலில் விரிவாகக்  குறிப்பிட்டிருப்பது, இந்தக் கோவிலை சுற்றி பார்க்கும் போது மிக உதவிகரமாக இருக்கும். வழி தவறினால் தொலைந்து போகும் அபாயம் உள்ள இந்தக் கோவிலுக்கு இப்புத்தகம் ஓர் வழிகாட்டியாக உள்ளது எனில் அது மிகையன்று.

கம்போடியாவில் பல்லவர்கள் மற்றும் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட அங்கோர்வாட் கோவில் உள்ளிட்ட பல கோவில்களும் பின்னிட்டு வந்த காலகட்டங்களில் அவற்றின் மதிப்பு தெரியாமல் கவனிப்பார் யாரும் இன்றி சேதம் அடைய ஆரம்பித்தன. குறிப்பாக ஏற்கனவே ஆசிரியர் சொன்னது போல புதர்கள் மற்றும் ராட்சத மர வேர்களின் பிடியில் சிக்கி தனது பொலிவை இழந்தன. இவற்றை செப்பனியிட கம்போடியா அரசு பல நாடுகளின் உதவியைக் கோரியும் யாரும் முன் வரவில்லை. இந்த நிலையில் நமது  நாடு உதவிக் கரம் நீட்டியது. அங்கிருக்கும் பல கோவில்களின் பராமரிப்பு பணிகளை நமது இந்திய அரசின் உதவியோடு கம்போடிய இராஜ்யம் செய்து வருவதை ஆசிரியர் மிகப் பெருமையுடன் தனது நூலில் குறிப்பிடுகிறார். இந்த நேரத்தில் தனது ஆதி கால உறவுக்கு உதவ முன் வந்த நமது இந்திய நாட்டையும் நாம் பெருமையுடன் பார்க்கும் உணர்வை ஆசிரியர் ஏற்படுத்துகின்றார்.


மேலும் இந்நூல் ஓர் பயண இலக்கியம் மட்டுமல்ல; காலத்திற்கும், ஏன் அதையும்  தாண்டி, பின் எப்போதும் பேசப்படக்கூடிய ஒரு வரலாற்று ஆய்வு நூலாகவே நான் இதை பார்க்கின்றேன். ஏராளமான படங்களுடன் வெளிவந்துள்ள இந்நூல், கம்போடியா மற்றும்  அங்கோர்வாட் கோவில் பற்றிய ஓர் வரலாற்று ஆவணம். அரசின் தொல்லியல் பெட்டகம்.

கம்போடியா, சியம் ரீப் மாகாணத்தில் உள்ள உலகின் மிகப் பெரிய இந்துக் கோவிலான அங்கோர்வாட் கோவிலைப் பற்றி, நமக்கு இன்று தமிழில் கிடைத்திருக்கும் முதல் வரலாற்று நூல் என்று இந்த நூலை மட்டுமே சிறப்பாகச் சுட்டிக் காட்டுவதில் மாற்றுக் கருத்து ஏதும் இருக்க முடியாது.


உடலில் வலு இருக்கும்போதே இந்த அங்கோர்வாட் கோயில் உட்பட கம்போடிய கோவில்கள் எல்லாவற்றையும் பார்க்கச் செல்வது நல்லது; நிறைய நடக்க வேண்டும், அதுவும் பெரும் படிகளை ஏறி. எனினும் இந்த நன்னூலை ஒரு நடை வாசித்து விட்டு சென்றால், கால் நடைக்கான வலி தெரியாது. வாசித்த எழுத்தும் காணும் காட்சியும் ஒன்று சேரும் போது உற்சாகத்திற்கு பஞ்சம் ஏது?


கம்போடியா செல்வோருக்கு கண்கண்ட வழிகாட்டியாக விளங்கும் இந்நூலை எழுதிய திரு அமுதனின் இயற்பெயர் திரு.எம்.தனசேகரன். தினத்தந்தி நாளிதழின் செய்தி ஆசிரியராக பல ஆண்டுகள் பணியாற்றிய இவர்,  கீழடி பற்றிய ஆய்வை எடுத்துச் சொல்லும் "மண்மூடிய மகத்தான நாகரிகம்" , தஞ்சை பெரிய கோவில் வரலாற்றை பறை சற்றும் முகமாக "ஆயிரம் ஆண்டு அதிசயம்", பிரமிடுகளை பற்றிய "புதையல் ரகசியம்" உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதியவர். சங்கம் வளர்த்த மதுரையின் தங்க மகனான இவர், அமெரிக்கா, சீனா, ஜப்பான், தென்கொரியா, கம்போடியா என பல உலக நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டவர்.


இவர் தற்போது எழுதியுள்ள இந்த  "கல்லிலே கலைவண்ணம் : அதிசயக் கோவில் அங்கோர்வாட்" என்ற  நூலை தினத்தந்தி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. 272 பக்கங்களில் வெளிவந்துள்ள இந்நூலின் விலை உரூவா 150 ஆகும். 

- பி.ஆர்.ஜெயராஜன், 
வழக்குரைஞர், சட்ட நூலாசிரியர், சட்டக் கல்வியாளர் மற்றும் 
யதார்த்தக் கவிஞர், செல்லிடப்பேசி : 9585711122.

Comments