அத்தி வரதரை தரிசிக்க ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு - பி.ஆர்.ஜெயராஜன்





 "காஞ்சிவரத்துலே அத்தி வரதர் என்ற ஒரு சாமி குளத்துக்கடியிலே படுத்துக் கிடக்கிறாரு... அவரு 40 வருசத்துக்கு ஒரு தடவை வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சி தருவாரு.." என்ற சங்கதி சமகாலத்தில் வசித்துக் கொண்டிருக்கும் எனக்கும், எனது பிள்ளைகளுக்கும் புதியதுதான் என்றால் அதில் மாற்றுக் கருத்தில்லை. 

இந்த தகவலை எனக்கு முந்திய தலைமுறையான எனது சிற்றப்பாவிடம் இருந்து நான் அண்மையில் தெரிந்து கொண்ட போது எனக்கு வியப்புதான் மேலிட்டது.

நான் ஏற்கனவே எனது அகவையில் ஒரு 40ஐ கடந்து மேலும் ஒரு 10ஐ தாண்டி வந்திருந்தாலும் ("50 வயதுக்கு மேற்பட்டவர் என்பதை நேரடியாக சொல்லிவிட்டால்தான் என்ன? எதற்கு இப்படி சுற்றி வளைக்கணும்" என்று நீங்கள் கேட்பது எனக்கு நன்றாக புரிகின்றது. என்ன இருந்தாலும் இந்த கட்டுரையின் நாயகன் "40 நீண்ட நெடிய ஆண்டுகள்" என்ற காலம்தானே. எனவே அதற்கு ஒரு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமல்லவா?), 1979-இல் அத்தி வரதர் வெளியே வந்த போது அது பற்றி எனக்கு ஏதும் தெரியாது. மிகத் தீவிர  ஆன்மிகவாதியான எனது தந்தை கூட அதைப் பற்றி என்னிடம் ஏதும் கருத்துரைக்கவில்லை. இவ்வளவு ஏன்...?  எனது தந்தை உள்ளடங்கலாக தெரிந்தவர்கள், சொந்த பந்தங்கள் என யாரும் அந்த சமயத்தில் அத்தி வரத தரிசனத்திற்கு சென்று வந்ததாகவும் தகவல் இல்லை.

தற்போது அத்தி வரதர் பற்றி நான் தெரிந்து கொண்ட செய்திகளை எனது அடுத்து மூன்றாம் தலைமுறையான எனது பிள்ளைகளிடமும் பகிர்ந்து கொண்டதால், அவர்களும் வியந்தனர். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் மகாமக வைபவத்திற்கு அவர்களை அழைத்துக் கொண்டு சென்றபோதே வியந்த அவர்கள், 40 ஆண்டு கால இடைவெளிக்கு பிறகு வரும் அத்தி வரத வைபவத்தை அறிந்து "அவசியம் வரதரை தரிசித்து வரம் வாங்கி வர வேண்டும்" என்று திட்டமிட ஆரம்பித்தனர்.


அத்தி வரதர் இன்று முதல் (ஜூலை 1, 2019) 48 நாட்களுக்கு பக்தர்களுக்கு காட்சி தருவார். ஆரம்பத்தில் கூட்டம் மிக அதிகமாக இருக்கும். எனவே எப்போது செல்லலாம் என்று நானும் திட்டமிட தொடங்கிய போது சில செய்திகளை இணையத்தின் வாயிலாக சேகரித்தேன். அவற்றில் முக்கியமானவை பின்வருமாறு.

  • இலவச தரிசனம் உண்டு.
  • கிழக்கு ராஜகோபுரம் வழியாக 50 ரூபாய் கட்டண தரிசனம்.
  • மேற்கு ராஜகோபுரம் வழியாக 500 ரூபாய் கட்டண தரிசனம்.
  • அத்தி வரதர் மேற்கு கோபுரம் அருகே பக்தர்களுக்கு காட்சி தருகின்றார்.
  • 500 ரூபாய் டிக்கெட்டை ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம்.
  • நாளொன்றுக்கு 500 டிக்கெட்டுக்கள்தாம். 
  • இந்த தரிசனத்திற்கு வருபவர்கள் ஆதார் அட்டை கொண்டு வர வேண்டும்.
  • இந்து சமய அறநிலையத்துறை வலைதளமான https://tnhrce.gov.in என்பதில் பதிவு செய்யலாம்.
இது பற்றி நண்பர்கள் சிலர் 'யுடியூப்பில்' காணொலி பதிந்து உள்ளனர். அவற்றின் இணைப்புகளை கீழே கொடுத்துள்ளேன். அவற்றைப் பார்த்தால் தலைமுறைக்கு  ஒருமுறை தரிசனம் தரும் அத்தி வரதரை தரிசித்து வர நீங்களும் திட்டமிட ஏதுவாக இருக்கும்.



108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும் முக்கியமானதுமான காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் இந்த அத்தி வரதர் திருவிழாவை, ஒரு தலைமுறை மட்டுமே பார்க்க முடியும் என்றும், இரண்டாம் முறை பார்ப்பது என்பது பூர்வபுண்ணிய பாக்கியம் என்றும் ஆன்மிக பெரியவர்கள் சிலர் கூறுகின்றனர்.

உண்மைதானே..?

Comments