கொலைகாரன் திரைப்படமும் சேலம் புதிய ஈரடுக்கு மேம்பாலமும்




கொலைகாரன் திரைப்படத்திற்கும்  சேலம் புதிய ஈரடுக்கு மேம்பாலத்திற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டால்,  இந்தக் கட்டுரையை நீங்கள் முழுக்க வாசித்தால்தான் அது விளங்கும்.

கட்டுரைக்குள் போவோமா...?

 "சுறுசுறுப்பான  மாநகரம்"  (ஸ்மார்ட் சிட்டி) என்ற திட்டத்தின் ஒரு அங்கமாக  சேலத்தில் தொடங்கப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க மேம்பாலங்களின் கட்டுமானப்பணி படிப்படியாக முடிந்து வருகின்றது. 

அவற்றில் சேலம் 5 ரோடு சந்திப்பில் ரூ.441 கோடி மதிப்பீட்டில் ஈரடுக்கு மேம்பாலத்தின் ஒரு பகுதியாக ஏ.வி.ஆர். ரவுண்டானா முதல் இராமகிருஷ்ணா சாலை சந்திப்பு வரை அமைக்கப்பட்டுள்ள புதிய மேம்பாலத்தை இம்மாதம்  7-ஆம் தேதி காலை 9.45 மணிக்கு தமிழக முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்.

அந்த பாலத்தில் அன்றே பயணித்து, நாமும் அதன் வரலாற்றுச் சுவட்டில் இடம் பெற வேண்டும் என்று நினைத்து தயாரானேன். ஆனால் வேறு பணிகள் காரணமாக அந்தப்பக்கம் செல்ல இயலவில்லை. இருப்பினும் எனது மகன் அதன் திறப்பு விழா நிகழ்ச்சியின் போதே தனது புல்லட் வாகனத்தில் அதில்  பயணம் செய்துவிட்டார். எனவே நானும் விரைவாக அதில் பயணித்து விட வேண்டும் என்று மனதில்  குறித்து வைத்துக் கொண்டேன்.

9-ஆம் தேதி இரவு சுமார் 9 மணி இருக்கும். மல்லிகைப்பூ இட்லி, கறிவேப்பிலை பொடி, கொத்தமல்லி சட்னி என இரவு உணவு முடிந்து ஒரு ஏப்பத்துடன்,  "இப்போ புது பிரிட்ஜ்லே போனாக்க என்ன?" என்று எனது மகனிடம் வினவினேன்.  அதற்கு அவர், "சரி வாங்க போகலாம்" என்று தயாராகவே இருவரும் இரு சக்கர வாகனத்தில்  கிளம்பினோம். நான் ஓட்ட, அவர் பின்னால் அமர்ந்து வந்தார். அப்போது மணி சுமார் 9.30 இருக்கும்.

அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் திரும்பி சாரதா கல்லூரி சாலை பிடித்து நேராக சென்றவுடன், சிறிது தூரத்திலேயே பாலத்தின் ஒரு முனை ஆரம்பித்து விடுகின்றது. அதாவது இராமகிருஷ்ணா சாலை சந்திப்பு  அல்லது LRN எக்ஸலெண்சி ஓட்டலுக்கு திரும்பும் இடத்தில் அது தொடங்குகின்றது.

சொந்த ஊரில் கட்டப்பட்ட சிறப்பான பாலத்தில் முதன்முதலாக செல்வதால், நான் எனது வலது கையால் நெஞ்சைத் தொட்டு, "சாமி... எங்க ஊரு சேலம்  இன்னும் சிறப்புடையதாக மாறனும், நான் உட்பட ஜனங்க எல்லோரும்  பாதுகாப்பா, நல்லா வாழணும்" என்றெல்லாம் கடவுளை சில நொடிகளில் உருக்கமாக வேண்டி, அதில் வாகனத்தை ஏற்றினேன்.

பாலம் அருமையாக இருந்தது. முன்பு வழக்கமாக கீழ் சாலையில் பயணிக்கும் போது அன்னாந்து பார்த்த கட்டடங்களின் உச்சி தளங்கள் எல்லாம், இப்போது பாலத்தில் பயணிக்கும் போது சமநிலையில் தெரிந்தது. இது எனக்கு ஒரு கர்வ உணர்வை தந்தது. இப்படி பார்க்கும் பாக்கியத்தை தந்த பாலத்திற்கு மனதிற்குள் நன்றி தெரிவித்துக் கொண்டேன்.  மேலும் போக்குவரத்து நெரிசலின்றி பயணித்தது, ஒரு அலாதியான இன்பத்தை தந்தது. அதாவது மூச்சு விட முடியாமல் திணறிக் கொண்டிருந்தவருக்கு ஆச்சிஜன் கொடுத்தாற் போன்று.

இருவழிப்பாதையாக இப்படி சென்று கொண்டிருந்த வேளையில், அப்பாலம் அழகாபுரம் காவல் நிலையம் வந்தவுடன் ஒரு வழிப்பாதையாகி நம்மை அங்கே கீழே இறக்கி விட்டது. இறங்கிய இடத்திலிருந்து இடது புறம் திரும்பினால் அத்வைத ஆசிரமம் சாலை. அதில் நேராக சென்றால் புதிய பேருந்து நிலையம்.

எனவே அந்த சாலையில் பயணித்து நேராக புதிய பேருந்து நிலையம் அடைந்து வலது புறம் திரும்பி 5 ரோடு சந்திப்பு சாலைக்கு செல்லத் தொடங்கினோம். அப்போது மணி 9.45. 

இடையில் கௌரி தியேட்டர் வந்தது. அதில் "கொலைகாரன்" என்ற படம் திரையிடப்பட்டியிருந்தது. படத்தின் தலைப்பே அது ஒரு திகில் மர்மப் படம் என்பதைக் காட்டியது. எனவே திரைப்படத்திற்கு செல்வது என்று முடிவு செய்து, வாகனத்தை  திரையரங்கு வளாகத்திற்குள் செலுத்தினேன்.

கூட்டம் குறைவாக இருந்தது. ஆனால் மணி 10.20ஐ நெருங்கும் போது நல்ல கூட்டம் வந்துவிட்டது. கூடிய கூட்டத்திற்கு வஞ்சம் வைக்காமல் விஜய் ஆண்டனி பயங்கர மர்மமாக நடித்தார். அதற்கு மேல் காவலதிகாரியாக வரும் அர்ஜுன். அவர் தனது மேலதிகாரி நாசருடன் சேர்ந்து கொண்டு கொலை செய்தது யார்? என்ற முடிச்சை அவிழ்க ரசிகர்களை நன்றாக குழப்பி (!) சிந்திக்க வைத்தார்கள்.  படம் பார்ப்பவர்கள் "நம்ப முடியவில்லையே", என்று குழம்பிக் கொண்டிருக்க, கதாபாத்திரங்களும் "நம்ப முடியவில்லையே" என்று வசனம் பேசுகின்றன. ஒரே திகைப்புத்தான்.



கொலையாகி இறந்து போனது இன்னார்தான் என்று கடைசி வரை நம்பிக்கொண்டிருந்தால், கதை வேறு பாதைக்கு சென்று மேலும் திகிலூட்டுகின்றது. படத்தின் தொடக்கத்திலேயே கதாநாயகி வடநாட்டு மங்கை ஆஷிமா நார்வால் கொலையாகி இறந்து விடுகிறார்.  பிறகு சீதாவுடன் சேர்ந்து படம் முழுக்க பயப்படுகின்றார். கதைக்குள் கதை, அதை சொன்ன விதம், படமாக்கிய விதம் என எல்லாம் சிறப்பு. ஊகிக்க முடியாத கதை கோப்பு, அதன் முடிவு. படம் பார்த்தால் பரவசமாக இருக்கும்.


நீண்ட நாட்கள் கழித்து ஒரு நல்ல திரைப்படத்தை பார்த்த மகிழ்ச்சியில் திரையரங்கை விட்டு வெளியே வரும் போது  மணி 12.55.

இதையடுத்து பாலத்தின் மறு முனை மீது ஏறி அங்கிருந்து தொடங்கிய இடத்தில் வந்திறங்க ஆசைப்பட்டு AVR ரவுண்டானாவுக்கு வாகனத்தை செலுத்தினேன். குரங்கு சாவடி வழியாக சென்று ரவுண்டானா பிடித்து நேராக பாலத்தில் ஏறி ஒரே சீராக சென்று, தொடங்கிய முனையான இராமகிருஷ்ணா சாலை சந்திப்பு இடத்திற்கு வந்து சேர்ந்தோம். இதே பாலத்திற்கு கீழ் பாதையில் செல்ல வேண்டுமென்றால் ஏகப்பட்ட சிக்னல்கள், போக்குவரத்து நெரிசல் என சுமார் 15 நிமிடம் பிடித்துவிடும். இப்போது அந்த சிரமம் ஏதுமின்றி ஹாயாக வந்தடைந்து விட்டோம். இந்தப்பாலங்கள் யாவும் சேலத்திற்கு, சேலம் மக்களுக்கு கிடைத்த ஓர் வரப்பிரசாதம் என்றே சொல்ல வேண்டும்.

பாலத்தில் வரும் போது இந்தப் பதிவுக்காக சில படங்களை செல்போனில் எடுத்துக் கொண்டோம்.

நிறைவாக ஒரு வித ஜென்ம சாபல்யத்துடன் வீடு வந்து சேரும் போது மணி 1.25.




தொடங்கிய இடத்திற்கு பாலத்தில் வந்து  சேர்ந்ததைப் போல, இந்த கட்டுரை தொடங்கிய இடத்திற்கு மீண்டும் வர வேண்டிய கட்டாயத்தில் நான் உள்ளேன்.

அதாகப்பட்டது,  "கொலைகாரன் திரைப்படத்திற்கும்  சேலம் புதிய ஈரடுக்கு மேம்பாலத்திற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டால்", அந்தப் படத்தைப் பார்த்து விட்டு, ஈரடுக்கு பாலத்தில் ஏறி வீடு வந்த சேர்ந்து சம்பந்தம் ஏற்படுத்திய நான்தான் சம்பந்தமே தவிர வேறு எந்த சம்பந்தமும் இல்லை.

V/c : A2Z Flicks
P/c : https://www.facebook.com/focustudiozsalem/

Comments

sarav said…
Visited your blog from tamilmanam. the post was good it was like 2 in 1 post Review of the movie as well as the bridge... by the way you have mentioned as "EEradukku" is it one above the other ..like double decker ? the photo u shared shows 2 bridge next to each other like twin bridges...

Anyway it was nice reading your blog ...
Unknown said…
ஒரு வித பயத்துடன் பயணம் தொடங்கி எவ்வித சேதாரமும் இல்லாமல் வீடு சேர்ந்த கதையாய் இருக்கிறது இக்கதை
/ஒரு வித பயத்துடன் பயணம் தொடங்கி எவ்வித சேதாரமும் இல்லாமல் வீடு சேர்ந்த கதையாய் இருக்கிறது இக்கதை/

Thanks for your comment
/Anyway it was nice reading your blog/

Thank you so much
//"EEradukku" is it one above the other ..like double decker ? the photo u shared shows 2 bridge next to each other like twin bridges...//

@ sarav - To visualize the construction of double layered flyover, a video is inserted at the end of the post.
//"EEradukku" is it one above the other ..like double decker ? the photo u shared shows 2 bridge next to each other like twin bridges...//

@ sarav - To visualize the construction of double layered flyover, a video is inserted at the end of the post.