தமிழ் வலைப்பதிவர்கள் திருவிழா, 2014 - மதுரை
உள்ளபடியே அது திருவிழாதான் ! ஆம்... மதுரையில் தமிழ் வலைப்பதிவர்கள் திருவிழா, 2014.
மூத்த பதிவர்கள், முன்னணி பதிவர்கள், பிரபல பதிவர்கள், அறிமுக பதிவர்கள் என தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் பதிவர்கள் பலர் கலந்து கொண்டு இத்திருவிழாவை பதிவுலக வரலாற்றில் ஓர் பெரும் விழாவாக்கி விட்டனர்.
சக பதிவர்களின் எழுத்துகளை மட்டுமே இதுகாறும் பார்த்து வாசித்துக் கொண்டிருந்த நாம், நேற்று (26-10-2014) மதுரை, கீதா நடன கோபால நாயகி மந்திர் அரங்கத்தில் நடைபெற்ற இவ்விழாவில் ஒருவருக்கொருவர் முகம் பார்த்துக் கொண்டோம். அப்போது ஏற்பட்ட மகிழ்ச்சியை வார்த்தைகளால் சட்டென விவரிக்க முடியாது. மொட்டாக இருந்த வலைப்பூ இந்த விழாவில் விரிந்து மலர்ந்து மணம் பரப்பத் துவங்கியது.
3-ஆம் ஆண்டாக நடைபெறும் இவ்விழா காலை 9 மணி அளவில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் கோலாகலமாக துவங்கியது. உணவு உலகம் வலைப்பூவின் உரிமையாளர் திரு. சங்கரலிங்கம் அவர்கள் வரவேற்புரை நல்கினார். தலைவராக பிரபல வலைப்பூவான வலைசரத்தின் (http://blogintamil.blogspot.in/) உரிமையாளர் திருமிகு சீனா அய்யா அவர்கள் தலைமை வகித்தார்.அவருடன் தீதும் நன்றும் பிறர்தர வாரா வலைப்பூவின் உரிமையாளர் திருமிகு ரமணி அவர்கள் துணைத் தலைவராக அமர்ந்து மேடைக்கு அணி சேர்த்தார். திருமிகு மதுரை சரவணன் அவர்கள் முன்னிலை வகித்தார். நியுசிலாந்து வாழ் பதிவரும் துளசிதளம் என்ற வலைப்பூவின் உரிமையாளருமான திருமதி துளசிகோபால் அவர்கள் நியுசிலாந்திலிருந்து தனது கணவர் திருமிகு கோபால் அவர்களுடன் விழாவிற்கு வந்திருந்து விழா மேடைக்கு பெருமை சேர்த்தார்.
நிகழ்ச்சி துவங்க ஆரம்பித்தது. வெளியூர் பதிவர்கள் ஒவ்வொருவராக அரங்கத்தில் நுழைந்து கொண்டிருந்தனர்.அவர்களின் வருகை அரங்கின் வரவேற்பு முகப்பில் பதிவு செய்யப்பட்டது.
தொடர்ந்து திண்டுகல் தனபாலன், தமிழ்வாசி பிரகாஷ் உள்ளிட்ட தொழில்நுட்ப வலைப்பதிவர்கள் பாராட்டப்பட்டனர். இதையடுத்து திருவிழாவிற்கு வந்திருந்த பதிவர்களின் சுய அறிமுகம் நடைபெற்றது. நிகழ்ச்சி தொகுப்பாளர் வலைப்பூவின் பேரை வாசிக்க அதன் உரிமையாளர்கள் ஒவ்வொருவரும் மேடைக்கு சென்று தங்களை அறிமுகம் செய்து கொண்டனர்.
எழுத்துகள் ஏற்கனவே அறிமுகமான பதிவர்களின் முகத்தை நேரில் கண்டு தொடர்புடைய பதிவர்களுக்கு மகிழ்ச்சி. திடம்கொண்டு போராடு வலைப்பூ உரிமையாளர் திருமிகு சீனு, கோவை ஆவி, ஸ்கூல் பையன் ஆகிய பிரபல பதிவர்களை சந்தித்து மகிழ்ந்தேன்.
நிகழ்ச்சி இப்படி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டே இருந்தபோது, மதுரை என்ற பேருக்கு மீனாட்சி அம்மன் எப்படி பக்கபலமாக இருக்கின்றாரோ, அப்படி மதுரை நினைவுக்கு பாலம் போடும் ஒன்று எங்கள் அனைவருக்கும் தரப்பட்டது.நாங்கள் மகிழ்ந்தோம் என்று சொல்வதை விட, குளிர்ந்தோம் எனலாம். அது என்ன..? நீங்கள் நினைப்பது சரிதான். சுவையான ஜிகிர்தண்டா எங்களுக்கு வழங்கப்பட்டது. விழாவிற்கும் சுவை சேர்த்தது.
சிறப்புரையாளர் பேராசிரியர் திரு. தா.கு.சுப்பிரமணியம் அவர்கள் தனது உடல்நலம் காரணமாக விழாவிற்கு வர இயலவில்லை.பதிவர்கள் அறிமுகம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது.
இவ்வாறு சிந்தனைகளுக்கு விருந்தாக இத்திருவிழா சென்று கொண்டிருந்த அதே நேரம், நாவிற்கு சுவையாக மதிய உணவு தயார் என்ற அறிவிப்பையும் வெளியிட்டது. அனைவருக்கும் அறுசுவை விருந்து பரிமாறப்பட்டது.
பிற்பகல் அமர்வில் பதிவர் திருமிகு குடந்தை சரவணன் அவர்களின் "சில நிமிட சிநேகம்" என்ற குறும்படம் வெளியிடப்பட்டது. கோவை ஆவி அவர்கள் நடித்திருந்தார். 7 நிமிடம் ஓடிய இந்தக் குறும்படம் மிகச் சிறப்பாக இருந்தது. குடந்தை சரவணன் அவர்களுக்கும், கோவை ஆவி அவர்களுக்கும், படக் குழுவினருக்கும் வாழ்த்துகள்.
தொடர்ந்து பிரபல எழுத்தாளர் திரு இந்திரா சௌந்தர்ராஜன் அவர்கள் வருகை தந்து சிறப்புரை ஆற்றினார்.
இதையடுத்து புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. பதிவர்கள் எழுதிய புத்தகங்கள் வெளியிடப்பட்டன. முதலில் திரு கரந்தை ஜெயக்குமார் அவர்கள் எழுதிய "கரந்தை மாமனிதர்கள்" என்ற புத்தகமும், அடுத்து திருமதி கிரேஸ் பிரதிபா அவர்கள் எழுதிய "துளிர் விடும் விதைகள்" என்ற கவிதை நூலும், இதையடுத்து திருமதி மு.கீதா அவர்கள் எழுதிய "ஒரு கோப்பை மனிதம்" என்ற கவிதை நூலும் வெளியிடப்பட்டது.
இதை அடுத்து நான் எழுதிய "நல்லா எழுதுங்க ...! நல்லதையே எழுதுங்க...!!" என்ற நூலை ஸ்ரீ பதி ராஜன் பப்ளிஷர்ஸ் உரிமையாளரும், எனது தாயாருமான திருமதி பி.ஆர்.காஞ்சனமாலா அவர்கள் வெளியிட திருமதி துளசி கோபால் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.
புத்தக வெளியீட்டு விழாவில் நேரம் போனதே தெரியவில்லை. திருவிழா நிறைவடையும் நேரம் வந்து விட்டது. திரு திண்டுகல் தனபாலன் அவர்களின் நன்றியுரைடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.
பதிவர் ஒருங்கிணைப்பு பணியை திருவாளர்கள் பகவான்ஜி (ஜோக்காளி), பால கணேஷ் (மின்னல் வரிகள்), முத்து நிலவன் (வளரும் கவிதை), தமிழ் இளங்கோ (எனது எண்ணங்கள்) ஆகியோர் திறம்பட மேற்கொண்டனர்.
பதிவர் சந்திப்பு வாழ்க...!
பதிவர் ஒற்றுமை ஓங்குக ..!!
Comments
செய்து வெளியிட்டமைக்கு
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்//
Thank you very much sir
மிக மகிழ்ச்சியான பகிர்வுகள்..
வாழ்த்துகள்
"நல்லா எழுதுங்க ...! நல்லதையே எழுதுங்க...!!" என்ற நூலை
ஸ்ரீ பதி ராஜன் பப்ளிஷர்ஸ் உரிமையாளரும்,
தங்களது தாயாருமான
திருமதி பி.ஆர்.காஞ்சனமாலா அவர்கள் வெளியிட திருமதி துளசி கோபால் அவர்கள் பெற்றுக் கொண்ட நிகழ்வை பகிர்ந்துகொண்டது இனிமை சேர்க்கிறது..!பாராட்டுக்கள்.!
உங்களுடைய இந்த பதிவினை எனது ” மதுரையில் வலைப்பதிவர்கள்!” என்ற பதிவினில் மேற்கோளாக காட்டி இணைப்பும் (LINK) தந்துள்ளேன். நன்றி!
விழாவை சிறப்பாக தொகுத்தளித்து பதிவாக பகிர்ந்தன்மைக்கு நன்றி... வாழ்த்துக்கள்...
தங்களை சந்தித்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்...
தங்களின் அனுமதியோடு புகைப்படங்களை எடுத்துக் கொள்ளலாமா...?
//மொட்டாக இருந்த வலைப்பூ இந்த விழாவில் விரிந்து மலர்ந்து மணம் பரப்பத் துவங்கியது. மிக மகிழ்ச்சியான பகிர்வுகள்.. வாழ்த்துகள்//
வாழ்த்துகளுக்கு நன்றி அம்மா...
தங்களை சந்தித்தது மிக்க மகிழ்ச்சி தருகின்றது அய்யா. "நல்லா எழுதுங்க...! நல்லதையே எழுதுங்க...!!" புத்தகம் கடைசி நேரத்தில் அச்சிலிருந்து வெளிவந்தது. எனவே தங்களுக்கு முன்கூட்டி வழங்க இயலவில்லை. தங்கள் வாழ்த்துகளுக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி அய்யா. புத்தக மதிப்புரை ஒன்றை நல்கும்படி அன்புடன் வேண்டுகின்றேன்.
//Super sir//
Thank so much sir
//வணக்கம்....விழாவை சிறப்பாக தொகுத்தளித்து பதிவாக பகிர்ந்தன்மைக்கு நன்றி... வாழ்த்துக்கள்...தங்களை சந்தித்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்...//
மிக்க நன்றி திரு தமிழ்வாசி. ஒரு கூட்டத்தை கூட்டுவது அல்லது ஒருங்கிணைப்பது என்பது அவ்வளவு எளிதான செயல் அல்ல. ஆனால் அப்பணியை சிறப்பாக செய்தமைக்கு நாங்கள்தாம் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். நன்றி.
//சந்தோசத்தை விவரிக்க விவரிக்க வார்த்தைகள் இல்லை...தங்களின் அனுமதியோடு புகைப்படங்களை எடுத்துக் கொள்ளலாமா...?//
உண்மைதான். அரங்கத்திற்கு வந்தவுடன் தங்களை நேரில் சந்திக்க கண்கள் நாலாபக்கமும் அலை பாய்ந்தன. தங்களை சந்தித்த மறுகணம் மகிழ்ச்சியில் வார்த்தைகள் தொலைந்துபோயின. விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்தமைக்கு மிக்க நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே.
//என்னுடைய பெயரையும் குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றி சார்....//
தாங்கள் பேசிய ஒரு கருத்து வலைப்பதிவர்களான நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. அதாவது முக நூலின் தாக்கம் அதிகரித்துள்ள வேளையில் வலைப்பூவில் எழுதும் ஆர்வம் குறைந்து வருகின்றது என்ற கருத்து உண்மை. ஆனால் இது நிலையானதல்ல. காரணம் வருகின்ற நவம்பர் 1-ஆம் தேதி முதல் முகநூலில் உறுப்பினர்களாக ஆவதற்கு 2.99 டாலர் கட்டணம் செலுத்தவேண்டும் என்று அதை நிறுவிய மார்க் அறிவித்துள்ளார். இது முக நூலின் தாக்கத்தை குறைக்கும். வலைப்பூவின் மதிப்பை உணர்த்தும். பின்னூட்டம் இட்டமைக்கு நன்றி.
//அழகான தொகுப்பு சார்.//
நன்றி ஐயா
//உங்கள் பதிவைப் படித்ததும் இரட்டிப்பு மகிழ்ச்சி ,காரணம் ,என் இல்லாளும் உங்கள் பிடித்துள்ள புகைப்படத்தில் சிக்கி இருப்பதுதான் :)//
மிக்க மகிழ்ச்சி திரு பகவான் ஜி
தங்களின் வலைத் தளத்தை இனி தொடர்வேன்
நன்றி
- சித்திரவீதிக்காரன்
http://maduraivaasagan.wordpress.com/2014/11/04
http://tthamizhelango.blogspot.com/2014/11/blog-post_15.html
எனது "நல்லா எழுதுங்க ...! நல்லதையே எழுதுங்க...!!" என்ற புத்தகத்திற்கு ஒரு தனிப்பதிவாக தாங்கள் தந்துள்ள மதிப்புரையை வாசித்தேன். அதற்கு முதற்கண் எனது கனிவான நன்றிகளை அய்யா அவர்களுக்கு உரித்தாக்குகின்றேன். அணிக்கு அணி சேர்த்தார் போன்று தங்கள் மதிப்புரை அமைந்திருந்தது. ஒவ்வொரு கட்டுரையையும் வாசித்து மிகச் சிறந்த மதிப்புரை தந்துள்ளீர்கள்.
அதுபோல தங்கள் மதிப்புரையை வாசித்து வாழ்த்துரைத்தும் பாராட்டியும் பின்னூட்டம் இட்ட சக வலைப்பதிவர் பெரு மக்களுக்கும் எனது நெஞ்சு நிறை நன்றி.
என்றும் அன்புடன்,
பி.ஆர்.ஜெயராஜன்.