உலக கல்விக் காட்சி விழா, 2014 - ஓர் சர்வதேச கல்வி உற்சாகம்

World Education Fair, 2014 - 
An International Education Enthusiasm

அயல்நாட்டில் கல்வி கற்க வேண்டும், தொடர்ந்து வேலை வாய்ப்பையும் உடனடியாக பெற வேண்டும் என்ற பேரார்வம் அங்கு வந்திருந்த இளைஞர்கள், யுவதிகள் முகங்களில் பிரகாசமாக காண முடிந்தது.

பெங்களூரு, எம்.ஜி.சாலையில் அமைந்துள்ள 'விவந்தா பை தாஜ்' என்ற நட்சத்திர சர்வதேச விடுதியின் முதல் தளத்தில் கடந்த 22/5/14இல் நேர்த்தியாக நடைபெற்ற இந்த கல்விக் காட்சி விழாவில் பிரிட்டன், அய்க்கிய அமெரிக்க நாடுகள், கனடா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, துபாய், சிங்கப்பூர், மலேசியா என பல்வேறு நாடுகளில் உள்ள மிகப் பெரிய பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.


விண்ணப்பம், பதிவு போன்ற வழக்கமான சடங்குகள் முடிந்த பின்னர், எந்த நாட்டில், எந்த படிப்பை படிக்க விரும்புகின்றோம் என்பதை அறிந்து அதற்கொப்ப அந்தந்த நாட்டு பல்கலைக்கழக பிரதிநிதியிடம் மாணவ, மாணவியர் அனுப்பப்பட்டனர். மிகப் பெரிய கூட்ட அறை ஒன்றில் நமது நாட்டு உதவியாளர் ஒருவருடன் வரிசையாக அமர்ந்திருந்த அப்பிரதிநிதிகள் மாணவ, மாணவியர்க்கு மிக அழகாக விளக்கமளித்து வழி காட்டினர். 

பொறியியல், மேலாண்மை, தொழில்நுட்பம் போன்ற படிப்புகளை படிக்க நிறைய பேர் ஆர்வம் காட்டினர். சட்டத்தில் மேற்படிப்பு தொடர்பாக எனக்கு புகழ்பெற்ற எஸ்செக்ஸ் பல்கலைக்கழக பிரதிநிதி (பிரிட்டன்) நன்றாக விளக்கினார். எல்எல்.எம். ஓராண்டு படிப்புக்கு உண்டான கட்டணம் நமது இந்திய மதிப்பில் ரூபாய் 10 முதல் 12 இலட்சம். பிறகு உணவு, தங்குமிடம் போன்றவற்றுக்கு ரூபாய் 8 இலட்சம். மொத்தம் ரூபாய் 20 இலட்சம் வரை இருந்தால் படிப்புக்கு தயாராகலாம். கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) இருந்தால் அவர்களே நுழைவிசைவிற்கு (விசா) ஏற்பாடு செய்கின்றார்கள். அதுபோல உணவு, பல்கலைக்கழக விடுதி ஆகியவற்றுக்கும் ஏற்பாடு செய்து தரப்படுகின்றது. பாதுகாப்பு பிரச்சனை ஏதுமில்லை. எல்லாமே சட்டபடியும், அதிகாரப்பூர்வமாகவும் உள்ளது.





இது ஒருபுறம் என்றால், நிறைய பேர் எம்.பி.ஏ. (MBA) படிக்க ஆர்வம் காட்டினர். அயல்நாட்டில் எம்.பி.ஏ. படிக்க வேண்டுமென்றால், வணிக மேலாண்மை அல்லது வேறு படிப்பில் இளநிலை பட்டம் பெற்ற அம்மாணவர், நிறுவனம், தொழிலகம் போன்றவற்றின் மேலாண்மையில் 2 ஆண்டுகள் பணி புரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அப்பொழுதுதான் மனித வளம், மேலாண்மை போன்ற முக்கிய கிளைகளில் சேர முடியும். இல்லாவிட்டால் நிதி, வங்கியியல் போன்ற வேறு கிளைகள் கிடைக்கின்றன. பணி அனுபவம் இருப்பவர்களுக்கு உதவித் தொகையும் வழங்கப்படுகின்றது.



உளவியல், அரசியல் விஞ்ஞானம், நாட்டிடை உறவுகள், சமூகவியல், மானுடவியல், ஊடக அறிவியல். தகவல் தொடர்பு என விதம்விதமான படிப்புகளை இப்பல்கலைக்கழகங்கள் வழங்கும் சிறு பிரசுரங்கள், கையேடுகள் பட்டியலிட்டுக் காட்டுகின்றன.





சேர விரும்பும் படிப்பு எதுவாக இருந்தாலும், இப்பல்கலைக்கழகங்கள் குறிப்பாக கவனிப்பதும், விசாரித்து தெரிந்து கொள்வதும் எவை என்று கேட்டால் 10வது மற்றும் +2வில் பெற்ற மதிப்பெண்கள்தாம். இவை இரண்டிலும் குறைந்தபட்சம் 75 விழுக்காட்டுக்கும் மேல் மதிப்பெண்கள் பெற்று இருக்க வேண்டியது விரும்பத்தக்கது என்று வலியுறுத்துகின்றனர். அவ்வாறே ஆங்கிலப் பாடத்தில் 70 விழுக்காட்டிற்கும் மேல் பெற்று இருக்க வேண்டும் என்றும் சொல்லப்பட்டது.

நாட்டிங்ஹாம் பல்கலைக்கழக பிரதிநிதியிடம் பேசும்பொழுது அவர், "அயல்நாட்டில் கல்வி அல்லது மேற்கல்வியை கற்பது என்பது ஒரு புதிய அனுபவம். அது கல்வித் தகுதியோடு தன்னம்பிக்கை மற்றும் துணிச்சலையும் தருகின்றது. மொழியை பேசுவதற்கும், அறிவை அறிந்து கொள்ளவும் பயனாகின்றது. இவையே உடனடியாக ஒரு பெரிய வேலை வாய்ப்பை பெற்றுத் தந்துவிடும்," என கூறினார். இங்கு 'கூறினார்' என்பதை விட நுனிநாக்கு ஆங்கிலத்தில் கிட்டத்தட்ட ஒரு மெல்லிய பாட்டாக பாடினர் என்றுதான் சொல்ல வேண்டும்.

மாலை 6 மணி வரை நீடித்த இந்த ஓர் நாள் கல்வி விழாவில் கலந்து கொண்டது பயனுள்ளதாக இருந்தது.

விவந்தா பை தாஜ் விடுதியின் தரை தளத்தில் உணவகம் உள்ளது. எனவே புறப்படும் முன் அங்கு சென்றேன். தரை தளத்தின் ஒரு புறத்தில் அமைந்துள்ள அந்த உணவகத்தின் கட்டுமானம் வெகு அழகு. அதன் உணவு விவர விலைப் புத்தகத்தின் (மெனு புக்) அலங்காரமான வடிவமைப்பு ஒன்றே, அங்கு வழங்கப்படும் உணவின் விலையை சொல்லாமல் சொல்லக் கூடியதாகும். எனவே தக்காளி சூப்பிற்கு மட்டும் கட்டளை வழங்கி, நீச்சல் குளத்தருகே உள்ள மேஜையை தேர்ந்தெடுத்து அமர்ந்து கொண்டேன். இதற்கு இடைப்பட்ட சுமார் அரை மணி நேரத்தில் சில நிழற்படங்களை எடுத்தேன்.




இதைத் தொடர்ந்து புதினா இலை போட்டு, மிக மென்மையான சில நல்ல வாசனைகளுடன் (?!), மிகச் சூடாக தக்காளி சூப் வழங்கப்பட்டது. அதில் இட்டு சாப்பிட தனியாக ரொட்டி மற்றும் வருக்கி தரப்பட்டன. அவ்வாறே பசும் வெண்ணை ஒரு கிண்ணியில் வழங்கப்பட்டது. எனக்கு தக்காளி சூப்புடன் வருக்கியே சுவையானதாக இருந்தது.

மனதும், வயிறும் நிறைவாயின.

Comments

Informative post. Thanks for sharing.
"அயல்நாட்டில் கல்வி அல்லது மேற்கல்வியை கற்பது என்பது ஒரு புதிய அனுபவம். அது கல்வித் தகுதியோடு தன்னம்பிக்கை மற்றும் துணிச்சலையும் தருகின்றது. மொழியை பேசுவதற்கும், அறிவை அறிந்து கொள்ளவும் பயனாகின்றது. இவையே உடனடியாக ஒரு பெரிய வேலை வாய்ப்பை பெற்றுத் தந்துவிடும்," என கூறினார்.

கல்வி விழாவில் கலந்து கொண்டது
பற்றிய பகிர்வுகள் பயனுள்ளதாக அமைந்துள்ளது..பாராட்டுக்கள்.