மனைவியின் மொழியை புரிந்து கொள்வது எப்படி ?

சார் .... நீங்க ஒரு மேதாவியா இருக்கலாம்....! இல்லே... எந்த சொல்லுக்கும் விளக்கம் சொல்ற ஒரு அகராதியா கூட இருக்கலாம்...!! சரி.. அப்படி கூட வாணாம்..... 3வது மாடியிலே பெரிய பெரிய பல்பு போட்ட ரூம்லே ஏசி போட்டு வேலை பாக்குற சீனியர் ஆபிசரா கூட இருக்கலாம். ஆனா என்ன பிரயோசனம்...?

உங்களுக்கு உங்க மனைவியின் மொழி தெரியுமா...? அவங்க பேசுகின்ற ஒவ்வொரு வார்த்தைக்கும், வரிக்கும் ஒரு தனி அர்த்தம், பொருள் இருக்கு என்பது உங்களுக்கு தெரியுமா...? 

"அது தெரிஞ்சா, நான் ஏன் சார் இப்படி காலாகாலத்துக்கு வீட்டுக்கு போகமே, பொழுதென்னைக்கும் ஆபிசு, வேலைன்னு மாரடிச்சிகிட்டு இருக்கேன்" என்று சொல்கிறீர்களா...? 

கவலைப்படாதீர்கள்... கை கொடுக்கும் கையாக உங்களுக்கு நான் சில எளிய எடுத்துக்காட்டுகளை அடுத்தடுத்து முன் வைக்கின்றேன்...  (இது 'நீ ரொம்போ நல்லவொ' என்ற தலைப்பில் ஏற்கனவே வெளி வந்த பதிவின் இரண்டாம் பாகம் என்பது இங்கு கவனத்தில் கொள்ள வேண்டியது). சரி .... பாடத்தை ஆரம்பிக்கலாமா...? 

மனைவி : சரி.. உங்க இஷ்டம்
பொருள் :  நான் சொல்றதுதான் கரெக்ட். அதுக்கப்புறம் உங்க இஷ்டம்.

மனைவி : உங்களுக்கு என்ன இஷ்டமோ அதை செய்ங்க... போங்க...
பொருள் :  பின்னாடி எப்படியும் என்கிட்டேதானே வருவீங்க... அப்போ பாத்துக்குறேன்.

மனைவி : தாராளமா செய்யுங்க ....
பொருள் : எனக்கு துளி கூட இஷ்டமில்லே.

மனைவி : நான் இந்த வீட்டிலே யாரு..? வெறும் ஒப்புக்கு சப்பாதானே...?
பொருள் : இரு... இரு... உன்னை என்ன பண்றேன் பாரு...

மனைவி : என்னை என்ன கட்டுன பொண்டாட்டி மாதிரியா நடத்துறீங்க..?
பொருள் : நீதான் எனக்கு அடிமையே தவிர நான் அல்ல.

மனைவி : இது நமக்கு வேணும்..
பொருள் : எனக்கு வேணும்.

மனைவி : இதிலே எனக்கு ஒன்னும் வருத்தமில்லை.
பொருள் : வருத்தமாக இருக்கின்றேன்.

மனைவி : பக்கத்துக்கு வீட்டு வசந்தியோட மாமியார் என்னை நீங்க நல்ல வெச்சிக்கிட்டு இருக்கீங்களான்னு கேட்டாங்க...
பொருள் : பக்கத்து வீட்டுக்காரனோட எதற்காகவாவது பின்னாளில் சண்டை போட வேண்டும்.

மனைவி : போங்க... நீங்க ரொம்ப மேன்லியா இருக்கீங்க...
பொருள் : முதல்லே ஷேவ் பண்ணுடா வெண்ணை....

மனைவி : உங்க ஆபீஸ் பக்கத்திலேயே வீடு இருந்தா பரவாயில்லே...
பொருள் : வீடு மாற்ற வேண்டும்....

மனைவி : என்னை உங்களுக்கு பிடிக்குமா...?
பொருள் : பெருசா ஏதோ கேட்கப் போகின்றேன்.

மனைவி : என் புஜிலி குட்டி இல்லே.. என்னை உங்களுக்கு எவ்வளவு பிடிக்கும்ன்னு சொல்லுங்க பாக்கலாம்...?
பொருள் : உங்களுக்கு சுத்தமாக பிடிக்காத ஒரு விஷயத்தை செஞ்சிருக்கின்றேன்.

மனைவி : இங்கே நான் ஒருத்தி இருக்கேன்...
பொருள் : கண்களை கண்டபடி மேய விடாதே....

மனைவி : எனக்கு பிரைடு ரைஸ் ரொம்ப பிடிக்கும்.
பொருள் : எனக்கு சைனீஸ் மெனு பூராவும் பிடிக்கும்.

மனைவி : நான் குண்டாயிட்டேன் இல்லே...
பொருள் : அழகாக சிலிம்மா இருக்கேன்னு சொல்லு.

மனைவி : இன்னிக்கு செஞ்ச புது டிபன் ஐட்டம் உங்களுக்கு பிடிச்சிருக்கும்ன்னு நினைக்கின்றேன்.
பொருள் : ஒய்யலே .... செஞ்சு போடுறதே அப்படியே சாப்பிட பழகிக்கோ...

மனைவி : இதுலே பேச ஒண்ணும்மில்லே
பொருள் : நிறைய இருக்கு.

மனைவி : நான் அதை பத்தி பேச விரும்பலே.
பொருள் : ஏதாவது பேச ஆரம்பிப்பதாக இருந்தால், அதை முதலில் பேசுங்கள்.

மனைவி : பாருங்க.. எனக்கு எதுவும் வேணாம்...
பொருள் : எல்லாம் வேண்டும்.

மனைவி : அந்த சட்டை வேணாம்... இந்த சட்டை உங்களுக்கு ரொம்ப அழகாக இருக்கும். இதேயே வாங்கிக்கோங்க...
பொருள் : நீங்க என்னை விட 'லுக்'காக தெரியக் கூடாது.

மனைவி : குடும்பத்திலே ஆயிரம் இருக்கும்; ஆயிரம் நடக்கும்.
அதையெல்லாம் நீங்க அப்படியே வெளியே சொல்லக்கூடாது.
பொருள் : தான் அவ்வப்போது (சொற்களால்) அடித்து சித்ரவதை செய்வதை வெளியே சொல்லக் கூடாது.

மனைவி : ஏங்க... நான் திடீர்ன்னு செத்துப் போய்ட்டா...?
பொருள் : நீங்க உயிரோட இருக்கறப்போவே என்னோட பியுசர் லைஃபுக்கு வேண்டிய செக்யூரிட்டியை பண்ணிடுங்கோ....!

மனைவி: இது முடியாது.
பொருள் : ஆனா.. நானா இருந்தா முடிச்சி காண்பிப்பேன். 

மனைவி: இது முடியும்.
பொருள் : நீங்க எப்படி முடிப்பீங்கன்னு நான் பாக்கத்தானே போறேன்...? ஹாஹ..ஹா.....

மனைவி : எதுவும் பேசாமல், கண்களை பெரிதாக்கி ஆழ்ந்த சிந்தனையில் இருப்பது.
பொருள் : விபரீதமாக ஏதாவது நடப்பதற்கு முன் சரண்டர் ஆகி விடு.

மனைவியின் மொழிக்கு பொருள் தெரிந்து முழி பிதுங்கி விட்டதால்,
இப்போதைக்கு இது போதும்...!

என்றும் அன்புடன்,
பி.ஆர்.ஜெ.

Comments

மனைவியின் மொழிக்கு பொருள் தெரிந்து முழி பிதுங்கி
அனுபவ பகிர்வுகளுக்கு பாராட்டுக்கள்..!
புரியாததெல்லாம் புரிந்து கொண்டோம். தெரியாததெல்லாம் தெரிந்து கொண்டோம். இனி கவலையே இல்லை.

நல்லா அனுபவித்து எழுதியுள்ளீர்கள் போலிருக்கு.;) பாராட்டுக்கள்.
நாம் புரிந்து கொண்டதை அவர்கள் புரிந்து கொண்டாலே பெரிய விசயம்...!