பாலு மகேந்திரா மற்றும் அகிலா, ஷோபா, மௌனிகா

நான் காமிரா கவிஞர் பாலு மகேந்திராவின் தீவிர ரசிகன். அவரது ஒளிப்பதிவே காட்சியை வசனமாக்கும். அவர் இயக்கிய திரைப்படங்கள் அனைத்தும் உணர்வு பூர்வமானவை.  சொல்லும் கதை என்னமோ ஒரு வரிதான். ஆனால் அதில் ஓராயிரம் நுண் உணர்வுகளை கூட்டி நம்மையும் அந்தந்த கதாபாத்திரங்களாகவே மனதில் ஆக்கியவர். அவரது படைப்புகள் அனைத்தும் வாழ்வின் யாதார்த்தத்தை அழகாக, அமைதியாக பிரதிபலிக்கும்.

அவரைத் தவிர வேறு யாரும் இது வரை  ஊட்டியை இந்த அளவு அற்புதமாக காட்சிப் பேழைக்குள் பதிந்து, திரைக்கு தந்து  இருக்கமாட்டார்கள். அவரது படங்களில் கதாநாயகிகள்  தங்கள் நெற்றியில் வைத்துக் கொண்டு வரும் நாலணா அளவு பொட்டு ஒரு வித கவர்ச்சி கலந்த அழகை காட்டும். நடிப்பவர்களின் உடல் மொழியை இயக்குவதில் வல்லவர்.

இலங்கையின் மட்டக்களப்பில் 1934-இல் பிறந்த தமிழரான பாலு மகேந்திரா ஓர் சிறந்த ஒளிப்பதிவாளர், எழுத்தாளர், மூத்த இயக்குனர், தமிழ் சினிமா உலகின் முக்கிய படைப்பாளி. அவரது மரணம் சினிமா உலகிற்கு ஓர் பேரிழப்பு.

ரசிகர்கள் பலரது மனதிலும்  இடம்பெற்றவர் பாலு மகேந்திரா. அதே நேரத்தில் அவரது மனதில் நீங்கா இடம் பெற்றவர்கள் மூவர். அவர்கள் அகிலா, ஷோபா, மௌனிகா.



பாலு மகேந்திராவின் வாழ்க்கை முழுவதும் பெண்களால் நிரப்பப்பட்டதுதான். பாலு மகேந்திராவுக்கு மூன்று மனைவிகள். ஒருவர் அகிலா. இன்னொரு மனைவி பிரபல நடிகை ஷோபா. தற்கொலை செய்து கொண்டார். ஆனால் பெரும்பாலும் அவரை மனைவி என்று குறிப்பிடுவதில்லை பாலு மகேந்திரா. அவரை தன் தேவதை என்றே குறிப்பிடுவார்.

இன்னொரு மனைவி மௌனிகா. இப்போது பாலு மகேந்திரா உடலைப் பார்க்கப் போராடிக் கொண்டிருப்பவர். தன் வாழ்க்கையில் இந்தப் பெண்களின் பங்கு என்ன என்பதை ஒருபோதும் வெளிப்படையாகப் பேச மறுத்ததில்லை பாலு மகேந்திரா. அகிலா பாலு மகேந்திராவின் மனைவி அகிலா. இவருக்கு ஷங்கி மகேந்திரா என்ற மகன் உள்ளார். மனைவி அகிலா குறித்து பாலு மகேந்திராவின் கருத்து என்ன…? இதோ அவரது வார்த்தைகளில்….

“சினிமாவையும், இலக்கியத்தையும் அசுர வெறியோடு நேசிக்கும் எனக்கு, என் வாழ்க்கைத் துணையும் சினிமாவோடும், இலக்கியத்தோடும் சம்பந்தப்பட்டவளாக, என் அலைவரிசையில் இருப்பவளாக வேண்டும் என்று ஒரு பேராசை. இது அபத்தமான ஆசை, முட்டாள்தனமான எதிர்பார்ப்பு என்பதும் எனக்குத் தெரியும். அபத்தங்களும் முட்டாள்தனமும் நிறைந்ததுதான் என் வாழ்க்கை. ஏகப்பட்ட குழப்பங்கள் நிறைந்த என் வாழ்க்கையில் நேர்த்தியாக நான் வைத்திருக்கும் ஒரே விஷயம் சினிமாதான்.

இந்த உறவை (மௌனிகாவுடனான) ஆரம்பிப்பதற்கு முன், என் அகிலாவைப் பற்றி நான் யோசித்திருக்கவேண்டும். இந்த உறவு எவ்வளவு தூரம் அவளைப் புண்படுத்தும், வேதனைக்குள்ளாக்கும் என்றெல்லாம் எண்ணிப் பார்த்திருக்க வேண்டும். வாழ்க்கையை அந்தந்த நொடிகளாகவே இன்றுவரை வாழ்ந்து கொண்டிருக்கிற எனக்கு என் அகிலாவின் துக்கத்தை நினைத்துப் பார்க்க அப்போது தோன்றவில்லை. ..........

மௌனிகாவின் பேரன்பு… மௌனிகாவும் என் மனைவி தான். இந்த இடத்தில் மௌனியைப் பற்றியும், எனக்கும் அவளுக்குமான உறவு பற்றியும் நான் கொஞ்சம் விரிவாகப் பேசவேண்டியிருக்கிறது. மௌனிக்கும் எனக்குமான உறவு ஒரு நடிகைக்கும், டைரக்டருக்குமான படுக்கையறை சம்பந்தப்பட்ட உறவு என்றுதான் பலர் நினைப்பார்கள். ஆனால், உண்மை அதுவல்ல! ஏறக் குறைய இருபது வருஷங்களுக்கு முன் ஆரம்பித்த உறவு அது. இனியும் எதையும் நான் மறைப்பதற்கில்லை. ரொம்பவும் உடைந்துபோன ஒரு தருணத்தில், நான் உங்ககூடவே இருந்திரட்டுமா? என்று கண்கலங்கி நின்ற, அந்த சின்னப் பெண்ணுக்குப் புரியும்படி புத்திமதி சொல்லி, அந்த உறவை நான் முளையிலேயே கிள்ளிப் போட்டிருக்க வேண்டும். ஏனோ, அதை நான் செய்யவில்லை.
அந்த அபலைப் பெண்ணின் கேள்விக்குப் பின்னே இருந்த வேதனை, அவமானம், வலி அனைத்தையும் நான் அறிவேன். புத்திபூர்வமாக வாழாமல், உணர்வு பூர்வமாக மட்டுமே வாழத் தெரிந்த என்னை அது வெகுவாகப் பாதித்தது. அதன் விளைவுதான் எனக்கும் மௌனிக்குமான உறவு. ‘இவ்வளவு வேதனைப்படுகிற நீங்கள் ஏன் உங்கள் வாழ்வை இத்தனைச் சிக்கலாக்கிக் கொண்டீர்கள்?”
”காரணம் மௌனியின் பேரன்புதான். ‘நீங்க எனக்குத் தாலி கட்டவேண்டாம். உங்க காசு, பணம், சினிமா எதுவும் எனக்கு வேண்டாம். உங்கள் மூலமாக ஒரு குழந்தைகூட வேண்டாம். நீங்கள் என்னருகில் இருங்கள். அது போதும்!’ என்று சொல்லும் ஒரு ஆத்மாவை நான் எப்படி உதறித் தள்ளுவது? தன் இளமைக் காலத்தை எனக்காக, என்னுடன் பகிர்ந்துகொண்ட வளை எப்படி உதற? என் உறவு காரணமாகப் பழிச்சொல், அவமானம் அடைந்தவள் அவள். நான் வேலை இன்றி இருந்த மாதங்களில், தான் மட்டும் மாங்கு மாங்கென்று உழைத்து, பொருளாதார ரீதியாகவும் என்னைத் தாங்கிப் பிடித்தவள். இந்த செவ்வாய்கூட எனக்காக மாங்காடு அம்மன் கோயிலுக்கு வீட்டிலிருந்தே நடந்து போய், அங்கப்பிரதட்சணம் செய்திருக்கிறாள். ஒரு பெண்ணின் பூரணமான அன்பையும் அழுத்தமான பக்தியையும் உணர்ந்தவர்களால் எங்கள் உறவைப் புரிந்துகொள்ள முடியும். இருபது வருடங்கள், தன்னுடைய எல்லாவற்றையும் எனக்காக அர்ப்பணித்துவிட்டு இப்போது 35 வயதாகும் மௌனியை எப்படி நான் தூக்கிப் போடுவது? அதேசமயம், என்அகிலாவை நான் எந்தக் காலத்திலும் எவளுக்காகவும் விட்டு விலகியவன் அல்ல. அவளை நான் ஆத்மார்த்தமாக, ஆழமாக நேசிக்கிறேன். என்றாவது ஒரு நாள், என் நெஞ்சில் நிறைந்து வழியும் அன்பை, பொங்கிப் பிரவாகமெடுக்கும் பாசத்தை அகிலா புரிந்துகொண்டால் எனது இறுதி மூச்சு நிம்மதியாகப் பிரியும்!
”மௌனிகாவுக்கும் உங்களுக்குமான உறவில், உங்கள் மகன் ஷங்கியின் நிலை என்ன?”
”ஷங்கி என் சிநேகிதன். என்னை அணுஅணுவாகப் புரிந்தவன். மௌனி மீது கோபப்படவோ அவளை அவமரியாதை செய்யவோ அவனால் இயலாது. அன்பும் கருணையும் மென்மையும் கொண்ட கம்பீரமான ஆண் ஷங்கி. எனக்கும் மௌனிக்குமான உறவை அவன் அங்கீகரிக்கிறானா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. ஆனால், நிச்சயமாக அவன் அதை முழுவதுமாகப் புரிந்துகொண்டு இருக்கிறான். என்னை என் பலங்களோடும் பலவீனங்களோடும் நேசிப்பவன் ஷங்கி.’
”மௌனிகாவைத் திருமணம் செய்துகொண்டீர்களா?”
”என் சுகதுக்கங்களில் பங்கு கொண்டு நல்ல துணையாக, நல்ல சிநேகிதியாக, சமயங்களில் தாயாகக்கூட என்னைப் பாதுகாக்கிற பெண்ணை சினிமா வட்டாரத்தில், ‘பாலுமகேந்திரா வெச்சுகிட்டிருக்கிற பொண்ணு’ என்று கொச்சையாகக் குறிப்பிடுவதை என்னால் சகிக்க முடியவில்லை. அதனால் 98|ம் ஆண்டு குடியரசு தினத்தன்று அவளுடன் நான் அடிக்கடி செல்லும் ஒரு சிவன் கோயிலில் வைத்துத் தாலி கட்டினேன். மௌனி கழுத்தில் இருப்பது நான் கட்டிய தாலிதான். ஒரு குழந்தை பெற்றுக் கொண்டால் பிற்காலத்தில் என் குடும்பத்தில் அதனால் பிரச்னைகள் வருமோ என்ற ஒரே காரணத்துக்காக, தாயாகவேண்டும் என்ற ஆசையைக் கூடத் தவிர்த்தவள் அவள்.
‘ நான் பாலு மகேந்திராவின் மனைவிதான்… ஆனால் திருமதி பாலுமகேந்திரா அல்ல!! நான் திருமதி பாலுமகேந்திரா அல்ல… என்னை திருமதி பாலுமகேந்திரா என்று அழைக்காதீர்கள் என்று பத்தாண்டுகளுக்கு முன்பே அறிவித்துவிட்டவர் மௌனிகா. ஏன் அப்படி? “பாலு மகேந்திரா எனக்குத் தாலி கட்டியிருப்பதும் அவரோடு பல வருடங்களாக நான் குடும்பம் நடத்தி வருவதும் உண்மைதான். ஆனால், திருமதி பாலுமகேந்திரா என்று என்னைக் குறிப்பிட்டால், அகிலாம்மா எவ்வளவு வேதனைப்படுவார் என்பதை என்னால் பூரணமாக உணர முடிகிறது. 
முதலில் பாலுமகேந்திரா என்ற பெயரைப் பற்றி பலருக்குத் தெரியாத ஒரு விஷயத்தை இங்கு சொல்லியாக வேண்டும். அவரது தகப்பனார் பெயர் பாலநாதன். நண்பர்களாலும் உறவினர்களாலும் அவர் ‘பாலு’ என்று அழைக்கப்பட்டு வந்தார். ஆக, பாலுமகேந்திரா என்ற பெயரில் அவருடைய தகப்பனாரது பெயரும் சேர்ந்திருக்கிறது. எனவே, பாலுமகேந்திரா என்ற பெயர் ஒரு தனி நபரின் பெயரல்ல. அது பாலுமகேந்திராவைத் தலைவராகக் கொண்ட அவரது நேரடிக் குடும்பத்தைச் சேர்ந்த அவருடைய முதல் மனைவி அகிலாம்மா, மகன் ஷங்கி, பேரன் ஷிறேயாஸ், மருமகள் ரேகா ஆகியோரது குடும்பப் பெயர். ஒரு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற அடக்க முடியாத ஆவலை இயற்கை ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் அழுத்தமாகவே வைத்திருக்கிறது |
இனவிருத்தி வேண்டி. அந்த ஆசையும் அதற்கான வயசும் வளர்த்து ஆளாக்குவதற்கான சம்பாத்தியமும் ஆரோக்கியமும் எனக்கிருந்தும் குழந்தை வேண்டாம் என்று நான் முடிவு செய்தது, பிற்காலத்தில் அவரது குடும்பத்தில் இதனால் வீண் பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்று நான் கருதிய தன் காரணமாக மட்டும்தான். அவர் மூலம் எனக்கு ஒரு குழந்தை பிறந்தால் அந்தப் பையனுக்கோ பெண்ணுக்கோ நிச்சயமாக பாலுமகேந்திரா என்ற பெயர் சொந்தமாகி இருந்திருக்கும். காரணம், அந்தக் குழந்தை அவரது ரத்தம் என்பதால்! பாலுமகேந்திரா, எனக்குத் தாலி கட்டியதை முதன்முதலாக அவர் பகிரங்கப்படுத்தியதே, எனக்கும் அவருக்குமிடையே இருந்து வருகிற ஆத்மார்த்தமான உறவுக்கு, அவர் கொடுத்த சமூக அங்கீகாரம். எனக்கும் அவருக்குமான உறவில், எந்த எதிர்பார்ப்புகளும் எனக்கும் இல்லை. அவருக்கும் இல்லை. இனி இருக்கப்போவதும் இல்லை. நான் அவரை அவருக்காக மட்டுமே நேசிக்கிறேன். அவரும் அப்படித்தான். எனவேதான் அகிலாம்மாவின் முகவரியாகவும் அடையாளமாகவும் இருக்கும் திருமதி பாலுமகேந்திரா என்ற பெயரால் நான் குறிப்பிடப்படுவதில் எனக்கு உடன்பாடில்லை. பாலு மகேந்திரா இருக்கும்போது மட்டுமல்ல, அவரது மறைவுக்குப் பின்பும்கூட, திருமதி பாலுமகேந்திரா என்றால் அது அகிலாம்மாவைத்தான் குறிக்கும். என்னை பாலு மகேந்திராவின் துணைவி என்றோ அல்லது திருமதி மௌனிகா என்றோ குறிப்பிடுங்கள். மனைவி என்பதும் துணைவி என்பதும் ஒரே ஸ்தானத்தைக் குறிக்கும் வார்த்தைகள்தான். இருப்பினும் ஒரு ஆண், இரண்டு சம்சாரங்களுடன் வாழும்போது, பிரித்தறிதல் வேண்டி, மூத்த சம்சாரத்தை மனைவி என்றும் இளைய சம்சாரத்தை துணைவி என் றும் குறிப்பிடுதல் அவசியமாகிறது. இப்போது எனது பிரார்த்தனையெல்லாம், இந்த மனிதர் மறுபடியும் ஆஸ்பத்திரி அது இது என்று போகாமல், ஆரோக்கியமாக அவருக்குப் பிடித்த சினிமாவைச் செய்துகொண்டிருக்க வேண்டும் என்பது மட்டுமே. இந்த வரத்தை இறைவன் நிச்சயம் எனக்குத் தருவார்!

படம்

எனில்… ஷோபா யார்? அச்சாணி படத்தில் அறிமுகமாகி, கே பாலச்சந்தரின் நிழல் நிஜமாகிறது படத்தில் பிரபலமாகி, பசி படத்துக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றவர் ஷோபா. ஊர்வசி என்ற விருதினை மத்திய அரசு அவருக்கு அளித்தது. அப்போது அவருக்கு வயது 17. அடுத்த சில தினங்களில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஷோபா பாலு மகேந்திராவின் இன்னொரு மனைவி!! ஷோபாவுக்கும் தனக்குமான உறவைப் பற்றி பாலு மகேந்திரா இப்படி வர்ணிக்கிறார்…
“தேவலோகத்திலிருந்து பூமிக்கு வந்து கொஞ்ச காலம் இருந்து பிரிந்து போன அந்தத் தேவதையைப் பற்றி என்ன எழுதுவது? எதை எழுதுவது? அடுத்தவீட்டுப் பெண் போன்ற சராசரி தோற்றம் கொண்ட ஷோபா ஒரு அற்புதமான நடிகை என்பதையா… நடிப்பில் மிகுந்த தனித்தன்மையையும் தனக்கே தனக்கென்று நிறையப் பிரத்தியேகதைகளையும் வைத்திருந்தவர் என்பதையா… குமரிப்பெண் உடலுக்குள் கள்ளம் கபடமற்ற குழந்தை மனசோடு சதா வியப்பும் பிரமிப்புமாக பறந்து திரிந்த அவரது சந்தோஷத்தையா…? அந்த வண்ணத்துப் பூச்சி எனது தோளிலும் சிறிது காலம் உட்கார்ந்து என்னை மனசு நிறைந்த மகிழ்வில் ஆழ்த்திவிட்டுப், பின் ஒரு நாள் சட்டென்று பறந்து போன அந்தச் சோகத்தையா..? எதை? எதை எழுதுவது? மிக அடர்த்தியான உணர்வுகள் முட்டி மோதும் சமயங்களில் வார்த்தைகள் காணாமல் போய் விடுகின்றன.
நாம் தலையில் வைத்து கொண்டாடும் நமது தமிழ் நம்மை “அம்போ” என்று விட்டு விலகிக்கொள்கிறது. அந்த மனநிலையில் எனது ஷோபா பற்றிய ஒரேயொரு பதிவை மட்டும் உங்களோடு பகிர்ந்துகொண்டு நிறுத்திக் கொள்கிறேன். ஒரு மழைக் காலைப் பொழுது. குளித்துப், பூஜை முடித்து, அவளுக்குப் பிடித்தமான காட்டன் புடவையும், காலணா சைஸ் பொட்டும், ஈரத் தலையுமாக வந்து உட்கார்ந்தவளைப் பத்திரிகை நிருபர் ஒருவர் பேட்டி கண்டுகொண்டிருந்தார். அவர்கள் பேசுவது காதில் விழாத தொலைவில் உட்கார்ந்து நான் எதோ படித்துக்கொண்டிருந்தேன். அன்றைய பேட்டி அடுத்த வாரமே பிரசுரமாகியிருந்தது. அதில் ஒரு கேள்வி: மற்றவர்கள் ஒளிப்பதிவில் படு சுமாராகத் தெரியும் நீங்கள் பாலு சார் ஒளிப்பதிவில் பேரழகியாகத் தோன்றுகிறீர்களே… எப்படி இது…? ஷோபா சொல்லியிருந்த பதில்: “மற்றவர்கள் என்னை காமிரா, லைட்ஸ், மற்றும் ஃபிலிம் கொண்டு ஒளிப்பதிவு செய்கிறார்கள். எங்க அங்கிள் என்னைக் காமிரா, லைட்ஸ், மற்றும் ஃபிலிம் இந்த மூன்றோடும் நிறையப் பாசத்தையும் குழைத்து ஒளிப்பதிவு செய்கிறார். அவர் ஒளிப்பதிவில் நான் பேரழகியாக ஜொலிப்பதற்கு இதுதான் காரணம்.
” எடக்குமுடக்கான கேள்வி ஒன்றிற்கு ஷோபா சொல்லியிருந்த ஸ்பொன்டேனியசான பதிலில் தென்பட்ட அவரது அறிவுக் கூர்மை என்னைப் பிரமிப்பில் ஆழ்த்தியது.அதே போழ்தில், அவர்மீது நான் வைத்திருந்த அளவுகடந்த பாசத்தைப் பகிரங்கமாக மரியாதைப்படுத்துவதில் அவருக்கிருந்த ஆர்வம் என்னை நெக்கி நெகிழ வைத்தது. தேவலோகவாசிகளான தேவதைகள் பல யுகங்களுக்கு ஒருதடவை தான் பூமிக்கு வந்து போவார்கள். அப்படி வந்துபோன ஒரு தேவதை தான் ஷோபா.
ஷோபா ஒரு எரிநட்சத்திரம். வானின் ஒரு கோடியிலிருந்து, மறு கோடிக்கு மிகுந்த பிரகாசத்தோடு பாய்ந்து சென்று தனது இருக்கையைத் தெரிவித்துவிட்டு மறைவையும் உணர்த்திவிட்டு இருளில் கலந்து போன ஒரு எரிநட்சத்திரம். அந்தத் தேவதையின் வரவையும் மறைவையும், அவருக்கும் எனக்குமான உறவையும் அவர் மறைந்த அடுத்த வருடமே உங்களுக்கு சொல்லியிருந்தேன். “மூன்றாம் பிறை” படம் மூலமாக. மூன்றாம் பிறையின் கடைசிக் காட்சியில் நீங்கள் பார்த்த அந்த நெஞ்சு முட்டும் சோகம் அந்தக் காலகட்டத்தில் என் மனதில் நிறைந்து கிடந்த சோகத்தின் ஒரு துகள் மட்டுமே.! நெஞ்சு வெடிக்கும் என் துக்கத்தை எனது சினிமா மூலம் கொட்டித் தீர்த்துக்கொண்டேன். அப்படித் தீர்த்துக்கொண்டதால் இன்று உங்களுடன் இருக்கிறேன். ஷோபா மறைந்து முப்பது வருடங்களுக்கு மேலாகின்றன. இது உங்களுக்கு.. எனக்கு… எல்லா இன்னல்களிலிருந்தும் என்னைக் காத்துவரும் எனது காவல் தெய்வமாக அவள் இன்றும் என் அருகிலேயே இருக்கிறாள்…!”

Comments

பாலு மகேந்திராவைப் பற்றிய நல்லதொரு அலசல். ஷோபா தற்கொலை செய்துகொண்ட சமயத்தில் பத்திரிகைகளில் அடிபட்ட செய்தி ஒன்றை சொல்லவேண்டும் என்று தோன்றுகிறது. ஷோபாவுக்கும் பாலு மகேந்திராவுக்கும் இடையில் ஷோபாவின் தாயார் இருந்ததாக அப்போது சொல்லப்பட்டது. ஷோபா பாலு மகேந்திராவை எப்பொழும் அங்கிள் என்று அழைப்பதை வைத்து சில உண்மைகளை புரிந்துகொள்ள முடியும்.
இந்தளவு உண்மைகளை யாராலும் சொல்லவும் முடித்திருக்காது...

அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்...