நாங்க நிறைய அழுதுட்டோம் ...

அழுகையுடன் தொடக்கம் :

மனித வாழ்க்கை அழுகையுடன் தொடங்குகின்றது. பிறந்த குழந்தை அழுதவுடன், அது ஆரோக்கியமாக உள்ளது என்று மருத்துவர் சான்றளிக்கின்றார். எனவே மனிதன் முதலில் கற்றுக் கொள்வது அழுகை என்று சொன்னால் அது மிகை அல்ல.

அழுகை பல வகை :

இந்த அழுகையை முதலில் வெளிப்படுத்துவது  நமது கண்கள். 'கண்கள் குளமானது' என்கின்றோம். 'கண்ணில் நீர் வழிந்தது' என்கின்றோம். சில சமயங்களில் கண்களில் நீர் வராமலே 'ஓவென கதறி அழுவதும்' உண்டு. 'முதலைக் கண்ணீரும் உண்டு', 'ஆனந்தக் கண்ணீரும் உண்டு', 'நீலிக் கண்ணீரும் உண்டு'. 'இரத்தக் கண்ணீர் வடிப்பதையும்' கேள்விப் பட்டிருக்கின்றோம். இதற்கு சற்று வித்தியாசமாக 'மனதுக்குள்ளேயே அழுவதும் உண்டு'.

எப்பொழுது அழுகின்றோம்?

அழுகை என்பது வேதனையின் வெளிப்பாடு. துன்பம், பிரிவு, நட்டம், ஏமாற்றம்,  நம்பிக்கை துரோகம், இறப்பு, அவமானம்  என எத்தனையோ நிகழ்வுகள் அழுகைக்கு காரணமாகின்றன.

இவற்றின் போது நன்கு அழுது விட்டால் மனம் பின்னிட்டு அமைதி கொள்கின்றது என்பது உளவியல் பூர்வமான ஒன்று. ஏகப்பட்ட சிக்கல், துன்பம், இழப்பு இவற்றிலிருந்து மீண்டு வந்த பிறகு அப்படிப்பட்ட சிக்கல் மீண்டும் தோன்றினால் சமாளிக்கும் தெளிவு இந்த அழுகையில் கிடைக்கின்றது. "நாங்க ஏற்கனேவே நிறைய அழுதுட்டோம்... இனி அழ ஒன்னும் இல்லை... நடக்கறது நடக்கட்டும்... பாத்துக்கலாம்" என்ற திட்டவட்டமான வார்த்தைகள் இழப்பை சந்தித்த அழுகை தரும் தெளிவு.

 'என்ன செய்வது?', 'எப்படி கொண்டு செல்வது?', 'அடுத்து என்ன நடக்கும்?' என்ற கேள்விகளின் தாக்கத்தை அனுசரித்து அழுகையின் வெளிப்பாடும் வேறுபடுகின்றது.

கொஞ்சம் யதார்த்தமாக சிந்திக்கலாம் !

அதாவது திருமணமாகி சில வருடங்களுக்குள் கணவன் அகாலமாக  இறந்து விட்டால் மனைவியின் அழுகை சத்தம் அதிகமாக இருக்கும். காரணம், எதிர்கால பயம். கணவனின் மரணத்தால் முதலில் வருமான இழப்பு. மரியாதை குறைவு. குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கை பிரச்சனை. எப்படி தொடர்ந்து வாழ்வை முன்னெடுத்துச் செல்வது என்ற கேள்வி. இவை ஒவ்வொன்றையும் நினைத்து திடீர்திடீரென அழுகை வெடிக்கும். கணவன் இறந்து விட்டானே என்பதை விட இந்தக் கேள்விகளால் திணறும் மனது அழுகையை அதிகப்படுத்தும்.

திருமணமான ஓரிரண்டு ஆண்டுகளுக்குள் கணவன் இறந்த, அதுவும் குழந்தைகள் பிறக்காத நேர்வில், இளம் வயது மனைவியின் அழுகையில் பல்வேறு பிடிபடாத உணர்வுகள் மிதந்து கொண்டிருக்கும். மனைவியின் பெற்றோர் மற்றும் உறவினர் மனம் வேறு விதமாக சிந்திக்க தொடங்கி விட்டிருக்கும்.  "இடையில் வந்தான், இப்போது இல்லாமல் போய் விட்டான்... இருப்பவருக்கு இன்னும் எவ்வளவோ வாழ்க்கை இருக்கிறது... தொடர்ந்து அழுவதில் பயன் ஏதும் இல்லை" என்ற நிலையில் அங்கு ஒரு சம்பிரதாய அழுகை மட்டுமே கேட்கக் கூடும். அதாவது விதவைக் கோலம் இளம் வயது மனைவிக்கும் சரி.. அவளது பெற்றோர், உறவினருக்கும் சரி வேண்டாத ஒன்று என்று பட்டு விடும். மறுமண வாழ்வுக்கு மனம் சாத்தியமாகி விடும்.

ஒருக்கால் கணவன் ஓரளவு சம்பாதித்து, சொந்த வீடு, நகை நட்டு, சேமிப்பு, காப்பீட்டுப் பணம் ஆகியவற்றை விட்டு இறந்து விட்டிருந்தால், கணவனின் பாசம், அன்பு, சுகம் ஆகியன கிடைக்காமை தரும் ஏக்கம் நிலையான அழுகையை தொடர்ந்து தரும். 'வாழ வேண்டிய வயசுலே இப்படி அல்பாய்சுலே போயிட்டாரே... நான் வாங்கிட்டு வந்த வரம் அவ்வளவுதான்... ஏதோ இருக்கறதே வைச்சு சமாளிக்கின்றேன்.. இருந்தாலும் இந்தக் குழந்தைகளை நினைச்சாத்தான் கொஞ்சம் பயமாக இருக்கு" என்ற வார்த்தைகள் மெல்லிய அழுகையூடே வந்து விழும்.

அதே நேரத்தில் கணவன் ஊர் முழுக்க அல்லது வங்கி முழுக்க கடன் வாங்கி வைத்து விட்டு இறந்து விட்டிருந்தால் இந்த அழுகை சற்று வேறுபாடும். 'இந்த மனுஷன் அதைப் பண்றேன்... இதை பண்றேன்னு சொல்லி ஊரே சுத்தி கடன் வாங்கி வச்சிட்டு போயிட்டாரு... இப்போ என்ன பண்றதேன்னு தெரியலே... மனுஷன் செத்ததுக்கு அழுவறதா இல்லே.. இந்த கடன்காரங்களே நினைச்சு அழுவறதான்னு தெரியலே ?" என அழுகை பெருங்குரலாக இருக்கும்.

ஓரளவு வாழ்ந்து, பிள்ளைகளுக்கு கல்வி, திருமணம் என்று முடித்த பிறகு, அல்லது அறுபதாம் கல்யாணம் முடித்த பிறகு கணவன் இறந்து போனால் அங்கு அவரது 'பாடையை' தூக்கும் போதும், சிதையில் வைக்கும் போதும் வேதனை அழுகை சற்று தூக்கலாக இருக்கும். மனைவியின் கோலம் அமங்கலமாகும் போது விசுக்கென ஒரு அழுகை பொங்கும். இப்படி வாழ்ந்து முடித்த வாழ்வின் ஆண் துணை மரணம் சம்பந்தப்பட்ட பெண் துணைக்கு பல்வேறு நினைவுகளை மனதில் எழுப்பும். வாழ்ந்த வரை கணவன் தனது மனைவியை நன்றாக, சந்தோசமாக வைத்திருக்கலாம் அல்லது ஏதாவது குடைச்சல்களை தந்து வேதனைப் படுத்திக் கொண்டே இருந்திருக்கலாம். இதை அனுசரித்து வாழ்ந்து முடித்த கணவனின் மரணம் ஒரு விசனமா அல்லது விடுதலையா என்பது அமையும். வார்த்தைகளால் சட்டென விவரிக்க முடியாத உணர்வுகள் !

இவை எல்லாம் ஒரு புறமிருக்க, கணவன் இறந்து விட்டால் பணம், சொத்து என அனுபவிக்க நிறைய கிடைக்கும் என்ற நப்பாசை நினைவுகளுடன்  வாழ்ந்து வரும் நய வஞ்சக மனைவியின் அழுகை, யாரும் சந்தேகிக்க முடியாத நாடக அழுகையாக இருக்கும். பெரிய ஆர்ப்பாட்டம் அழுகையில் தெரியும். முதலை கண்ணீர் வடிக்கும். ஊர் உலகத்தில் நடக்காததை நான் சொல்லி விடவில்லை. அந்த வகையில் ஒரு கணவனின் மரணம், மனைவியின் கள்ளக் காதலை நிறைவேற்றலாம், பணம், பொருள்களை சுருட்ட வகை செய்யலாம். ஆடம்பர வாழ்விற்கு தடையற்ற வழி ஏற்படுத்தலாம்.

கணவனின் அழுகை :


ஒரு கணவன் இறந்த பிறகு மனைவியின் அழுகை பற்றி இதுவரை ஓரளவு பார்த்தோம். இதுவே மனைவி இறந்து விட்டால், கணவனின் அழுகை ? பொதுவாக "பொண்டாட்டி செத்துட்டா புருஷன் புது மாப்பிள்ளை" என்று சொல்வார்கள். ஆனால் இதில் எனக்கு பெரிய உடன்பாடு இல்லை. முதல் மனைவி என்றுமே முதல் காதல். கணவன் தனது வாழ்க்கை மற்றும் சமுதாய  நிர்பந்தத்திற்காக மீண்டும் மறு மணம் செய்து கொண்டாலும், முதல் மனைவியின் நினைவுகள் என்றும் அகலாது. அவன் தனது அழுகையை வெளிப்படுத்தி கொள்ளாது போனாலும், "நீ இருந்தா இப்படி எல்லாம் நடக்குமா...?" என்ற அழுகை என்றுமே அவன் மனதில் தொடர்ந்து கொண்டிருக்கும். இதில் கவனிக்க வேண்டியது கணவனின் மறு மணம் என்பது அவனது 'வாழ்க்கை மற்றும் சமுதாய நிலையை' முன்நிறுத்தியதாக இருக்கும். மனைவி இழந்த ஒரு ஆடவனுக்கு பெண் வேண்டுமென்றால், அவன் மறு மணம் செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என்ற நிலைப்பாடு ஏதும் கிடையாது என்பது இங்கு கவனத்திற்குரியது.

ஒரு நல்ல, பொறுப்புள்ள, அன்பான, அழகான, நம்பிக்கைக்குரிய முதல் மனைவியின் மரணம், கணவன் எவ்வளவு உயரத்திற்கு போனாலும் அவனுக்கு அது ஒரு நிலையான இழப்பு. என்னதான் சந்தோஷ சூழல்கள் ஏற்பட்டாலும், 'நீ என்னோட இல்லையே?' என்ற ஏக்க அழுகை அந்தக் கணவனின் மனதில் என்றும் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும்.

மனைவியை இழந்த ஒரு கணவனுக்கு மறு மண வாழ்க்கை பொருத்தமாக அமைவது அல்லது தொடர்ந்து நீடித்திருப்பது எல்லாம் மிக அரிது. அதுவும் குழந்தைகளுடன் இருக்கும் கணவன் மறுமணம் செய்து கொள்ள முனைவது கிட்டத்தட்ட ஒரு அபாயம்தான். இரண்டாம் தாரமாக வரும் பெண்ணுக்கு எத்தனையோ எதிர்பார்ப்புகள் இருக்கலாம்; அல்லது ஒரு கட்டாயத்திற்காக அவ்வாறு  வாழ்க்கைப்படலாம்; அல்லது வேறு உள்நோக்கங்களுக்காக திருமணம் செய்து கொள்ளலாம். புரிய முயன்றாலும் புதிராகவே தொடரும் வாழ்க்கை அது. தனியாக அமர்ந்து அவ்வப்போது வாய் விட்டு அழுவது ஒன்றுதான் வழி. தீதும், நன்றும் நாம் வரவழைத்துக் கொள்வதுதானே..!

குற்றங்களை தவிர்க்கும் அழுகை :

இவை யாவும் வாழ்க்கைத் துணை இறப்பினால் கிளம்பும் அழுகைகள். இதுவே நம்பியவர் ஏமாற்றும் போதும், துரோகம் செய்யும் போதும், தொழில் இழப்பு, நட்டம், அவமானம் ஏற்படும் போதும் நன்கு அழுது விட வேண்டும். இல்லாது போனால் அது பழி வாங்கும் உணர்வாக மாறி விடும். இந்த உணர்வு குற்றச் செயலில் சென்று முடியும். எனவே இங்கு அழும் அழுகை, மனதை சமாதானப் படுத்துகிறது; சாந்தப்படுத்துகிறது. பழி வாங்கும் உணர்வை நேர்மறை எண்ணமாக மாற்றுகிறது. மனதுக்குள் புழுங்குவதை விட அழுது தீர்த்து விடுவது நன்று.

இத்துடன் முடித்துக் கொள்கின்றேன். ஏதாவது குத்தம் குறை இருந்தா குத்திக் காட்டுங்க...!

Comments

மனைவி : நய வஞ்சக அழுகை இன்றைக்கு அதிகம் ஆகி இருப்பது உண்மை... அது கொடுமை...

கணவன் : குழந்தைக்காக வாழ்பவர்கள் அதிக பேர்கள்... நீங்கள் சொல்வது போல் /// தீதும் நன்றும் நாம் வரவழைத்துக் கொள்வதுதானே..! ///

முடிவு படி முடித்தால் பெரிய பாரம் குறை(யும்)யலாம்....

நன்றி... நல்லதொரு அலசலுக்கு வாழ்த்துக்கள்...
அருமையான பதிவு .
வாழ்த்துக்கள் .
நிறைய ஆராய்ச்சி செய்து பகிர்வுகள்
..
விடிஞ்சும் விடியாம ஒங்க பக்கத்த படிக்கலாம்னு வந்தா ஒரே அழுகயா அழுதிருக்கீங்களே, நல்லாருப்பீங்களா? (எப்படி என் கமெண்ட்டு?) ஒங்க கட்டுர ரொம்ப நல்லாவே இருக்கு. இன்னும் கொஞ்சம் கூட அழுதிருக்கலாம். அது சரி, மெட்ராசில சில வக்கீலுங்க நெறய பணம் புடிங்கிக்கிட்டு க்ளையண்ட்டுகள அழ விடறாங்களாமே அது உண்மையா?) – கவிஞர் இராய.செல்லப்பா, நியூஜெர்சி.
நல்ல பதிவு வாழ்த்துகள். அழுகையிலே இவ்வளவு விஷயம் இருக்கா?
@ திண்டுக்கல் தனபாலன்
//முடிவு படி முடித்தால் பெரிய பாரம் குறை(யும்)யலாம்....//

வருகைக்கு நன்றி தனபாலன் சார்..
முடிவான கருத்தை பிடித்து விட்டீர்கள்...
@ நண்டு @நொரண்டு -ஈரோடு
//அருமையான பதிவு. வாழ்த்துக்கள் .//

பல மாதங்கள் கழித்து வருகை தந்தமைக்கு நன்றி நண்டு சார்...
@இராஜராஜேஸ்வரி said...
//நிறைய ஆராய்ச்சி செய்து பகிர்வுகள்//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றியம்மா .....
@ Chellappa Yagyaswamy said...
//விடிஞ்சும் விடியாம ஒங்க பக்கத்த படிக்கலாம்னு வந்தா ஒரே அழுகயா அழுதிருக்கீங்களே, நல்லாருப்பீங்களா? (எப்படி என் கமெண்ட்டு?)//

கமெண்டு சூப்பர் சார்.... உங்க விடியல் வருகைக்கு நன்றி சார்....
@ Chellappa Yagyaswamy said...
//ஒங்க கட்டுர ரொம்ப நல்லாவே இருக்கு. இன்னும் கொஞ்சம் கூட அழுதிருக்கலாம். //

பாராட்டுக்கு நன்றி சார்... இதுவே ரொம்ப ஓவரா அழுத மாதிரி ஒரு பீலிங் வந்துடிச்சு சார்....
@Chellappa Yagyaswamy
//மெட்ராசில சில வக்கீலுங்க நெறய பணம் புடிங்கிக்கிட்டு க்ளையண்ட்டுகள அழ விடறாங்களாமே அது உண்மையா?//

மேட்டர் நியூ ஜெர்சி வரைக்கும் வந்திடுச்சா சார்....? இதப் பத்தி நாம பிரைவேட் சாட்டிங் செய்தால் நன்று....! நீங்க ஒரு முக்கியமான விசயத்தை பகிர்ந்து கொள்ள விரும்புறீங்க என்பது எனக்கு நல்லா தெரியுது... அவசியம் பேச வேண்டிய ஒன்று..
@ கும்மாச்சி said...
//நல்ல பதிவு வாழ்த்துகள். அழுகையிலே இவ்வளவு விஷயம் இருக்கா?//

உங்கள் முதல் வருகைக்கு நன்றி கும்மாச்சி சார்... கருத்துரைக்கு நன்றி...