வாழைப் பழத்தில் ஊசி ஏற்றும் கலை !


என்ன சார்..?  வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது ஒரு கலையா...? அதை கற்றுக் கொள்ள வேண்டுமா? என்று நீங்கள் கேட்பது புரிகிறது ....!

சார்..... வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது ஒரு மிகப் பெரிய கலை.... இந்தக் கலையை நான் மிகவும் சிரமப்பட்டு ஒருவரிடமிருந்து கற்றுக் கொண்டேன்... அதுவும் அவர் இந்தக் கலையை எப்படி பயன்படுத்துகிறார் என்பதை பல காலமாக அவருடன் இருந்து ஊன்றி கவனித்து கற்று, பயிற்சி பெற்றேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் !

இந்தக் கலைக்கு நாம் நன்கு அறிந்த ஒரு சிறிய எடுத்துக்காட்டை சுட்டிக் காட்ட வேண்டுமென்றால், கல்யாண விருந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் ஒருவர், "ஏப்பா... பாரு... பக்கத்துக்கு இலையிலே வடை இல்லை" என்று விருந்துப் பந்தியில் கூறுவது.அதாவது தனக்கு வடை வேண்டும் என்பதை அவர் ஊசி ஏற்றுகிறார்.

லிப்ட் கேட்டு ஏறுபவர், "இந்த தெரு வழியாக போனால், உங்கள் இடத்திற்கு சார்ட் கட் சார்.." என்று கூறி அந்த தெருவில் இருக்கும் தனது வீட்டருகே இறங்கிக் கொள்வது. இவை சூழலை நன்கு பயன்படுத்தி ஊசி ஏற்றி பலன் பெறுவது. இது எளிது.

சூழலை உருவாக்கி ஊசி ஏற்றுவதுதான் சற்று கடினம். இதற்கும் நமக்கு நன்கு தெரிந்த ஒரு கதையை நினைவு கூர்ந்து பார்க்கலாம்.  தனது தொப்பியை விட்டெறிந்து, குரங்கு தூக்கிச் சென்ற தொப்பியை கைப்பற்றிய தொப்பி வியாபாரி கதை நமக்குத் தெரியும்.

கடினமான ஆட்கள் எத்தனையோ பேரை நாம் நமது வாழ்வில் சந்திக்கின்றோம். இக்கட்டான தருணங்கள் எத்தனையோ நமது வாழ்வில் குறுக்கிடுகின்றன. அப்போது ஊசி ஏற்றி காரியம் சாதிக்க வேண்டுமென்றால், சம்பந்தப்பட்ட கடினமான ஆளை அல்லது இக்கட்டான தருணத்தை முதலில் வாழைப்பழமாக மாற்ற வேண்டும். இதுதான் மிக முக்கியமான செயல். இப்படி மாற்றாமல் ஊசி ஏற்றினால், ஊசி வளையலாம் அல்லது உடைந்து கூட போகலாம். அதாவது நினைத்தது நிறைவேறாது.

எப்படி வாழைப்பழமாக மாற்றுவது? 
அடிப்படை நுணுக்கங்கள் வருமாறு.



1. முதலில் வாழைக் காயை நன்கு கழுவுங்கள் ! அதாவது கடினமான ஆளை மூளைச்  சலவை செய்வது; கடினமான சூழலை இயல்பான ஒன்றாக்குவது. சாந்தப்படுத்துவது அல்லது சமாதானப்படுத்துவது என்றும் சொல்லலாம்.

2. அடுத்து காயாக இருப்பதை பழமாக மாற்றுங்கள் !! நடப்பதில் தன்னை விட சம்பந்தப்பட்ட ஆளுக்கே அதிக அனுகூலம் உள்ளது என்று கருத வைப்பது; கடினமான சூழலிலிருந்து தான் விடுபடுவதை விட கடினமான சூழல் தன்னை விடுபட்டு செல்வதே மேலானது என்று அச்சூழலுக்கு உணர்த்துவது. இதற்கு நிறைய பயிற்சியும், பொறுமையும் தேவைப்படும்.

3. தொடர்ந்து வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது !!! காய், கனிய வைக்கப்பட்டு விட்டது. இனி நினைத்தது நிச்சயம் நிறைவேறும். கடினமானது எளிதாகி விடும்.

4. முடிவாக, ஏற்றிய ஊசியை வெளியே எடுத்துவிடுவது. இதன் விளக்கம் என்னவென்றால், வந்த வழியே சத்தமில்லாமல் திரும்பி விடுவது. பலன் பெற்றாகி விட்டது. ஆர்ப்பாட்டம் தேவையில்லை. அங்கேயே குத்தி நிற்க வேண்டியதில்லை.


இங்கு கவனிக்க வேண்டியது, வெளிப் பார்வைக்கு பழமாக தோன்றும் சில, உண்மையில் பழுத்து இருக்காது. அதை இனம் கண்டு கொள்ளாமல் பழமாக தெரிகிறதே என்று நினைத்து நேரடியாக ஊசியை ஏற்றி விட்டால் ஊசி மாட்டிக் கொள்ளும். பிறகு எளிதாக எடுக்க வராது. அதாவது வெளிப் பார்வைக்கு இலகுவாக தெரியும் கடினமான ஆள் அல்லது சூழலிடம் ஊசி 'பாச்சா' பலிப்பது கடினம். எல்லாமே பொறுமையாக கேட்டு தெரிந்து கொண்டு, 'ஆகட்டும்... அப்புறம் பார்க்கலாம்.. என்னோட ஸ்டாண்ட் இதுதான்' என்ற 'காய்வெட்டு' நிலையாகி விடும். இந்நிலையை ஆங்கிலத்தில் 'Vulnerable' என்று சொல்வார்கள். அதாவது கருத்தை திணித்ததால் எதிர் ஆளுக்கு வடு படுமா அல்லது  திணித்தது தெரியாமல் விடு படுமா என்ற நிலை.


அதே போன்று பழுத்த பழத்தில் ஊசி ஏற்றி ஒன்றும் பலனில்லை. ஏனென்றால், அதுதான் பழுத்த பழமாயிற்றே !!


எந்த ஆழமான அல்லது முரண்பாடான கருத்தை பேசுவது அல்லது எழுதுவது என்றாலும் வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவதை போல பேசினால் அல்லது எழுதினால் திடீர் தாக்கங்கள் ஏற்படாது; தர்க்கங்கள் தவிர்க்கப்படும். நடந்தது தவறே என்றாலும், அது சரியானதுதான் என்று நியாயப்படுத்தி விட முடியும். நடந்தது சரியே என்றாலும், அது தவறு என்று மெய்ப்பிக்கவும் முடியும். 

Comments

ஜோரான பதிவு.
Thanks Sir.. for your first visit and comment...
படிக்கும் போதே சிரித்து விட்டேன்

பதிவு அருமை !

தொடர வாழ்த்துகள்...
வருகைக்கும், மறுமொழிக்கும் நன்றி திரு. சேக்கனா M. நிஜாம்
Unknown said…
சார்..உங்களை மாதிரி நகைச்சுவையாக எழுத எல்லாருக்கும் வராது..! பொறுமையா எழுதிறீங்க..! சித்தாந்தங்களையும் அனுபவங்களையும் இனிமையா வரையுறீங்க..! எப்படி இப்படி சுவாரஸ்யமா எழுதிப் பழகறதுன்னு எங்களுக்கெல்லாம் கொடைக்கானல் கூட்டிட்டு போய் வகுப்பு எடுத்தீங்கன்னா ..வாத்தியார் பட்டம் கொடுத்துடுவோம்..எங்களுக்கு சந்தேகமே இல்லை..கட்டாயம் கேட்டமாதிரி செஞ்சு தருவீங்க...முன்னாடியே நன்றி..சொல்லிக்கிறோம் !
எந்த ஆழமான அல்லது முரண்பாடான கருத்தை பேசுவது அல்லது எழுதுவது என்றாலும் வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவதை போல பேசினால் அல்லது எழுதினால் திடீர் தாக்கங்கள் ஏற்படாது; தர்க்கங்கள் தவிர்க்கப்படும். நடந்தது தவறே என்றாலும், அது சரியானதுதான் என்று நியாயப்படுத்தி விட முடியும். நடந்தது சரியே என்றாலும், அது தவறு என்று மெய்ப்பிக்கவும் முடியும்.

பயன் தரும் அருமையான வாழ்வியல் தத்துவத்தை எளிமையாக அளித்தமைக்கு பாராட்டுக்கள்..
@ ரமேஷ் வெங்கடபதி said...
//எப்படி இப்படி சுவாரஸ்யமா எழுதிப் பழகறதுன்னு எங்களுக்கெல்லாம் கொடைக்கானல் கூட்டிட்டு போய் வகுப்பு எடுத்தீங்கன்னா ..வாத்தியார் பட்டம் கொடுத்துடுவோம்..எங்களுக்கு சந்தேகமே இல்லை..கட்டாயம் கேட்டமாதிரி செஞ்சு தருவீங்க...முன்னாடியே நன்றி..சொல்லிக்கிறோம் //

இந்த அளவுக்கு காயை நல்ல சுத்தமாக கழுவி, சூப்பரா பழுக்க வைச்சு, ரொம்ப அழகா ஊசி ஏத்தி இருக்கீங்களே தலைவரே...!
நீங்கதான் எனக்கு வாத்தியார்..

@ இராஜராஜேஸ்வரி said...

//பயன் தரும் அருமையான வாழ்வியல் தத்துவத்தை எளிமையாக அளித்தமைக்கு பாராட்டுக்கள்..//

தங்கள் இனிமையான மறுமொழிக்கு நன்றி அம்மா..
MANI said…
vaazhai pazhathula immbutu matter irrukka, inime try panni paarpom.
@ MANI said...
//vaazhai pazhathula immbutu matter irrukka, inime try panni paarpom.//

ரொம்ப மகிழ்ச்சி மணி சார்.

வாழையடி வாழை என்று சும்மாவா சொல்லி வெச்சாங்க...?

அதோட இரும்பு, கல் எல்லாத்தையும் கரைக்கும் குணம் வாழைக்கு உண்டு....!
வாழைத்தண்டு சாறு சிறுநீரகக் கற்களை கரைத்து விடும்.... thavira.. வாழைப்பழத்தில் பல்வேறு சக்திகள் உள்ளன.

மறுமொழிக்கு நன்றி.....