நுகர்வோருக்காக வழக்கிடும் அவரது முகவர் வழக்குரைஞராக இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை - உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

நுகர்வோருக்காக வழக்குரைஞர் அல்லாத ஒரு முகவரும் வழக்கு நடத்தலாம் - உச்ச நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு

நுகர்வோர் ஒருவர் தனது வழக்கை தனது அதிகாரம் பெற்ற ஒரு முகவரை (ஏஜென்ட்) கொண்டு நுகர்வோர் குறை தீர் மன்றங்களில் நடத்தலாம் என்றும், அத்தகு முகவர் ஒரு வழக்குரைஞராக இருக்க வேண்டிய அவசியமில்லை என்றும், மருத்துவ கவனக்குறைவு வழக்குகளில் சம்பந்தப்பட்ட மருத்துவருக்காக அல்லது அவருக்கெதிராக இன்னொரு மருத்துவர் வழக்கு நடத்தலாம் என்றும் அண்மையில் உரிமையியல் மேல்முறையீடு ஒன்றில் நமது உச்ச நீதிமன்றம் தீர்ப்புரைத்துள்ளது. 


மாவட்ட நுகர்வோர் குறை தீர் மன்றத்தில் எழுந்த வழக்கு என்ன?

சேவைக் குறைபாடு தொடர்பாக சுற்றுலா நடத்துனர்கள் இருவர் மீது நுகர்வோர் ஒருவர் தெற்கு மும்பை மாவட்ட நுகர்வோர் மன்றத்தில் வழக்கிடுகிறார்.  அந்த நுகர்வோர் தனது வழக்கை நடத்த முகவர் ஒருவருக்கு அதிகாரம் அளித்திருந்தார். இப்புகார் நிலுவையில் இருக்கும் போது, எதிர் தரப்பினர்களான அச்சுற்றுலா நடத்துனர்கள் இடைநிலை மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அதில் புகார்தாரரான நுகர்வோருக்காக வழக்கு நடத்த அவரது முகவருக்கு அனுமதி வழங்கக் கூடாது என்றும், காரணம் அந்த முகவர் ஒரு வழக்குரைஞராக தன்னை பதிவு செய்து கொள்ளாதவர் என்றும் குறிப்பிட்டிருந்தனர். இதை ஆராய்ந்த மும்பை மாவட்ட மன்றம், நுகர்வோரின் அதிகாரம் பெற்ற முகவர் தன்னை ஒரு வழக்குரைஞராக பதிவு செய்து கொள்ளாத காரணத்தால், மாவட்ட மன்றத்தின் முன் தோன்றவோ, வாதுரைக்கவோ உரிமை பெற்றவர் அல்ல என்று தீர்ப்புரைத்தது.

ஆனால் இதே போன்ற பிரச்னை எழுந்த மற்றொரு புகாரில், நுகர்வோரின் அதிகாரம் பெற்ற முகவர்கள் அவருக்காக நுகர்வோர் மன்றங்களில் புகார் தாக்கல் செய்ய, செயல்பட, தோன்ற, வாதிட உரிமை பெற்றவர்கள் என்று தீர்ப்புரைக்கப்பட்டது. 

மாநில நுகர்வோர் ஆணையத்தில் முறையீடு:

ப்பிரச்சனைகளில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக  மாநில நுகர்வோர் ஆணையத்தில் முறையீடு செய்யப்பட்டன. அது, நுகர்வோரின் அதிகாரம் பெற்ற முகவர்கள் தோன்றி நடத்தும் வழக்குகளுக்கு எல்லாம் தடையாணை  பிறப்பித்தது. அதே நேரத்தில் நுகர்வோர் மன்றங்களில் நுகர்வோரின் முகவர்கள் தோன்றுவதிலிருந்து தடை விதித்து மாவட்ட மன்றங்கள் பிறப்பித்த உறுத்துக்கட்டளைக்கு தடையாணை பிறப்பிக்க மறுத்துவிட்டது. இதனால் நுகர்வோர் மன்றங்களில் அதிகாரம் பெற்ற முகவர்கள் தோன்றும் ஏராளமான வழக்குகள் அப்படியே நின்று போயின.


பம்பாய் உயர் நீதிமன்றத்தில் 
நீதிப்பேராணை (ரிட்) மனுக்கள் தாக்கல் :

மாநில ஆணையம் மேற்கண்டவாறு பிறப்பித்த தடையாணைகளுக்கு எதிராக பம்பாய் உயர் நீதிமன்றத்தில் இரண்டு நீதிப்பேராணை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அம்மனுக்களை பம்பாய் உயர் நீதிமன்றத்தின் ஈராயம் அனுமதித்து ஆணையிட்டன. அதில், "1986-ஆம் ஆண்டில் இயற்றப் பட்ட நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கட்டமைக்கப்பட்ட நுகர்வோர் மன்றங்கள், 'ஒரு உரிமையில் நீதிமன்றத்தின் அம்சங்களை கொண்டதாகும்' (trappings of a Civil Court) என்றும், ஆனால் அவை, "உரிமையியல் நடைமுறை சட்ட வகை முறைகளின் கீழ் உரிமையியல் நீதிமன்றங்கள் அல்ல (are not civil courts within the meaning of the provisions of the Code of Civil Procedure)' என்றும்" கருத்துரைத்தது.

இதன் அடிப்படையில், முடிவில் மாவட்ட மன்றம் அல்லது மாநில ஆணையத்தில் வழக்கிடும்   நுகர்வோர் ஒருவர் தனது வழக்குக்காக வழக்குரைஞர் ஒருவரை நியமனம் செய்து கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படக் கூடாது என்றும், அவ்வாறு வழக்குரைஞர் அல்லாத முகவர் ஒருவர் நுகர்வோர் மன்றங்களில்/ஆணையங்களில் தோன்றுவது 1961 -இன் வழக்குரைஞர் சட்டத்தின் வகைமுறைகளுக்கு முரண்பட்டதல்ல என்றும் பம்பாய் உயர் நீதிமன்றம் தீர்ப்புரைத்தது.

மேலும் மற்றொரு முக்கிய கருத்தையும் பம்பாய் உயர் நீதிமன்றம் முன் வைத்தது.  அதாவது,  வருமான வரிச் சட்டம், விற்பனை வரிச் சட்டம், முற்றுரிமை  மட்டும் தடுப்பூட்டும்  வணிக  நடவடிக்கை (Monopolies and Restrictive Trade Practices Act) சட்டம் ஆகியன சம்பந்தப்பட்ட அதிகராமைப்புகளுக்கு முன் வழக்குரைஞர்கள் அல்லாதவர்களையும் தரப்பினர்களுக்காக பேச, வாதிட அனுமதி அளிக்கின்றன. அவர்களை சட்டத் தொழில் புரிபவர்களாக கூற முடியாது. அவ்வாறே 1986-ஆம் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 2000 -ஆம் ஆண்டில் வகுக்கப்பட்ட விதிகள் மாவட்ட மன்றங்களில் நுகர்வோர்களுக்காக அதிகாரமளிக்கப்பட்ட முகவர்கள் தோன்றுவதை அனுமதிக்கின்றன. அவ்வாறு தோன்றுவதை வழக்குரைஞர்கள் சட்டம் பிரிவு 33-க்கு முரண்பட்ட ஒன்று என்று கூற முடியாது என பம்பாய் உயர் நீதிமன்றம் விளக்கமளித்தது.

ஒருவேளை அத்தகு முகவர்கள், மாவட்ட மன்றம்/மாநில ஆணையத்தில்   ஒழுங்கீனமாக நடந்து கொண்டால் அவர்களது வாதத்தை அந்த குறிப்பிட்ட வழக்கில் கேட்க மறுத்து அவை ஆணையிடலாம். அதற்கு அவற்றுக்கு அதிகாரம் உண்டு என்றும் பம்பாய் உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. 

உச்ச நீதிமன்றத்தில் உரிமையியல் மேல்முறையீடு

னினும் இத்தீர்ப்பினால் குறையுற்ற எதிர் மனுதாரர்கள் உச்ச நீதிமன்றத்தில் இரண்டு மேல்முறையீடுகள்  செய்தனர். அம்மேல் முறையீடுகளை ஆராய்ந்த இரண்டு நீதிபதிகள் அடங்கிய ஈராயம், அவற்றில் சட்ட முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனை அடங்கியுள்ளது என்பதால்,அவற்றை மூன்று நீதிபதிகள் அடங்கிய ஆயத்தின் முன் முடிவுக்கு வைத்தது.

அம்மேல்முறையீடுகளை மாண்பமை நீதியரசர்கள்   தல்வீர் பண்டரி, முனைவர் முகுன்டகம் சர்மா மற்றும் அணில் ஆர்.தேவே ஆகியோர் அடங்கிய ஆயம் பல்வேறு முன் தீர்ப்பு நெறிகள், சட்ட திட்டங்கள்,  பல நாட்டு சட்ட நிலைப்பாடுகள் ஆகியவற்றின் துணை கொண்டு ஆராய்ந்தது. 

அது தனது தீர்ப்பில் பல்வேறு சர்ச்சைகளுக்கு விளக்கமளித்து, முற்றுப் புள்ளி வைத்தது. அது தனது தீர்ப்பில் பம்பாய் உயர் நீதிமன்றம் எடுத்த மேற்கண்ட முடிவுகள் யாவும் சரியான ஒன்றே என ஏற்றுக் கொண்டது. மாவட்ட மன்றங்கள் / மாநில ஆணையங்கள் ஆகியவற்றில் நுகர்வோர்களுக்காக அவரது அதிகாரமளிக்கப்பட்ட முகவர்களை வாதிட அனுமதிக்கலாம், அம்முகவர்கள் சட்டத் தொழில் ஆற்றுபவர்களாக, வழக்குரைஞர்களாக இருக்க வேண்டுமென்பதில்லை என்ற கருத்தை பல்வேறு காரணங்களின் அடிப்படையில் சரியென அங்கீகரித்தது.

மருத்துவரின் வழக்குக்கு மற்றொரு மருத்துவர் தோன்றி வாதிடலாம் 
பொறியாளருக்கு எதிரான வழக்கில் புகார்தாரருக்காக மற்றொரு பொறியாளர் வழக்கு நடத்தலாம் 

து தொடர்பாக உச்ச நீதிமன்றம் 'மகாராஷ்டிரா நுகர்வோர் பாதுகாப்பு விதிகளை' பரிசீலிக்கையில், பின்வரும் கருத்துகளை தெளிவுபடுத்தியது. அதாவது, "நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் எழும் வழக்குகள் சிறிய அளவிலான இழப்பீட்டுக் கோரிக்கைகளை கொண்டவை. எல்லா வழக்குகளிலும் வழக்குரைஞர்களை நியமனம் செய்வது என்பது பொருளாதாரரீதியாக  சரி  வராது. அதே நேரத்தில் பல வழக்குகள் துறை சார்ந்த நிபுணர்களின் உதவி தேவைப்படுவதாக இருக்கும். எடுத்துக் காட்டாக, ஒருவர் மருத்துவ கவனக் குறைவுக்காக மருத்துவமனை மீது வழக்கிடலாம்; அல்லது கட்டட வரைபடத்தை தவறாக வரைந்து கொடுத்தமைக்காக வரைகலைஞர் மீது வழக்கிடலாம்; அல்லது கட்டடத்தை தவறாக கட்டிக் கொடுத்தமைக்காக கட்டட ஒப்பந்தக்காரர் மீது வழக்கிடலாம். இப்படிப்பட்ட வழக்குகளில், மருத்துவர், வரைகலை நிபுணர், பொறியாளர் போன்ற தொழிலாற்றுனர்கள், ஒரு வழக்குரைஞரை விட பொருத்தமானவர்கள் ஆவர். எனவே, புகார்தாரர் மற்றும் எதிர்தரப்பினர் ஆகிய இருவருக்கும் தங்கள் வழக்கை நடத்த அவர் வழக்குரைஞர் அல்லது சம்பந்தப்பட்ட துறையில் வல்லுனர்களாக இருக்கும் வேறு எவரையும் நியமனம் செய்யலாம், அதற்கு அவருக்கு உரிமை உண்டு. இந்நிலைப்பாடு வழக்கின் இரு தரப்பினரையும் சமமான நிலையில் வைக்கின்றது," உச்ச நீதிமன்றம் கூறியது.

விதிகள் வகுக்கும்படி தேசிய ஆணையத்திற்கு
உச்ச நீதிமன்றம் ஏவுரை 

மேலும் இது குறித்து விதிகளை வகுக்கும்படி தேசிய நுகர்வோர் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் சில ஆலோசனைகளை முன் வைத்தது. அவற்றின்படி அந்த முகவர் தனியொரு வழக்கு என்ற அடிப்படையில் தோன்ற வேண்டும். நுகர்வோருக்கும் முகவருக்கும் ஏற்கனவே ஏதாவது ஒரு வகையில் தொடர்பு இருக்க வேண்டும். (எடுத்துக்காட்டாக, உறவினர், அண்டை வீட்டுக்காரர், தொழில் துணைவர் அல்லது நெருங்கிய நண்பர் போன்று), மேலும் வழக்குக்காக கட்டணம் ஏதும் பெற்றுக் கொள்ளவில்லை என்று மாவட்ட மன்றத்தின் முன் அம்முகவர் விளம்புகை செய்ய வேண்டும், தரப்பினருக்காக தான் வழக்காட தகுதி பெற்றவர் என்பதை மாவட்ட மன்ற தலைவர் முன் காட்ட வேண்டும். இவ்வாறு பல்வேறு யோசனைகளை உச்ச நீதிமன்றம் முன் வைத்து அவற்றை விதிகளாக வகுப்பதற்கு பரிசீலனை செய்யும்படி தேசிய ஆணையத்திற்கு ஏவுரைத்தது.

முடிவு

முடிவில் முன் சொன்னபடி பம்பாய் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்து, அதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடுகளை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

முழு நீள ஆங்கிலத் தீர்ப்புக்கு 
பின்வரும் இணைப்பின் மீது சொடுக்கவும் 


C.Venkatachalam Vs. Ajitkumar C.Shah and Ors.  - C.A.No. 868 of 2003 and Bar Council of India Vs. Sanjay R.Kothari and Ors. - C.A.No. 869 - 870 of 2003 - Supreme Court of India - Dalveer Bhandari, Dr. Mukundakam Sharma & Anil R. Dev, JJ. - Decided on 29-08-2011.

Comments

aalunga said…
இது ஒரு நல்ல தீர்ப்பு...
இதன் மூலம், பல இடங்களில் நிகழும் தொழில்நுட்ப பிரச்சனைகளைத் (technical issues) தவிர்க்கலாம்..
மறுமொழிக்கு நன்றி..
Tamil Nenjan said…
நல்ல நல்ல பயனுள்ள தகவல்கள் தருகிறீர்கள்.. தொடருங்கள்... நாங்களும் தொடர்கிறொம் உங்கள் தகவல்களுக்காய்
@ Tamil Nenjan
//நல்ல நல்ல பயனுள்ள தகவல்கள் தருகிறீர்கள்.. தொடருங்கள்... நாங்களும் தொடர்கிறொம் உங்கள் தகவல்களுக்காய்//

மறுமொழிக்கு நன்றி..
நல்ல தகவல்கள் தெரிஞ்சுக்க முடியுது. நன்றி. நம்ம பக்கம் வல்லியே வாங்க
aalunga said…
நண்பரே,
தங்களின் இந்த பதிவிற்காக "லிப்ஸ்டர் பிளாக் (Liebster Blog)"விருதினை அளிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

எனது அவிழ்மடல் பெறும் முதல் விருது - லிபெஸ்டர் பிளாக் (Liebester Blog) - நண்பர்களுக்கு நன்றி! பதிவிற்கு வருகை புரிந்து விருதினைப் பெற்றுக் கொள்ளும் படி அன்புடன் அழைக்கிறேன்!