அணிலைப் போலவாவது வாழ்வோமே !


" ராமர் போல் அவதாரமாய் இருந்திருந்தால்
இலங்கை அசுரர்களை அழித்திருப்போம் .....

அனுமன் போல் பலமிருந்திருந்தால்
இலங்கைக்கு தீ இட்டு இருப்போம் ...

ஓடி வந்து உதவிட மனமிருந்தும்
இயலாமையால் தவிக்கிறோம் ....

காலம் கனியும் பொழுதினில்
அவதாரமாய்,பலவானாய்..
உதவ இயலாவிட்டாலும்

நிச்சயம் துரும்பெடுத்து போடுவோம்
அணில் பிள்ளை போல் .............."

இது அண்மையில் நான் படித்த, கவிஞர் சுஜா எழுதிய கவிதை. அப்படி ஒரு சிறு துரும்பெடுத்து போட்டதற்கே,  இராமாயணத்தில் அணிலுக்கு மிகச் சிறப்பானதொரு இடம் கிடைத்தது.

சீதையை மீட்க, கடலைத் தாண்டி இலங்கைக்குச் செல்ல பாலம் அமைக்கப்பட்டது. பாலவேலை நடந்த இடத்தில் இருந்த அணில், வானரங்களோடு சேர்ந்து பணிசெய்து ராமபிரானின் அருளுக்கு பாத்திரமாக வேண்டும் என்று எண்ணியது. கடல் நீரில் மூழ்கி, கடற்கரை மணலில் புரண்டு எழுந்தது. ஈரவுடம்பில் ஒட்டிக் கொண்ட மணலை குரங்குகள் போட்ட பாறையில் உதிர்த்துவிட்டு வந்தது. (சில குறிப்புகளில் அது மிகச் சிறிய கூழாங் கற்களை தனது வாயில் கவ்வி கொண்டு வந்து இட்டது எனப்படுகிறது). இப்படி இங்குமங்கும் ஓடிக் கொண்டிருந்த அணிலின் செயலை கவனித்தார் ராமன். அன்போடு அதன் முதுகில் தனது கைகளால் தடவிக் கொடுத்தார். அது அணிலின் முதுகில் மூன்று வெள்ளைக் கோடுகளாக விழுந்தன. அன்றுமுதல் அணில் ராமபிரானுக்கு மட்டுமல்ல, நமக்கும் அன்பிற்குரிய பிராணியாகிவிட்டது. 

இந்த ராமாயண குறுங்கதை சொல்லாமல் சொல்வது என்ன?

ராமபிரானின் அருளுக்கு பாத்திரமாக வேண்டும் என்பது அணிலின் விருப்பம். அதற்கு அவரது கருத்தைக் கவர வேண்டும். அருகில் பாலம் கட்டப்படுகிறது. ஆனால் அதற்காக பலம் வாய்ந்த வானரங்கள் பணி செய்கின்றன. சிறியவன், எளியவனாகிய தான் என்ன செய்து விட முடியும் என்று அணில் திகைத்தது. எனினும் தனது சக்திக்கு இயன்ற வரையில் செய்ய முடிவு செய்து அப்பாலம் கட்ட மணலை, (சிறு கூழாங் கற்களை) ஒட்டிக் கொண்டு வந்து உதிர்த்தது.    சிறிய உதவிதான். எனினும் அப்பாலத்தின் உருவாக்கத்தில் அணிலின் மணலும் சேர்ந்துள்ளது. அணில் காலத்தே செய்த உதவி ராமனின் மனதை ஈர்த்தது. அவர் அன்புடன் அணிலை தடவிக் கொடுத்து அதற்கு அருள் பாலித்தார். அணிலின் முதுகில் உள்ள மூன்று கோடுகள் அதற்கு ராமர் அணிவித்த தங்கப் பதக்கமாக இன்றும் காட்சி தருகிறது. இறைவனின் அருளைப் பெற்றதும்,   சமகாலத்தில் கண்ணெதிரே வாழ்வதுமான ஓர் உயிரினத்திற்கு இந்த சிறு அணிலும் ஒரு சான்று. முதுகில் மூன்று கோடுகள் உள்ள அணில்கள் ராமனின் அருளையும், அன்பையும் பெற்றவையாக போற்றப்படுகின்றன. அணில் 'பிள்ளை' என்று பாசமுடன் அழைக்கின்றோம்.

எளியவனின் சிறு உதவி என்றாலும் அது காலத்தே செய்யும் உதவியாக இருப்பின், மிகப் பெரியது. அதை போற்ற வேண்டும். மறந்து விடக் கூடாது. உதவி செய்தோருக்கு தக்க சமயத்தில் மறு உதவி செய்யவும் தயங்கக் கூடாது. 

ஆனால் இந்தக் காலத்தில் யார் இப்படிப்பட்ட கதை பற்றி கவலைப் படுகிறார்கள் ? கேட்டு கேட்டு உதவிகளை வலியப் பெற்று, பலன் அடைந்தவுடன், உடனடியாக அதை மறந்தும் விடுகிறர்கள். உதவி செய்தவரை எங்கோ பார்த்தது போல் பார்க்கும் கொடுமையும் நடக்கிறது. ஏறி வந்த ஏணியை எட்டித் தள்ளி விடுகிறார்கள். இன்னும் சில நேரங்களில் உதவி செய்தவனுக்கு சுயநலம் கருதி உபத்திரவம் செய்யவும் தயங்குவதில்லை. கொடுமையிலும் கொடுமை இதுவன்றோ..?

"வலியவனோ, எளியவனோ அவன் யாராக இருந்தாலும் எங்களுக்கு கேட்க மட்டும்தான் தெரியும். வாங்கியாச்சுன்னா அவ்வளவுதான்.., நீ யாரோ.. நான் யாரோ.. " என்று சொல்லும் கூட்டம்தான் இந்த உலகில்  அதிகம் நடமாட்டம் செய்கிறது. 

இப்படி கூட சொல்லலாம்... 

அதாவது, இராமாயணத்தில் ராமர் ஒரு மானுட அவதாரம். அப்படி ஒரு மனிதன் ஒரு நெருக்கடியில், தேவையில் இருந்த போது அவருக்கு அணில் உதவியது. அத்துடன் குரங்கு, ஜடாயு போன்ற மற்ற உயிரினங்களும் உதவின. அப்படி மற்ற உயிரினங்களே உதவும் போது ஒரு மனிதன் துன்பத்தில், தேவையில் இருக்கையில், மற்றொரு சக மனிதன் அவனுக்கு பெரிய உதவி செய்யாது போனாலும் அணிலைப் போல சிறு துரும்பையாவது தூக்கிப் போடலாம். சில ஆறுதல் வார்த்தைகள் கூட போதும். அதே போன்று செய்த உதவிக்கு ராமன் அணிலுக்கு கொடுத்த அங்கீகாரம் மிகப் பெரியது. அவ்வளவு பெரிதாக இல்லாது போனாலும், இந்த மனிதப் பிறவியினர் செய் நன்றி மறக்காமலாவது இருந்தால் நன்று. 

செய் நன்றி கொன்றவருக்கு இப்பிறப்பில் மட்டுமல்ல எப்பிறப்பிலும்  உய்வில்லை !  

Comments

M.R said…
நல்ல கருத்தை சொல்லும் பதிவு நண்பரே ,அருமை .

பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி
M.R said…
தமிழ்மணம் 2 வது வாக்கு
Anonymous said…
நல்ல ஆக்கம். வாழ்த்துகள் சகோதரரே.
வேதா. இலங்காதிலகம்.
@ kovaikkavi

மிக்க நன்றி சகோதரி..
ஆமாங்க அணிலைப்போல வாழ்வோம் . நல்ல பதிவுக்கு நன்றி
aalunga said…
"அணிலைப் போலவாவது வாழ்வோமே !"

அணில் ராமபிரானின் கவனத்தைக் கவரவே உதவி புரிந்ததாக கதை சொல்லப்படுகிறது.

ஒருவரின் அன்பைப் பெறுவதற்காக இருந்தாலும், எதையும் எதிர்பார்த்து உதவி செய்வது "தன்னலமற்ற உதவி" என்று சொல்ல முடியாது.

உதவி புரிவதன் மகத்துவமே அந்த உதவியால் பிறிதொரு பயன் பெறாமல் இருப்பதே!!

'பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது.'

பி.கு:இது என் சொந்த கருத்து தான்.. வேறுபாடு இருப்பின் தெரிவிக்கவும்
@ ஆளுங்க (AALUNGA)

நல்ல கருத்து. மறுபயன் கருதாமல் அணில் உதவி செய்திருக்க வேண்டும் என்று கூறுகிறீர்கள்.

ராமனின் அருளைப் பெற வேண்டும் என்பது அணிலின் அவா. வேறு எதிர்பார்ப்பு ஏதும் இல்லை. தனக்கு உணவு வேண்டும் என்றோ, வேறு உதவி வேண்டியோ ராமனிடம் அணில் நிற்கவில்லை. கேட்கவும் இல்லை. மேலும் சுவாமி... நீங்கள் அருள் கொடுப்பதாக இருந்தால் நான் துரும்பு தூக்கிப் போடுகின்றேன் என்று முன் நிபந்தனை எதையும் அணில் விதிக்கவில்லை. தேவையில் உள்ள மிகப் பெரிய ராமனுக்கு அவர் கேட்காமலேயே தன்னால் இயன்ற உதவி செய்ய வேண்டும் என்று சிறிய அணில் கருதியது. அருள் கொடுத்தாலும் பரவாயில்லை ... கண்டு கொள்ளாமல் விட்டாலும் பரவாயில்லை ... எதை பற்றியும் கவலை இல்லை. தன்னால் இயன்ற உதவி செய்வோம் என்ற அணிலின் எண்ணம் இங்கு போற்றுதற்குரியது. அதை மறக்காமல் ராமன் நினைவு வைத்திருந்ததும் போற்றுதற்குரியது. எத்தனையோ பேர் எவ்வளவோ உதவிகள் செய்வதற்கு வசதி வாய்ப்பு இருந்தும், செய்யாமல் உள்ளனர். உதவி வாங்கிக் கொண்டு மறந்து விட்டால் அதனால் என்ன பயன் என்று நினைப்பவரும் உளர். ஆனால் எந்த வசதியும் இல்லாத ஒரு அணில் செய்த செயல் போற்றுதற்குரியது. அதுதான் கட்டுரை சொல்லும் கருத்து.
aalunga said…
நல்ல பதில்.. நன்றி ஐயா!!