சரக்கு வாகன பயணிக்கு இழப்பீடு வழங்க காப்பீட்டு நிறுவனம் பொறுப்புடையதே !


சரக்கு வாகனத்தில் பயணிகளை ஏற்றி செல்லக் கூடாது. மீறி ஏற்றி செல்வது  அவ்வாகனத்தின் காப்பீட்டு பத்திர நிபந்தனைகளை (பாலிசி  கண்டிசன்)  மீறுவதாகும்.

அதாவது பயணிகளை ஏற்றி சென்ற அச்சரக்கு வாகனத்திற்கு விபத்து   ஏதும் ஏற்பட்டால், அதனால் ஏற்படும் இழப்புகளுக்கு அவ்வாகனத்தின் காப்பீட்டு நிறுவனம் ஈடு வழங்க பொறுப்புடையதல்ல.

சரக்கு வாகன பயணிகளுக்கு விபத்தால் ஏற்படும் பாதிப்புகளுக்கு (காயம் அல்லது மரணம் விளைதல்) அவ்வாகனத்தின் காப்பீட்டு நிறுவனம் இழப்பீடு வழங்க பொறுப்புடையதல்ல. காப்பீட்டு பத்திர நிபந்தனைகளை மீறி பயணிகளை ஏற்றிச் சென்ற சரக்கு வாகனத்தின் உரிமையாளரே இழப்பீடு வழங்க பொறுப்புடையவர்.  (New India Assurance Company Ltd., v. Asha Rani and others, AIR 2003 SC 607)

சற்றே தொகுத்து கூறினால், விபத்தை ஏற்படுத்திய சரக்கு வாகனத்தில் பயணம் செய்த ஒருவர், தனக்கு ஏற்பட்ட காயம் போன்ற பாதிப்புகளுக்காக இழப்பீடு கோரி தாக்கல் செய்யும் வழக்கில் அவ்வாகனத்தின் உரிமையாளர்தான் இழப்பீடு வழங்க ஏவுரைக்கப்படுவரே தவிர, காப்பீட்டு நிறுவனம் அல்ல.

காப்பீட்டு நிறுவனத்திற்கு எதிரான தீர்ப்பு என்றால் விரைவில் இழப்பீட்டை வசூல் செய்து கொள்ள முடியும். ஆனால் வாகன உரிமையாளருக்கு எதிரான தீர்ப்பு என்றால் வசூல் செய்வது கடினம்.

இந்நிலையில் அண்மையில் நமது சென்னை  உயர் நீதிமன்றம் உரிமையியல் சீராய்வு மனு ஒன்றில் வழங்கிய தீர்ப்பின்படி, மேற்கண்ட சூழல்களில் விபத்தால் பாதிக்கப்பட்ட சரக்கு வாகன பயணிக்கு முதலில் காப்பீட்டு நிறுவனம் இழப்பீடு வழங்கி விட்டு, பின் அதை அந்நிறுவனம் வாகன உரிமையாளரிடமிருந்து வசூல் செய்து கொள்ளலாம் (Pay and Recover). இதனால் சரக்கு வாகனத்தில் பயணம் செய்த கூலி போன்ற சாதாரண நபர்கள் எளிதாகவும் விரைவாகவும்  தங்கள் இழப்பீட்டை வட்டி மற்றும் செலவுத் தொகையுடன்  பெற முடிகிறது. 

பயனுள்ள  தீர்ப்பு.

(எனினும், ஓசிப் பயணமே ஆனாலும் சரக்கு வாகனத்தில் ஏறாதே. அது பாதுகாப்பான பயணம்  அல்ல என்பதே நீதி.)  

[Awards passed by Tribunal challenged in Revisions - Tribunal fastening liability on Insurance Company alone - There is violation of Policy condition, since persons travelled in goods vehicle - Following earlier decisions, Insurer directed to pay compensation and recover from owner of vehicle - Civil Revision Petitions partly allowed.]

Citation : 2011 (2) MWN (Civil) 778

The Divisional Manager, The United India Insurance Co. Ltd., Katpadi Road, Vellore Vs. 1. Sudha 2. K.Rajendran. - Madras High Court - T.S.Sivagnanam, J. - Decided on 11-11-2010.

Courtesy (Photo) : The Hindu

Comments