மசினகுடி போவோமா...?
நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து மகிழ்ச்சியாக பயணம் செய்து பல மாதங்கள் கடந்து விட்டன. எனவே எங்கு செல்லலாம் என்று ஒரு திட்டம்
போட்டோம்.
அப்போது நான் பணி புரியும் ஊருக்கு வாருங்களேன் என்று ஒரு நண்பர் அழைப்பு விடுத்தார். அவர் தமிழ்நாடு மின்சார வாரிய பொறியாளர். அவர் பணி புரியும் இடம் ஒரு அருமையான மலை வாசஸ்தலம். காட்டு விலங்குகளின் சுதந்திர பூமி. மனிதர்கள் அந்நியர்கள். போதும் 'பில்டப்' என்கிறீர்களா? அந்த இடத்தின் பெயர் 'மசினகுடி.' ஊட்டிக்கு சற்று கீழே சென்றால் இந்த தென்னிந்திய சுவிட்சர்லாந்து வருகிறது. நல்ல குளிர். அதே நேரம் 'உள்ளேன் அய்யா' என்ற பாணியில் வெயிலும் தலை காட்டுகிறது.
இயற்கை இங்கு மகுடிக்கு கட்டுண்ட நாகம் போல் மயங்கிக் கிடக்கின்றது.
பயணத் திட்டம் ரெடி. மசினகுடியில் தங்குவதற்கும், தின்பதற்கும் மின் வாரிய பொறியாள நண்பர் முன்கூட்டியே ஏற்பாடு செய்திருந்தார். எனவே கவலை இல்லை.
இதோ புறப்பட்டு விட்டோம்...... நமது வாகனம் சேலம் டூ கோவை சாலையில்
தனது டயர்களை சூடு பறக்க தேய்த்துக் கொண்டு பறந்தது.
(எத்தனை நாளைக்குத்தான் 'வழுக்கிக் கொண்டு சென்றது' என்று சொல்வது?)
அவினாசி அடைந்து விட்டோம். மதிய நேரம். 'சாப்பாடு ஆச்சா?' என்று வயிறு கேட்டது. ஊட்டி சென்று பின் மசினகுடி செல்ல வேண்டும். இன்னும் நீண்ட பயணம் காத்திருக்கிறது. ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால், தான் பிள்ளையை கொடைக்கானல் வளர்க்காது.. எனவே நாங்கள் அவினாசியில் எங்கள் வயிற்றுக்கு நாங்களாவே ஊட்டிக்கொண்டோம்.
போஜனம் முடிந்தது. பின் நேராக ஊட்டிக்கு ஜுட்....
ஊட்டி மலைப் பாதையில் வாகனம் விரைகிறது...
மலை வீடுகள்...
ஊட்டியில் ஒரு சூடான தேநீர்க்கு பிறகு மசினகுடி நோக்கி வாகனம்
வலப்புறம் திருப்புகிறது.
ஊட்டி டூ மசினகுடி மலைப்பாதை மிகவும் இறக்கமாக இருக்கிறது. கொஞ்சம் விட்டாலும் வாகனம் பள்ளத்தில் பாய்ந்து விடும். எனவே முதல் மற்றும் இரண்டாம் கியரிலேயே வாகனத்தை செலுத்தி வந்தோம். எனினும் அவ்வப்போது பிரேக் பிடிக்க வேண்டிய சூழல்.
இந்நிலையில் வாகனத்தில் இருந்து தீயும் நாற்றம் வந்தது.
பிரேக் சரியாக பிடிக்க வில்லை. நான் புரிந்து கொண்டேன். 'பிரேக் சூ' சூட்டல்
தேய்ந்து தீயும் நாற்றம் வருகிறது என்பதை. எனவே நடுக்காட்டில் வாகனத்தை நிறுத்தி சற்று ஓய்வு கொடுத்தோம். அப்போது நேரம் இரவு சுமார் 9 மணி இருக்கும். ஆங்காங்கே புலிகளின் படம் போட்ட விளம்பரங்கள் நம்மை சற்றே பயம் காட்டின. வாகனத்திலேயே சற்று நேரம் அமர்ந்து இருந்தோம். பயணம் செய்து கொண்டிருக்கும் வாகனத்தை ஓரிடத்தில் நிறுத்தி விட்டால் நமக்கு 'மூச்சா' போக வேண்டும். இது ஒரு அனிச்சை வியாதி என்று சொல்லலாம். முகுளம் தன்னிச்சையாக இட்ட கட்டளைக்கு கீழ்ப்படிந்து துணிச்சலாக வாகனத்தை விட்டு கீழிறங்கி மூச்சா போய், நிம்மதி அடைந்தோம்.
மசினகுடி அடைந்து விட்டோம். நண்பர் பேருந்து நிலையத்தில் எங்கள் வருகைக்காக காத்திருந்தார். பின் அவருடன் விருந்தினர் மாளிகைக்கு சென்றோம்.
அறையில் செட்டில் ஆகி விட்டோம். குளிர் அதிகமா இருந்த காரணத்தால் எல்லோரும் 'சுவட்டர்' அணிந்து கொண்டோம். (கவனிக்க : 'போட்டுக் கொண்டோம்' என்ற சொல் பிரயோகம் செய்யப்படவில்லை.) இரவு விருந்து முடிந்தது. பிறகு 'நைட் சபாரி' செல்லலாம் என்று நண்பர் சொல்ல அனைவரும் கிளம்பினோம். இதோ நைட் சபாரியின் போது காட்டு எருதுகளையும், யானைகளையும், கட மான்களையும் காட்டுகிறார் துணைக்கு வந்த மற்றொரு நண்பர். காட்டு முயல்கள் எங்கள் வாகனத்தின் முன் துள்ளி துள்ளி குதித்து ஓடின. சட்டென விவரிக்க முடியாத மகிழ்ச்சி உணர்வுகள்..
பதுங்கி இருந்த புலி கண்ணிமைக்கும் நேரத்தில் பாய்ந்து ஓடி விட்டது...
பைக்காரா இறுதி நிலை நீர் மின் நிலையம் முன்பாக..
அடுத்த நாள் காலை 'மாயாறு' சென்றோம்.. இந்த ஆறு அதல பாதாளத்தில் விழும் இடத்தில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யப் படுகிறது. இந்த ஆறு ஓடி, மலையில் இருந்து கீழே விழுந்து பின் எங்கு சென்று கலக்கிறது என்பதை பார்க்க முடியாது. மயமாக மறைந்து விடுகிறது. எனவே இதற்கு மாயாறு என்று பெயர் என்று விவரம் தெரிந்த ஒரு ஊர் பெரியவர் சொன்னார். உண்மையில் ஆறு சென்று விழும் இடத்தை காண இயலவில்லை. பாதாள பைரவியாக அமைந்திருக்கும் மின் உற்பத்தி செய்யும் இடத்திற்கு பழனி மலையில் உள்ளதைப்போல
'வின்ச்'-சில் நெட்டு குத்தலாக கீழிறங்கி மின் வாரிய பணியாளர்கள் செல்கிறார்கள். தினமும் உயிரை பணயம் வைக்கும் பயணம். வழியில் சில சமயங்களில் புலிகள் 'டாட்டா' காட்டுமாம்..
சாலையில் மான்கள் சர்வ சாதாரணமாக கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகின்றன.
ஆற்றிலே மீன் பிடித்து...
அங்கேயே அருமையான சமையல்...
மாலை வேளையில் மஞ்சள் சூரியன் விடை தர நாங்கள் சேலம் நோக்கி எங்கள் பயணத்தை தொடர்ந்தோம். இம்முறை பண்ணாரி, பவானி வழியாக சேலம் அடைந்தோம்..
சொந்த வாகனம் இருந்தால் பயணம் மிகவும் இனிமையாக இருக்கும்.. அவசியம் ஒரு முறை போய் பார்க்க வேண்டிய இடம். அங்கிருந்து அப்படியே மைசூர் செல்லலாம். கேரளாவும் செல்லலாம்.
எல்லாம் பக்கம்தான்.
முடிவில் தாயுள்ளத்தோடு வரவேற்று, உபசரித்து, சற்றிக்காட்டிய நண்பருக்கு நன்றி சொல்லாது போனால்
இந்தப் பதிவு முழுமை பெறாது. அவருக்கு என் சார்பிலும், பயண நண்பர்கள் சார்பிலும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம் !
Comments
மிக அருமையான சொர்க்கம் மசினகுடி .நல்ல பகிர்வு
நட்புடன் ,
கோவை சக்தி
எங்கள் பயணம் பாருங்கள்
http://kovaisakthi.blogspot.com/2011/04/blog-post.html
http://kovaisakthi.blogspot.com/2011/04/2.html