கொடிக்கு குடை
அனைவருக்கும் முதலில் என் சுதந்திர தின நல் வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்று அதிகாலை முதல் எங்கள் சேலம் மாவட்டத்தில் விடாது மழை கொட்டித் தீர்த்தது. எனவே எங்கள் சேலம் வழக்குரைஞர்கள் சங்கத்தில் வழக்கம் போல் காலை 8 மணிக்கு தேசியக் கொடி ஏற்றுவது தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. எனவே கொடி ஏற்றிய பிறகு உண்ணும் காலை சிற்றுண்டியை (சூடான கேசரி, நெய் பொங்கல், வடை, பொடி தோசை, இட்லி, சாம்பார், தேங்காய் சட்னி, தக்காளி மற்றும் கொத்துமல்லி சட்னி, டிகிரி காபி சகிதம்) நான் உள்ளிட்ட வந்திருந்த வழக்குரைஞர்கள் அனைவரும் மெல்ல முடித்துக்கொண்டோம்.
பிறகு மணி சுமார் 8.40 அளவில் மழை சற்றே விட்டது. எனவே நமது தேசியக் கொடியை தயார் செய்து, அதை கொடிக் கம்பத்தில் ஏற்றுவதற்கு ஏதுவாக மடித்து கம்பத்தில் கட்டப்பட்டது. இவ்வாறு கட்டி முடித்த பின் மீண்டும் மழை பிடித்துக் கொண்டது. நமது தேசியக் கொடி நனையக்கூடாது என்பதற்காக அதற்க்கு குடை பிடிக்கப்பட்டது.
பின் சுமார் 9.00 மணி அளவில் மழை நின்றது. அந்த நேரத்தை பயன்படுத்தி தேசியக்கொடியை நேற்று முன் தினம் புதிதாக பொறுப்பு ஏற்றுக்கொண்ட எங்கள் சங்கத் தலைவர் திரு ஜி.பொன்னுசாமி ஏற்றி, சுதந்திர தின வாழ்த்துகளையும், செய்தியையும் கூறினார்.
அவர் தனது உரையில் "அந்நிய நாட்டு வழக்குரைஞர்கள் நமது இந்தியாவில் அலுவலகம் அமைத்து சட்டத் தொழிலற்ற அனுமதிக்கக் கூடாது என்றும், அப்படி அனுமதித்தால் நமது இந்திய வழக்குரைஞர்களின் தொழில் சுதந்திரம் பாதிக்கப்படும் என்றும்" கூறினார். மேலும் ஒரு குறுந் தகவலையும் அவர் சொன் னார்.அதாவது "மனிதர்களுக்கும் பட்டாம்பூச்சிக்கும் மட்டுமே ஒரு சக்தி உண்டு என்றும், அது நிறங்களை கண்டறியும் சக்தி என்றும்" அவர் குறிப்பிட்டார்.
பிறகு சட்டதொழிலில் பொன் விழா கண்ட மூத்த வழக்குரைஞர்களுக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இத்துடன் சுதந்திர தின விழா இனிதே நிறைவு பெற்றது.
இதில் சங்கத்தின் உப தலைவர் வழக்குரைஞர் திரு எஸ்.டி.மணிவாசகம், செயலாளர் திரு விவேகானந்தன், பொருளாளர் திரு சுந்தரேஸ்வரன், துணை செயலாளர் திரு ஸ்ரீதர், நூலகர் திரு அருண் உள்ளிட்ட சங்க நிருவாகிகள் மற்றும் வழக்குரைஞர்கள் பலர் கலந்து கொண்டனர். மழையின் காரணமாக வழக்குரைஞர்கள் கூட்டம் குறைவாகவே குழுமி இருந்தது. மீண்டும் மழை பிடித்துக் கொண்டது. இந்த பதிவை எழுதும் பொது காலை நேரம் 11.30. அப்போதும் மழை பெய்து கொண்டிருந்தது.
சுதந்திரத்தை மழையும் கொண்டாடுகிறது போலும் !
Comments
வரவேற்க வேண்டிய செய்தி.
நமது நாட்டில் உள்ள வழக்கறிஞர்கள், தங்கள் திறமையை வளர்த்து, நல்ல முறையில் சேவை புரிந்து, சமூகத்தில் அவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்க வழிகாண வேண்டும்.
நான் எங்கள் வீட்டில் சோற்றுப் பஞ்சம் ஏற்பட்டு விட்ட காரணத்தால் கொடியற்றும் விழாவன்று எதாவது சாப்பிட கிடைக்குமா என்று வழக்குரைஞர்கள் சங்கத்திற்கு வந்து விடவில்லை என்பதை ஆழ்ந்த வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறேன். எங்கள் வீட்டிற்கு எந்த நேரத்தில் யார் வந்தாலும் அறுசுவை உணவு பரிமாறப்படும் என்பது அப்போதைய கல்லூரித் தோழர்கள் உள்பட யாவரும் அறிவர். மழை பெய்து கொண்டிருந்த காரணத்தால் கொடியேற்றும் நேரம் தாமதமானது. எனவே சிற்றுண்டியை முடித்துக் கொள்வது நலம் என்று விரும்பப்பட்டது குறித்து நான் ஏற்கனவே அப்பதிவில் எழுதியுள்ளதை நண்பர் முருகேஷ் ஏனோ கவனிக்கவில்லை. இருந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஒரு நிகழ்வை முடித்துக் கொண்டது ஒரு குற்றமா?
நான் நினைக்கிறேன்....
இப்படி எனது பதிவிற்கு ஒரு பரபரப்பு ஏற்பட்டதற்கு காரணம், "எங்கள் அணி வெற்றி பெற்றது" என்ற தலைப்பில் நான் முன்னதாக எழுதிய பதிவு என்றே கருதுகிறேன். அதை "வெற்றி பெற்ற அணிக்கு வாழ்த்துகள்" என்ற தலைப்பில் மாற்றியுள்ளேன். நான் சங்க நிருவாகிகளின் நற்பணிகளை நினைவு கூர்ந்து எழுதினேன். அவ்வளவுதான். எனக்கு எல்லா நண்பர்களும் வேண்டும். எல்லா அணியும் வேண்டும். நான் யாரையும் வேண்டாதவர்களாக கருதவில்லை என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.