"ராவணன்" - பழைய பானையில் புதிய கள்

சட்டத் தேர்வுகள் எழுதி முடித்து விட்டு எனது மகள் ஊர் திரும்பி இருந்தார். வந்தவுடன் ஏதாவது திரைப்படம் போகலாம் என்று சொன்னார். அத்துடன் 'ராவணன்' படத்திற்கு போகலாம் என்றும்  சொன்னார். (படம் பார்க்க எனக்கும் ஒரு சாக்கு ஏற்பட்டு விட்டது). எனவே எல்லோரும் கிளம்பி விட்டோம்.

சந்தனக் கடத்தல் வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு யாருக்கு நன்மை ஏற்பட்டு இருந்தாலும் மணி ரத்தினம் சாருக்கு ஏற்பட்டு நன்மை மிகவும் அளப்பரியது. கதைக் களம் பூராவும் ஓஹேனக்கல், கர்நாடக காட்டுப் பகுதிகள் என சந்தன வாசம் வீசுது. படப் பிடிப்பு பிரமாண்டம். ஆனா கதை ராமாயணப் பழசு. பழசு என்ன பழசு... ராமாயணமேதான்.

ராமர் - பிருதிவிராஜ்
சீதை - ஐஸ்வர்யா ராய்
அனுமார் - கார்த்திக்
ராவணன் - விக்ரம்
சூர்பனகை - பிரியாமணி

இன்னும் கும்பகர்ணன், விபிஷணன் போன்ற ராமாயண கதா பத்திரங்களுக்கும் நடிகர்கள் உண்டு.

சீதையை (ஐஸ்வர்யா ராய்) ராவணன் (விக்ரம்) கடத்திக் கொண்டு போவதும், அதை அனுமார் (கார்த்திக்) போட்டுத்தரும் பாதையில் பிருதிவிராஜ் (ராமர்) அண்ட் பார்ட்டி சென்று மீட்பதும், முடிவில் ராவணன் வதம் செய்யப்படுவதும் கதை. சீதையை கடத்திக் கொண்டு போக ஒரு சிறிய பிளாஷ் பேக். அதாவது விக்ரமின் (ராவணனின்) மாற்றான் தங்கை பிரியாமணியின் (சூர்பனகையின்) கற்பு பிருதிவிராஜ் (ராமர்) பார்டியால் சூறையாடப்படுவது.


திருமணதிற்கு பிறகு இன்னும் சிகப்பாக (வெள்ளையாக) தெரிகிறார் ஐஸ்வர்யா ராய். உயர்ந்த, பகட்டான ஆடைகளுடன் பார்த்துப் பழகிய கண்களுக்கு, அவரை படம் முழுக்க கிழிந்த, அழுக்கான உடைகளுடன் பார்க்க சங்கடமாக உள்ளது. இவர் ஒரு புறம் என்றால், மறுபுறம் நடிப்பில் அடுத்த சிவாஜி கணேசன் ஆகி விடுவர் போல் உள்ளார் விக்ரம். அவரது புஜங்கள், கண்கள் என எல்லாம் பேசுகிறது. ஒரு கட்டத்தில் தனது கணவன் பிருதிவிராஜ் மீது ஐஸ்வர்யா ராய் கொண்டுள்ள காதல் தெரிந்து விக்ரம் பொறமை கொண்டு பேசும் வசனக் காட்சிகள் கவிதை. பிருதிவிராஜ்க்கு பெரிய வேலை ஒன்றும் இல்லை. ஆனால் கிளைமாக்சில் அவர் செய்யும் தந்திரம் படம் முழுவதும் சுருங்கி அமர்ந்திருந்த நம்மை நிமிர வைக்கிறது. ஓரளவு தப்பித்துக்கொண்டார் மணி ரத்தினம்.


ராவணன் விக்ரமை ஒன்றும் செய்ய முடியாத நிலையில் ஐஸ்வர்யாராயை மட்டும் மீட்டுக் கொண்டு வந்த பிறகு பிருதிவிராஜ் ஒரு முக்கியமான கேள்வியை ஐஸ்வர்யாராயிடம் கேட்கிறார். "14 நாள் அவன் உன்னை வச்சிக்கிட்டு இருந்தானே ... அப்போ உன்னை அவன் தொடலே" என்று ஐஸ்வர்யாராயை ராமர் சந்தேகப்பட்டது போல இந்த எஸ்.பி. பிருதிவிராஜும் சந்தேகப்படுகிறார். அதற்கு 'இல்லை' என்று ஐஸ்வர்யா மறுக்கிறார். இந்நிலையில் அதற்காக அக்கினிப் பிரவசம் செய்யச் சொல்லப் போகிறாரோ என்று நினைத்தால், lie detector-ரைக் கொண்டு சோதனை செய்ய இருப்பதாகச் சொல்கிறார். தன்னைப் பற்றி தவறாக விக்ரம் ஏதாவது போட்டுக் கொடுத்துள்ளாரோ என்று அறிய அவரை மீண்டும் சந்திக்க ஐஸ்வர்யா ராய் வரும் போது, அவரைப் பின் தொடர்ந்து வந்து விக்ரமை போட்டுத் தள்ளுகிறார் பிருதிவிராஜ். கதை ஒரு பெண்ணாசையற்ற ஆனால்  பின் பெண் அருகாமை உணர்ந்த விக்ரமின் முடிவுடன் முடிகிறது. ரசிகர்களுக்கு ராவணன் விக்ரம் நல்லவராக காட்சி அளிக்கிறார்.


நேற்று நாங்கள் படம் பார்க்கச் சென்று இருந்த போது, சேலத்தில் வாழும் திருநங்கைகள் நிறைய பேர் (சுமார் 30-க்கும் அதிகமானவர்கள்) நவீன உடைகள் உடுத்தி, வெகு அலங்காரத்துடன் படம் பார்க்க வந்திருந்தனர். இவர்கள் எல்லோரும் ஒன்று திரண்டு இந்தப் படத்திற்கு வந்திருந்தது சற்று வியப்பை தந்தது. படம் போட்ட பிறகுதான் இவர்கள் வந்திருந்ததற்க்கு ஒரு காரணம் புரிந்தது. இவர்கள் வேடத்தில் ராவணனின் நண்பராக ஒரு நடிகர் நன்றாகச் செய்திருந்தார். அதற்க்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக இவர்கள் வந்திருந்தது புலனானது.
 
ஒரே கதைக் களம் என்பதால் போரடிக்கிறது. பின்னணி இசையில் அடிக்கடி ஒப்பாரி பாடல் மெலிதாக வருவதால் வசனங்களை சரியாக கேட்க முடியவில்லை. பாடல்கள் இரண்டு நன்று. "தேக்கு மரக் காடு பெருசுதான்... தீக்குச்சி ஒன்று சிறிசுதான்.." என்ற பாடல் அனேக செல்லிடபேசியின் அழைப்பு மணிப் பாடலாக இன்று உள்ளது. இன்னொரு பாடலில்  "தடா... புடா.. கஜா.. பூஜா.." என்று ஏதோ வரிகள் வருகின்றன. பொருள் தெரியவில்லை. இறுதியில் தொங்கு மரப்பாலத்தின் (அதாவது ராமர் பாலமாம்) மீது நடக்கும் சண்டை காட்சி நன்றாக படமாக்கப்பட்டுள்ளது.
 

தெரிந்த கதை. எனவே சுவாரஸ்யம் ஒன்றுமில்லை. இன்றைய வெற்றிகரமான திரைக்கதை எப்படி இருக்க வேண்டுமென்றால், கதைக்குள் கதையாக மூன்று கதை இருக்க வேண்டும். சிறிய வில்லன், பெரிய வில்லன் என இரண்டு வில்லன்கள் வேண்டும். களம் மாறிக்கொண்டே இருக்க வேண்டும். வசனம் சாதரணமாக கேட்டாலும் சட்டென புரியும் படி இருக்க வேண்டும். இது எல்லாமே ராவணனில் மிஸ்ஸிங். (வேறு வழியில்லை)

மணி ரத்தினம் சார்.. கதைக்கு பஞ்சமா என்ன? என்கிட்டே 10 நிமிடத்திற்கு ஒரு முறை திருப்பம் வர்ற மாதிரி சுமார் 100 கதை உள்ளன. ஒரு சான்ஸ் கொடுத்து பாருங்களேன்..

ராவணன் - இருக்கும் ஒரு தலை வலிக்கிறது.

Comments

SENTHILKUMARAN said…
படம் மொக்கை. DVD யில் பார்க்கலாம். தியேட்டர் போக தேவையில்லை
Thomas Ruban said…
//"16 நாள் அவன் உன்னை வச்சிக்கிட்டு இருந்தானே ... அப்போ உன்னை அவன் தொடலே" //

16 நாள்கள் இல்லை அது 14 நாள்கள் சார்.

நல்ல நடுநிலையான விமர்சனம்.

விக்கரம்,சூர்யா போன்றவர்கள் அர்ப்பணிப்பு உள்ள நல்ல நடிகர்கள்.

மணி ரத்தினம் சார் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.

பதிவுக்கு நன்றி.
//16 நாள்கள் இல்லை அது 14 நாள்கள் சார்.//

சந்தேகப்பட்டது சரியாப்போச்சு.. ராமாயணத்திலே 14 நாள் தானே வரும். மணி ரத்தினம் சார் 16 நாள்னு சொல்றறேன்னு அப்பவே நினைச்சேன். கரகரப்பா பேசுற வசனம், பின்னணி இசையிலே சரியாய் கேட்கலே.

பதிவை திருத்தி விட்டேன்.

நன்றி ரூபன் சார்.
//நல்ல நடுநிலையான விமர்சனம்.//

நன்றி ரூபன் சார்.
//விக்கரம்,சூர்யா போன்றவர்கள் அர்ப்பணிப்பு உள்ள நல்ல நடிகர்கள்.//

விக்ரம் நடிப்பு அபாரம்.
//மணி ரத்தினம் சார் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.//

உண்மை சார்.
//படம் மொக்கை.//

பழைய கதை நவீன காலத்திற்கும் பொருந்தும் என்ற சங்கதியை சொல்ல வந்த மணி ரத்தினம் சாரின் மெனக்கெடலுக்கு ஒரு ஷொட்டு.

கிட்டத்தட்ட சந்தனக் கடத்தல் வீரப்பன் வாழ்க்கையும் இது போலத்தான்.

பின்னூட்டத்திற்கு நன்றி திரு செந்தில் குமரன்.