மாண்பமை நீதியரசர் திரு கே.கண்ணன் தனது வலைப்பதிவுக்கு வைத்த முற்றுப்புள்ளி.

"மேலமை நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் சொத்து விவரங்களை வெளியிட வேண்டும், அதற்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தில் இருந்து எந்த விலக்கும் கிடையாது" என்று தீர்ப்பு வெளி வருவதற்கு முன்பே பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தின் மாண்பமை நீதியரசர் திரு கே. கண்ணன் அவர்கள் தனது சொத்து விவரங்களை வெளியிட்டு ஓர் உதாரண புருஷர் ஆனார். அப்படிப்பட்ட அவர் ஒரு நீதியரசர் என்பதோடு ஓர் சிறந்த வலை பதிவரும் ஆவார் என்ற சங்கதி அச்சமயத்தில் எல்லா செய்திதாள்களிலும் வெளிவந்தது.


அவர் தனது http://mnkkannan.blogspot.com/ என்ற வலைப்பதிவில் எழுதியுள்ள அத்தனை கருத்துகளும் சட்ட ஞான பெட்டகம்; பெரிய ஆய்வுக் களஞ்சியம். அவற்றில் சட்ட நுணுக்கம் அவரது விரல்களில் நர்த்தனம் ஆடும். ஒரு நீதியரசர் எப்படி இவ்வளவு வெளிப்படையாக ஓர் வலைபதிவராகவும் இருக்கிறார் நான் எண்ணிஎண்ணி வியந்திருக்கிறேன். எனவே நான் அவரது வலைப்பதிவை "பின்பற்றுபவனாக" என்னை பதிந்து கொண்டேன். இந்நிலையில் நான் நேற்று இரவு சுமார் 12 மணிக்கு எனது அலுவலக பணிகளை முடித்து விட்டு என் வலைப்பதிவு பக்கத்திற்கு வந்தேன். அப்போது நீதியரசர் ஏதோ ஓர் புதிய பதிவு போட்டிருப்பதை "Blogger - Dashboard"-இல் கண்டேன். உடனே அவரது வலைப்பதிவு பக்கத்திற்கு சென்றேன். அப்புதிய பதிவின் தலைப்பு "To Blog; or not to blog!" என்று இருந்தது. தலைப்பு சற்று பரபரப்பை ஏற்படுத்தியது. உடனே நானும் பரபரவென்று அவர் பதிந்த விவரத்தை வாசிக்க ஆரம்பித்தேன். அதன் முடிவில் "தான் வலைப்பதிவில் இருந்து விடை பெறுவதாக" கூறி அனைவருக்கும் "குட் பை" சொல்லி இருந்தார். நான் உடனே அதற்கு ஒரு பின்னூட்டம் எழுதி அனுப்பினேன். அது அவரது வலைப்பதிவில் அவரது அங்கீகாரத்திற்கு பிறகு பிரசுரம் ஆகியுள்ளது. அப்பின்னூட்டத்தை அப்படியே இங்கு கொடுத்துள்ளேன்.

மாண்பமை அய்யா அவர்களுக்கு,


வணக்கம்.

உங்கள் வலைப்பதிவுகளை தொடர்ந்து வாசித்து நிறைய நுணுக்கமான சட்ட ஞானமும், ஆங்கில இலக்கிய அறிவையும் பெற்று பயன் அடைந்து வருபவன் என்ற வகையில் தங்களின் இந்த 'பிரியா விடை' பதிவு என்னை சற்றே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

'சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவளாக இருக்க வேண்டும்' என்று சொல்லியதோடு மட்டுமல்லாமல், அதை செயலிலும் காட்டும் வண்ணம் உங்கள் சொத்து குறித்த தகவல்களை 'தானே முன்வந்து' வெளியிட்டு பூனைக்கு முதலில் மணியை கட்டி எங்கள் தமிழகத்தின் பெருமையை பார் அறிய செய்து விட்டீர்கள். சீசரின் மனைவி' கதை பற்றி நீங்கள் வலைப்பதிவில் சொன்னது எல்லா பத்திரிக்கைகளுக்கும் பெரிய செய்தியாக போய்விட்டது.

ஆனால் அதுவே தங்களுக்கு ஒரு நெருடலாக இருந்திருக்க வேண்டும் என்றே நான் நம்புகிறேன். வலைப்பதிவாளராக தொடர்ந்து எழுதலாமா, வேண்டாமா என்ற இரு வேறு சிந்தனைகள் உங்களுக்கு எழ எது காரணமாக இருக்கக்கூடும் என்று ஒரு வெளி ஆளாக நின்று பார்த்தால் ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது. அதாவது பத்திரிக்கைகள் உங்களை ஒரு வலைப்பதிவாளராக அடையாளம் காட்டி 'பிரபலம்' செய்தது உங்கள் நீதிப் பணிக்கு குந்தகம் ஆகி விடுமோ என்ற நீங்கள் கொண்டிருக்கும் ஓங்கிய நல்லெண்ணம்தான் (bonafide) என்று என்னால் கணிக்க முடிகிறது.

இப்படி நான் கணிப்பதற்கும் என்னிடம் ஒரு காரணம் உள்ளது. உங்கள் வலைப்பதிவை தொடர்ந்து வாசித்து வருபவன் என்பது எனது சக வழக்குரைஞர்களுக்கும், நண்பர்களுக்கும், நான் ஆசிரியராக உள்ள 'நமது சட்டப்பார்வை' திங்களிதழ் வாசகர்களுக்கும் நன்றாகத் தெரியும். அவர்கள் என்னை பார்க்கும் போது 'ஜஸ்டிஸ் இப்போ பிளாக்லே லேட்டஸ்டா என்ன எழுதி இருக்கார்' என்று கேட்பதுண்டு. இது அண்மை காலங்களில் அதிகமாகிவிட்டது. நான் "நீங்களே அவரோட பிளாக்-க்கு போய் வாசிக்கலாமே" என்று சொல்லி வருகிறேன். இப்படி நாளுக்கு நாள் அய்யா அவர்களின் எழுத்தின் மீதுள்ள மோகம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. 'பிரபலம்' கூடுகிறது.

ஆனால் இதுவே சிக்கல். நீதிபதி பதவி என்பது "நெருப்பாற்றின் குறுக்கே நூற் பாலம் காட்டி நடப்பதற்கு" ஒப்பாகும் என்பது அய்யா அவர்களுக்கும் நன்கு தெரியும். நீதிபதிகளின் சொத்து விவரத்தை கேட்குமளவு மக்கள் நேரடியாக பங்கு பெரும் மக்களாட்சி தற்போது நடந்து கொண்டு இருக்கிறது. 'நாட்டில் இவ்வளவு வழக்குகள் தேங்கி இருக்கும் போது வலையில் பதிக்க ஒரு நீதியரசருக்கு எப்படி நேரம் கிடைக்கிறது?' என்று கூட அடுத்து ஒருவர் கேள்வி கேட்கலாம். வீண் விமர்சனங்கள், வேண்டா விவாதங்கள் என நீண்டு அவை முடிவில் மன உளைச்சலை ஏற்படுத்திவிடக்கூடும். எனவேதான் அய்யா அவர்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளீர்கள் என்று நினைக்கிறன்.

தங்களின் இந்த முடிவை நான் எதிர்நோக்கியதுதான். எனவே எனக்கு வியப்பு ஏற்படவில்லை. சோகம் ஏற்பட்டது. ஆனாலும் அது ஆரம்பத்தில் சொன்னது போல 'சற்றே' தான். இந்த நேரத்திற்கு, சூழலுக்கு என்ன முடிவு எடுக்க வேண்டுமோ அதை மாண்பமை அய்யா அவர்கள் சரியாகவே எடுத்துள்ளீர்கள்.

எனினும் அய்யா அவர்கள் மீண்டும் சட்ட புத்தகம் எழுததொடங்கலாம், (நீதிமன்ற பணிக்கு யாதொரு குந்தகமும் வராமல் நேரம் ஒதுக்கி). ஆந்திர பிரதேச உயர் நீதிமன்றத்தின் மாண்பமை நீதியரசர் திருமிகு பி. எஸ். நாராயணா அவர்கள் இதுகாறும் 100 க்கும் அதிகமான சட்ட நூல்களை இயற்றி உள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

தங்களின் ஆழ்ந்த சட்ட ஞானம், அற்புத மொழி புலமை மேலும் ஓங்க, தாங்கள் தங்கள் இணையர் மற்றும் மக்களுடன் பல்லாண்டு ஆரோக்கியமாக வாழ இறைவனை வேண்டுகிறேன்.

வலைப்பதிவில் இருந்து பிரியா விடை தர மனம் ஒப்பவில்லை என்றாலும், 'மீண்டும் சந்திப்போம்' என்ற நினைவுடன் தலை வணங்கி உரிய பணிவடக்கத்துடன் விடை தருகின்றேன்.

நன்றி.
பி. ஆர். ஜெயராஜன், எம்.எல்., டி.எ.டி.ஆர்.,
வழக்குரைஞர்,
அரசு விருது பெற்ற சட்ட நூலாசிரியர், இசைவுத் தீர்ப்பாளர்,
உறுதி மொழிகளின் ஆணையர், ஆசிரியர் : நமது சட்டப்பார்வை.

Comments

malar said…
எனக்கு உங்கள் ஈமெயில் id அல்லது போன் நம்பர் தர முடயுமா ? சட்டம் குறித்த ஒரு சில சந்தேகங்கள் கேட்க வேண்டும் .