ஒரு வக்கீலின் கோடை விடுமுறை காலம் - ஏற்காட்டில் ஒரு அரிசியின் விலை 20 ரூபா.



நீதிமன்றம் கோடை விடுமுறைக்காக மூடப்பட்டது. (அப்படி திறந்தே இருந்தாலும் நாங்கள் நீதிமன்றம் செல்ல முடியாத அளவு ஏதேதோ கசப்பான சம்பவங்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து நடைபெற்று விட்டன. போனது போகட்டும் .... நடந்ததை மறந்து நீதிமன்றம் கிளம்பு தயாரானோம். சில நாட்களே சென்றோம். கோடை விடுமுறை வந்து விட்டது.)

வீட்டில் தாய்குலம் "இப்போதான் கோர்ட் லீவ் விட்டட்சு இல்லே.... எங்கேயாவது மலைப் பிரதேசமா கூட்டிக் கிட்டு போங்களேன்.... அடிக்கிற வெய்யிலுக்கு கொஞ்சம் ஜில்ல்ன்னுனாவது இருக்கும்" என்று மெதுவாக ஆரம்பித்தார்கள். நானும் பின் விளைவுகளை சற்றே யோசித்து "நமக்கேன் பொல்லாப்பு" என்று வேகமாக தலையை அசைத்து வைத்தேன். (நாமென்ன மலைப் பிரதேசம் என்ற உடன் இமய மலைக்கா கூட்டிக்கொண்டு போகப்போகிறோம்? இதோ எங்கள் ஊருக்கு பக்கமா இருக்கும் அழகிய "ஏற்காடு" -தான் எங்களுக்கு (சாரி எனக்கு) சிம்லா, குலு, மனாலி எல்லாம்.)

"சரி ஒரு செட் டிரஸ் எடுத்துக்கோ. இன்னிக்கு மதியம் போயிட்டு நாளைக்கு சாயங்காலம் வந்துடலாம் ... " என்று எனது புதிதாக வாங்கிய "ஹோண்டா பிளசர்" (ஹோண்டா சிட்டி கார் அல்ல) வண்டியை எடுத்தேன். தாய்குலம் உடனே புரிந்து கொண்டு விட்டது. (என்னே இருந்தாலும் ஒரு வக்கீல் சம்சாரம் இல்லே?)

உடனே, "என்னங்க எத்தினி தடவைதான் ஏற்காடு போறது... ஒரு கொடைக்கானல், ஊட்டி எல்லாம் கிடையாதா? " என்று இழுத்தார்கள். நான் சற்று கோபமாக முகத்தை வைத்து கொண்ட மாதிரி நடித்து "இப்போதைக்கு ஏற்காடுதான் முடியும். இல்லேன்னா இதுகோட கிடையாது" என்றவாறு லேசாக (அடித்தொண்டை கீச்சுக்குரலில்) ஒரு சவுண்ட் விட்டேன். நான் தோற்று போனதை உணர்ந்து என்னை மேலும் துன்புறுத்தாமல் தாய்குலம் ஏற்காடுக்கு கிளம்ப தயாரானது.

ஒருமாதிரியாக அந்தி மயங்கும் நேரத்தில் நானும், தாய்க்குலமும் ஸ்கூட்டரில் மெல்ல ஏற்காடு மலைப்பாதையில் பயணிக்க ஆரம்பித்தோம். குழந்தைங்க எல்லாம் அவங்க பாட்டி வீட்டுக்கு போய் இருக்காங்க. எங்கள் வீட்டில் இருந்து 20 கிலோ மீட்டர் தூரம் ஏற்காடு. மெல்ல போனாலும், சுமார் முக்கள் மணி நேரத்தில் சென்று விடலாம். 20 கொண்டை ஊசி வளைவுகள். இவற்றில் 6 வளைவுகளை கடந்து விட்டாலே காத்து ஜில் என்று வீச ஆரம்பித்து விடும். ஒரு வழியா ஏற்காடு வந்துட்டோம். கிளைமேட் நன்றாகவே இருந்ததில் தாய்குலத்திற்கு ரொம்பவே சந்தோசம்.

ஏற்கனவே ஒரு பழைய கிளைண்டுக்கு போன் போட்டு ஒரு ரூம் எடுத்து வைக்க சொல்லிட்டேன். அவரும் ரொம்ப அலைஞ்சு திருஞ்சுதான் ரூம் போட்டு இருப்பார் போல. அந்த நேரத்தில் வானம் சற்றே கறுத்து காணப்பட்டதை போல அவர் முகத்தில் சற்றே கடுப்பு காணப்பட்டது. சீசன் நேரம்.... ரூம் கிடைப்பது கொஞ்சம் கஷ்டம்தான், அதுவும் நாம் கொடுக்கிற 500 ரூபாயில்.பஸ் ஸ்டாண்ட்க்கு எதிர் புறத்தில் ஷோபா லாட்ஜில் தங்கி கொண்டோம். "ஷேர்வரோய்ஸ் ஓட்டலில்" சாப்பிட்டால் பர்ஸ் தாங்காது என்பதை உணர்ந்து, அதற்க்கு அருகில் உள்ள "மலர் ரெஸ்டாரெண்டில்" சாப்பிட்டு முடித்தோம்.அடுத்து அப்படியே ஒரு குட்டி வாக் "லேக்" (ஏரி) வரையில். நன்றாகவே இருந்தது. எனக்கென்னவோ எங்கள் ஏற்காடுதான் சுவிட்சர்லாந்து. ....

அடுத்த நாள் காலை குளித்து முடித்து, நேராக "ராஜராஜேஸ்வரி கோயில்" போய் சாமி கும்பிட்டோம். (ஸ்கூட்டர் என்பதால் நினைத்த இடத்திற்கு உடனே வண்டியை கிளப்பிக் கொண்டு போனோம்). அடுத்து தாய்குலத்திற்கு இன்னும் பக்தி அதிகமாகி "அப்படியே முருகன் கோயிலுக்கும் போயிட்டு வந்திரலங்க" என்றார். ஓட்டல் தமிழ் நாடு ஒட்டி போற ரோட்லே போன முருகன் கோயில் வரும். அங்கே போய் சாமி கும்பிட்டோம். காலை டிபன் ஓட்டல் தமிழ்நாடில் முடித்தோம். சுமார்தான்.அதற்கும் கீழே ஏற்காடு ஏரி உள்ளது. போட்டில் போக ஆசைப்பட்டு அங்கு போனோம்.



அங்கு போட் ஹவுஸ் வாசல் முன்னாடி ஒருவர் உட்கார்ந்து சுறுசுறுப்பா ஒரு தொழில் செய்து கிட்டு இருந்தார். அவரை சுற்றிலும் ஒரு சின்ன கூட்டம். என்னன்னு கிட்டத்திலே போய் பார்த்த.... "அரிசியிலே நம்ம பேர் எழுதி அதை கீ செய்ன்லே போட்டு தர்றார்... அதோட விலை 20 ரூபா. "நிறைய பேர் அந்த மாதிரி ஒரு அரிசியே 20 ரூபா கொடுத்து வாங்கி சந்தோசமா போய்கிட்டு இருந்தாங்க... உண்மையிலே ஒரு அரிசி 20 ரூபா கொடுத்து வாங்கற மாதிரி ஆயிடுமா......? அப்படியே கொஞ்சம் நினைச்சு பார்த்து பயந்து போய் பிரமிப்புலே நின்னுட்டேன். அந்த அரிசி கலைஞர் கிட்டே சில கேள்வி கேட்டேன்.. பதில் சொல்லலே... பெயர் கேட்டேன்... உடனே அவரோட தொழில் பெட்டியே கொஞ்சம் அந்தண்டே நகர்த்தி காண்பித்தார். அதிலே அவரோட பெயர் எழுதி இருந்தது.

உடனே அங்கிருந்த நம்ம சுற்றுலா நண்பர்கள் "அவருக்கு தமிழ் தெரியாது" என்றும்... இன்னும் சிலர் "அவராலே வாய் பேச முடியாது" என்றும் வக்காலத்து வாங்கினார்கள். உடனே தாய்குலம் "அட தேவுடா.. இப்படி நுணக்கமா ஒரு தொழில் செய்கிறார். பகவான் அவருக்கு பேச்சே கொடுக்கலையே?" என்று ரொம்ப பரிதாபமாக எங்கள் மூன்று குழந்தைகளின் (மூன்று தெய்வங்கள்) பெயர்களையும் அரிசியில் எழுதி வாங்கிக் கொண்டார்.. (ஏதோ ஏற்காடு எஸ்டேட் ஒன்னே எழுதி வாங்கினாப்போலே!). மறக்கமே அதவும் பேரம் எதுவும் பேசாமே அதுக்கான காசையும் என்னிடம் கேட்டு வாங்கி கொடுத்திட்டார். ஏதோ ஒரு நல்ல காரியம் பண்ண நிம்மதி என் திருமதியிடம் தெரிந்தது.

அங்கே ரொம்ப நேரம் ஆகி விட்டதால், போட்டிங் போகமே அடுத்த spot க்கு போனோம். அது ஏற்காடு பூங்கா. ஏதோ கொஞ்சம் பூச் செடி இருந்தது. அங்கே உட்கார்ந்து குழந்தைகள் ஊஞ்சல், சறுக்கு மரம் ஆகியவற்றில் விளையாடுவதை பார்த்து கொண்டிருந்தோம். பசி வயற்றை கிள்ள ஆரம்பித்த பிறகுதான் நேரம் போனது தெரியவில்லை என்பதை உணர்ந்தோம். மீண்டும் மலர் ஓட்டல். ஆனால் இப்போது அதற்க்கு சற்று மேல் செல்லும் பாதையில் உள்ள "செல்வம் ஓட்டலுக்கு" சென்றோம். சைவ மற்றும் அசைவ பிரியாணிக்கு பெயர் பெற்ற ஓட்டல் இது. தாய்குலம் சைவம். நான் "நான் வெஜிடரியன்". எனவே தாய்குலத்திற்கு காளான் பிரியாணி. எனக்கு முழு கோழி தொடை பிரியாணி. ஒரு கை பிடித்து விட்டு "ஏவ்" என்ற பொது மணி மதியம் 1.30. ஆனால் வெயில் இல்லை. குளிர் காற்று மிதமாக ஊருக்கு A/c போட்டதை போன்று இருந்தது.

அடுத்து ஒரு ஸ்வீட் பீடாவை வாயில் போட்டுக்கொண்டு அங்கிருந்து, "பகோடா பாயிண்ட்" போனோம். நன்றாக டெவலப் செய்துள்ளார்கள். நான் அசைவம் சாப்பிடுள்ளபடியால் அங்கிருந்த கோதண்டராமர் கோயில் படியில் கால் கூட வைக்க வில்லை. தாய்குலம் காளான் பிரியாணி என்பதால் ஒரு விசிட் அடித்து கும்பிட்டது. இப்படியாக நாள் மெல்ல நகர்ந்து சென்று கொண்டிருந்தது...

மாலை 4 மணி. ரூமுக்கு வந்து கொஞ்சம் refresh செய்து கொண்டு, ரூமை காலி செய்து விட்டோம். ஏரிக்கு அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் ஸ்கூட்டருக்கு பெட்ரோல் போட்டேன். அப்போது "என்னங்க கடைசியிலே போட்டிங் போகமே திரும்பி போறேமே.... இது உங்களுக்கே நல்ல இருக்கா?" என்று ஒரு நியாயமான கேள்வியை தாய்குலம் முன் வைத்தார்.

'சரி' என்று நாங்கள் மீண்டும் போட்டிங் ஹவுஸ் வாசலுக்கு போனோம். நான் அருகில் உள்ள ஒரு இடத்தில ஸ்கூட்டர் பார்கிங் செய்ய போக, தாய்குலம் போட்டிங் ஹவுஸ் வாசல் படியில் இறங்க தயாராக, அப்போதுதான் இது நடந்தது. தாய்குலம் வாசலில் இருந்தபடியே தீடிரென "என்னங்க ...... இங்கே பார்த்தீங்களா...?" என்று சற்றே உரத்த, பரபரப்பான குரலில் கத்தினார்.


நான் என்னமோ... ஏதோ.... என்று ஒருவித பதற்றத்துடன் அங்கே பார்த்தால், காலையில் பார்த்த அந்த அரிசி கலைஞர் அழகுத் தமிழில் தனது வாடிக்கையாளர்களுடன் பேசிக் கொண்டே அரிசியில் பெயர் எழுதி கொடுத்து கொண்டிருந்தார்."

"ஒரே நாளில் பேச்சை கொடுத்த அந்த தெய்வம்தான் எதுவோ?" என்ற மௌனமான சிந்தனையில் வீடு வந்து சேருகின்ற போது இரவு மணி 7.

Comments

Maximum India said…
இருபது ரூபாய் அரிசி, கலைஞர், அழகு தமிழ், ஒரு நாள் பேச்சைக் கொடுத்த தெய்வம் எல்லாமே அழகாக இருந்தது. நினைவுகளை எங்கெங்கோ கொண்டு சென்றது.
நன்றி அய்யா..

(நான் ஒரு நல்ல பிளாக்கர் ஆகி உள்ளேனா...?)
கொஞ்சம் பத்தி போட்டு எழுந்துங்க,படிக்க கஷ்டமாக இருக்கு.
ஏற்காடு போய் நிறைய வருடங்கள் ஆகிவிட்டது.
Romeoboy said…
பதிவுகள் நன்றாக இருக்கிறது . ஏன் நீங்கள் சட்டம் பற்றி எழுத கூடது ?? எனக்கு தெரிந்து எந்த பதிவாளரும் சட்டம் பற்றி நுணுக்கமாக எழுதியது கிடையாது.

ஒரு சம்பவம் வைத்து என்ன மாதுரி எல்லாம் தீர்ப்பு சொல்லலாம் , எந்த குற்றத்துக்கு எந்த தண்டனை இந்த மாதுரி எழுதும் பொது நிறைய நண்பர்கள் உங்கள் வலை பக்கத்தை வண்டு செல்வர்கள் .
//கொஞ்சம் பத்தி போட்டு எழுந்துங்க,படிக்க கஷ்டமாக இருக்கு.//

நன்றி திருமிகு வடுவூர் குமார் அய்யா அவர்களே....

பத்தி போட்டுதான் தட்டச்சு செய்தேன்... ஆனால் பதிவை பதிப்பு செய்கின்ற போது அவை தொடர்ச்சியாக ஒன்று சேர்ந்து விட்டன.

திருத்த முயற்சி செய்தேன். ஆனால் பலன் தரவில்லை. அந்த பதிவு பக்கமே அப்படியே செயலற்று நின்று விட்டது.... ஒருவேளை "வீடியோ" காட்சியும் சேர்ந்து இந்த பதிவு நீண்டு அமைந்து விட்டதாலோ என்னோவோ....?

ஒருமுறை ஏற்காட்டுக்கு வாங்களேன்..
//பதிவுகள் நன்றாக இருக்கிறது . ஏன் நீங்கள் சட்டம் பற்றி எழுத கூடது ?? எனக்கு தெரிந்து எந்த பதிவாளரும் சட்டம் பற்றி நுணுக்கமாக எழுதியது கிடையாது.//

தங்கள் ஆலோசனைக்கு நன்றி ரோமியோபாய்.

சட்டம் பற்றி நிறைய எழுதி உள்ளேன்...

45 சட்ட புத்தகங்களை இதுகாறும் எழுதி உள்ளேன். அவற்றில் "மனித உரிமைகளும் மனித உரிமைகள் பாதுகாப்பு சட்டமும்" என்ற புத்தகமும், "வங்கியியல் சட்டம்" என்ற புத்தகமும் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி துறையால் அடுத்தடுத்த ஆண்டுகளில் சிறந்த சட்டத் தமிழ் புத்தகமாக தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசும் பாராட்டும் வழங்கப்பட்டது.

"நமது சட்டப் பார்வை" என்ற மாத இதழுக்கு ஆசிரியராக இருந்து மாதந்தோறும் பல்வேறு சட்ட நுணக்கங்களை எழுதி வருகின்றேன்.

இந்தப் வலை பதிவிலும் சட்ட நுணுக்கம் பற்றி ஏராளமாக எழுதி உள்ளேன். குறிப்பாக கடந்த பதிவில் "உங்களுக்கு ஓட்டு போட விருப்பம் இல்லையா?" என்ற தலைப்பில் விதி 49O பற்றி எழுதி, அதை என் பத்திரிக்கையிலும் வெளியிட்டு அது குறித்து அரசு ஏற்படுத்தாத விழிப்புணர்வை தேர்தலுக்கு முன் வாக்காளர்களிடையே ஏற்படுத்தினேன்.

நேரம் கிடைத்தால் வலைப்பதிவிலும் நீங்கள் விரும்பியது போல் இன்னும் நிறைய செய்வேன்....

நன்றிகள்....
Thomasruban-Bangalore said…
பதிவுகள் நன்றாக இருக்கிறது.எங்கள் ஊரு (ஏற்காடு) பற்றி சிறபாக எழுதியதற்கு நன்றி .அப்புறம் ,அந்த கீ செயனில் உள்ளது தண்ணிர் தான். நல்ல பிளாக்கர் ஆகி உள்ளேர்கள்.வாழ்த்துக்கள் அந்த 20 ரூபா
கலைக்கு.
நன்றிகள்....
அப்பாடா....... இந்தப் பதிவை இப்போதான் பத்தி பத்தியாக பிரிக்க முடிந்தது..... இப்போ நல்ல இருக்கா ...?
priyamudanprabu said…
ஒரு உதவி தேவை
http://priyamudan-prabu.blogspot.com/2010/02/blog-post.html

இதை படித்து ஏதாவது உதவி செய்ய முடியுமா??
Nothing is real said…
Sir, My request, please write more on consumer rights, because we need to get more awareness over that.
And about Trai regulation on mobile, because a lot of people suffering by telecom companies by their irresponsible reply and activities.
Thanks you sir.