திருந்தும் நேரமிது!

அன்பு நண்பர்களே,

வணக்கம்.

கடந்த சில மாதங்களாக செய்தித்தாள் வாசித்து வரும் யாரும் இச்செய்திகளை வாசிக்கத் தவறி இருக்க மாட்டார்கள். இச்செய்தி மக்கள் சட்ட விழிப்புணர்வு பெற்றுள்ள ஏற்றமிகு நிலையை பறை சாற்றுகிறது. அது என்ன, அப்படிப்பட்ட செய்தி? அரசு அலுவலர்கள் லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக பிடிபட்ட செய்தி.

சென்ற மூன்று மாத காலத்தில் மட்டும் சுமார் நாற்பதுக்கும் மேற் பட்ட அரசு அலுவலர்கள் லஞ்சம் வாங்கும் போது பிடிபட்டுள்ளனர். குறிப்பாக கிராம நிருவாக அலுவலர்கள், காவல் துறையினர், சார் பதிவாளர் அலுவலகத்தினர், மின் வாரிய பணியாளர்கள் நிறைய பேர் சிக்கி உள்ளனர்.

இங்கு மற்றொன்றயும் கவனிக்க வேண்டும். இவர்களை பிடித்து கொடுத்தவர்கள் மெத்தப் படித்த நகரத்து மாந்தர்கள் அல்லர். இது அன்றாட வாழ்கையை ஓட்ட அல்லும் பகலும் பாடுபடும் சாதாரண கிராமத்து வாசிகள் எடுத்த அவதாரத்தின் விளைவு. சட்ட விழிப்புணர்வு பட்டி தொட்டி எல்லாம் பரவி வரும் உன்னதமான நிலையை இது காட்டுகிறது. சட்டப் பார்வையின் முப்பெரும் நோக்கங்களில் ஒன்று மெல்ல மெல்ல நிறைவேறியும் வருகிறது.

எனவே லஞ்சம் கொடுத்தால்தான் காரியம் நடக்கும் என்று இனி அரசு அலுவலர்கள் சொன்னால், ஒன்று அவர்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மாட்டிக் கொள்ள நேரிடும் அல்லது லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் சிக்கி சிறை செல்ல வேண்டி வரும். லஞ்சம் வாங்கும் அலுவலர்கள் தங்களை திருத்திக் கொள்ளும் நேரமிது.

என்றும் அன்புடன்,

பி. ஆர். ஜெ.

Comments

Maximum India said…
அன்புள்ள ஐயா

அருமையான செய்தி

உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.