சாலை விபத்து இடத்தில் செல்போனில் படம் பிடிப்பவர்களுக்கு அபராதம் !


செல்போன் வந்த பிறகு ஒரு நிகழ்வை உடனடியாக படம் பிடிப்பது என்பது மிக எளிதாகி விட்டது. குறிப்பாக அந்த நிகழ்வை அல்லது சம்பவத்தை பின்னணியாக அல்லது முன்னணியாக வைத்து செல்ஃபி (சுயபடம்) எடுப்பதும் வெகு சாதாரணமாகி விட்டது.

விபத்தில் அடிபட்டு, உரிய மருத்துவ சிகிச்சை காரணமாக தெய்வாதீனமாக உயிர் பிழைத்த  ஒருவர், "லாரி மோதி என்னை தூக்கி வீசிருச்சுங்க. என்னோட நெறைய எலும்பு நொறுங்கிப் போச்சுங்க... பயங்கரமான வலி ... இடது கை எலும்பு உடைஞ்சு, தோலக் கிழிச்சு வெளியே துருத்திக்கிட்டு  வந்திடுச்சு... ஆக்சிடென்ட பாத்த கொஞ்ச பேர் ஓடி வந்தாங்க. ஆனா அவங்கள்லே  யாருக்குமே, உடனே 108க்கு போன் செஞ்சு  ஆம்புலன்சே கூப்பிடனும்னு தோணலை. அதுக்கு பதிலா உடம்பு முழுக்க இரத்தமா கிடக்கிற என்னையும்,  வெளியே துருத்திக் கொண்டிருந்த கை எலும்பையும் தங்களோட செல்போன்லெ படம் பிடிக்கிறதிலேயே ஆர்வமா இருந்தாங்க.  எனக்கா நினைவு தப்பிக்கிட்டே வருது.... கண்ணு இருட்டுது.  கொஞ்ச நேரம் கழிச்சு யாரோ ஒரு புண்ணியவான் மட்டும், 'கண்ணு அசையுது... மூச்சு இருக்கு... ஆம்புலன்சுக்கு கூப்பிடுங்கோ...' என்று சொல்றதை மட்டும் என்னாலே கேட்க முடிஞ்சது,"  என்று வேதனையுடன் தனது விபத்து அனுபவத்தையும், அந்த இடத்தில் செல்போன் மக்கள் மனப்பாங்கையும்  விவரிக்கிறார்.

இந்த அன்பர் சொன்னது தவறு அல்லது பொய் என்றோ, அப்படி யாரும் செய்திருக்க வாய்ப்பில்லை என்றோ யாரும் மறுத்துக் கூறிட முடியாது.

மேலும் மின்வெளியில் (சைபர் ஸ்பேஸ்) இது தொடர்பாக ஒரு போட்டியே நிலவுகிறது. அதாவது அந்த சம்பவத்தை யார் முதலில் சமூக வலைதளத்தில் பதிவேற்றுவது... அதை எப்படி டிரெண்டிங் ஆக்குவது.. என்பதே அது. மற்றொருவரின் வேதனையை தன்னுடைய சாதனையாக்க நினைப்பது என்பது மிகக் கொடுமையானதன்றோ?

எனவே சாலை விபத்து இடத்தில் செல்போனில் படம் பிடிப்பவர்களுக்கு அபராதம் விதிக்க வகை செய்யும் சட்டம் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது. அது நமது நாட்டில் அல்ல, ஜெர்மனியில். அங்கு விபத்து அல்லது விபத்தில் காயம்பட்டவர்கள் அல்லது மரணமடைந்தவர்களை உரிய காரணமின்றி பொழுதுபோக்காக படம் பிடிப்பவர்களுக்கு  128 ஈரோ மற்றும் 50 சென்ட் அபராதம் விதிக்கப்படுகின்றது.

இது பற்றி ஜெர்மனி போக்குவரத்து காவலர்கள் கூறும்போது, "இவ்வாறு படம் பிடிப்பது வெட்கப்பட வேண்டிய விடயம். இது அவர்களுக்கு ஒரு விளையாட்டாகி விட்டது. விபத்தில் மரணமடைந்தவரை  படம் பிடிப்பது என்பது கசப்பான சங்கதி" என்கின்றனர். இவ்வாறு படம் பிடித்த வாகன ஓட்டிகள் சிலருக்கு அபராதம் பற்றி எச்சரிக்கை செய்யும்  ஓர் காணொளி இதோ..


நமது நாட்டிலும் இது போன்று அபராதம் விதிக்க வகை செய்து மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் காலம் வெகு தூரத்தில் இல்லை.

Comments

Popular Posts